Saturday, December 29, 2018

ஒடுக்கத்துச் செறிவாய் (ஒடுக்கத்தூர்):

(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: தொண்டை நாடு

மாவட்டம்: வேலூர்

திருக்கோயில்: அருள்மிகு அபிதகுஜாம்பாள் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் திருக்கோயில்:

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

வேலூர் மாவட்டத்தில், சென்னையிலிருந்து 164 கி.மீ பயணத் தொலைவிலும், வேலூரிலிருந்து 40 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது ஒடுக்கத்தூர். 1000 ஆண்டுகள் புராதனமான சிவாலயம், மறை முதல்வர் இத்தலத்தில் சப்தரிஷீஸ்வரர் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை அபிதகுஜாம்பாள். ஏகாந்தமான திருச்சூழலில் அமையப் பெற்றுள்ள சிறிய திருக்கோயில், வெளிப் பிரகாரத்தினை வலம் வருகையில் வலது புறத்தில் தனிச்சன்னிதியில் திருப்புகழ் தெய்வம் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களுடனும், இரு தேவியரோடும் கூடிய நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.

அருணகிரிநாதர் இத்தலத்திற்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், 

(Google Maps: Abithagujambal Sametha Saptharisheeswarar Temple, Odugathur, Tamil Nadu 632107).

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனத்தத் தத்தன தாத்த தத்தன
     தனத்தத் தத்தன தாத்த தத்தன
          தனத்தத் தத்தன தாத்த தத்தன ...... தனதான

வழக்குச் சொற்பயில் வால்சளப்படு
     மருத்துப் பச்சிலை தீற்று மட்டைகள்
          வளைத்துச் சித்தச சாத்திரக் களவதனாலே

மனத்துக் கற்களை நீற்றுருக்கிகள்
     சுகித்துத் தெட்டிகள் ஊரத் துதிப்பரை
          மருட்டிக் குத்திர வார்த்தை செப்பிகள்... மதியாதே

கழுத்தைக் கட்டிஅணாப்பி நட்பொடு
     சிரித்துப் பற்கறை காட்டி கைப்பொருள்
          கழற்றிக் கற்புகர் மாற்றுரைப்பது... கரிசாணி

கணக்கிட்டுப் பொழுதேற்றி வைத்தொரு
     பிணக்கிட்டுச் சிலுகாக்கு பட்டிகள்
          கலைக்குள் புக்கிடு பாழ்த்த புத்தியை...ஒழியேனோ

அழற்கண் தப்பறை மோட்டரக்கரை
     நெருக்கிப் பொட்டெழ நூக்கி அக்கணம்
          அழித்திட்டுக் குறவாட்டி பொன்தன கிரி தோய்வாய்

அகப்பட்டுத் தமிழ் தேர்த்த வித்தகர்
     சமத்துக் கட்டியில் ஆத்தம் உற்றவன்
          அலைக்குள் கண்செவி மேற்படுக்கையில் ..உறைமாயன்

உழைக்கண் பொற்கொடி மாக் குலக்குயில்
     விருப்புற்றுப் புணர்தோள் க்ருபைக்கடல்
          உறிக்குள் கைத்தல நீட்டும் அச்சுதன்... மருகோனே

உரைக்கச் செட்டியனாய்ப் பன் முத்தமிழ்
     மதித்திட்டுச் செறி நாற்கவிப்பணர்
          ஒடுக்கத்துச் செறிவாய்த் தலத்துறை... பெருமாளே.


(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment