(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: வேலூர்
திருக்கோயில்: அருள்மிகு பாலகுஜாம்பிகை சமேத ஸ்ரீவசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
சென்னை வேலூர் பயண மார்க்கத்தில், வேலூருக்கு சுமார் 22 கி.மீ முன்னர் அமைந்துள்ளது வேப்பூர் எனும் திருப்புகழ் தலம், பிரதான சாலையிலேயே 'வசிஷ்டேஸ்வரர் திருக்கோயில்' எனும் வழிகாட்டிப் பலகையினை அடையாளமாகக் கொள்ளலாம். (அடையார் ஆனந்த பவன் - வேப்பூர் கிளைக்கு மிக அருகிலேயே இப்பெயர்ப் பலகை வைக்கப் பெற்றுள்ளது). இவ்விடத்திலிருந்து சுமார் 1 - 1/2 கி.மீ ஊருக்குள் பயணித்தால் திருக்கோயிலை அடையலாம்.
நன்கு பரமாரிக்கப் பெற்றுள்ள நிலையில் பிரமாண்டமான இக்கற்கோயில் விளங்குகின்றது. ஷடாரண்ய ஷேத்திரங்களுள் (ஆறு முனிவர்கள் பூசித்த ஆறு புண்ணியக் காடுகளுள்) ஒன்றான இத்தலம் வசிஷ்ட முனிவரால் பூசிக்கப் பெற்றுள்ளது. மூலமூர்த்தியான வசிஷ்டேஸ்வரருக்கு நேரெதிரில் வணங்கிய நிலையிலுள்ள வஷிஷ்டரின் திருமேனியினைத் தரிசித்து மகிழலாம். பிரகாரச் சுற்றில் அருணகிரிப் பெருமானால் பாடல் பெற்றுள்ள திருப்புகழ் தெய்வம், ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களுடன், வள்ளி தெய்வயானை தேவியர் சமேதராக எழுந்தருளி இருக்கின்றான்.
அருணகிரியார் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார்,
(Google Maps: Sri Annai Balagujambikai Samedha Vasishteswarar Temple, Arcot, Tamil Nadu 632503, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தனதன தனதன தாந்த
தாத்தான தந்த ...... தனதான
குரைகடல் உலகினில் உயிர்கொடு போந்து
கூத்தாடுகின்ற... குடில்பேணிக்
குகையிட மருவிய கருவிழி மாந்தர்
கோட்டாலையின்றி... அவிரோதம்
வரஇரு வினையற உணர்வொடு !தூங்கு
வார்க்கே விளங்கும்... அநுபூதி
வடிவினை உனதழகிய திருவார்ந்த
வாக்கால் மொழிந்தருள வேணும்
திரள்வரை பகமிகு குருகுல வேந்து
தேர்ப்பாகன் மைந்தன்... மறையோடு
தெருமர நிசிசரர் மனைவியர் சேர்ந்து
தீப்பாய இந்த்ர...புரிவாழ
விரிதிரை எரியெழ முதலுற வாங்கு
வேற்கார கந்த... புவியேழும்
மிடிகெட விளைவன வளவயல் சூழ்ந்த
வேப்பூர் அமர்ந்த பெருமாளே.
(2019 பிப்ரவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment