(தொண்டை நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: தொண்டை நாடு
மாவட்டம்: வேலூர்
திருக்கோயில்: அருள்மிகு ஞானப் பூங்கோதை சமேத ஸ்ரீகாளத்தீஸ்தீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
திருப்பத்தூரிலிருந்து 10 கி.மீ பயணத் தொலைவிலும், திருவண்ணாமலையிலிருந்து 79 கி.மீ தூரத்திலும், வேலூரிலிருந்து 98 கி.மீ தூரத்திலும், சென்னையிலிருந்து 223 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது குறட்டி எனும் திருப்புகழ் தலம். ஐதூக முனிவரின் நியமம் தடைபடாதிருக்கும் பொருட்டு, திருக்காளத்தியில் எழுந்தருளியுள்ள காளத்தீஸ்வரப் பரம்பொருள் இத்தலத்திலும் பிரதோஷ காலத்தில் எழுந்தருளி வந்து அருள் புரிந்ததாகத் தலபுராணம் அறிவிக்கின்றது, அம்பிகை ஞானப் பூங்கோதையம்மை. ஏகாந்தமான சூழலில் அமையப்பெற்றுள்ள சற்றே விசாலமான திருக்கோயில்.
வெளிப்ரகாரத்தினை வலம் வருகையில், மூலக்கருவறைக்குப் பின்புறம்; வலதுபுறத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் மயில் மீதமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில், இருதேவியரும் உடனிருக்க எழுந்தருளி இருக்கின்றான்'. இத்தலத்திற்கென அருணகிரிப் பெருமான் 2 திருப்பாடல்களை அருளியுள்ளார்,
(Google Maps: Shiva Temple, State Highway 18, Koratti, Elavampatti, Tamil Nadu, India)
(Google Maps: Shiva Temple, State Highway 18, Koratti, Elavampatti, Tamil Nadu, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தானன தனத்த தான, தானன தனத்த தான
தானன தனத்த தான ...... தனதான
கூரிய கடைக்கணாலும் மேருநிகர்ஒப்பதான
கோடதனில் மெத்த வீறு... முலையாலும்
கோபஅதரத்தினாலும் மேவிடு விதத்துள்ஆல
கோல உதரத்தினாலும்... மொழியாலும்
சீரிய வளைக்கையாலும் மேகலை நெகிழ்ச்சியேசெய்
சீருறு நுசுப்பினாலும்... விலைமாதர்
சேறுதனில் நித்தமூழ்கி நாள்அவமிறைத்து மாயை
சேர்தரும் உளத்தனாகி... உழல்வேனோ
தாரணி தனக்குள் வீறியே சமர துட்டனான
ராவணன் மிகுத்த தானை... பொடியாகச்
சாடும்உவணப் பதாகை நீடுமுகிலொத்த மேனி
தாதுறை புயத்து மாயன்... மருகோனே
வாரணம்உரித்து மாதர் மேகலை வளைக்கை நாணம்
மாபலி முதற்கொள் நாதன்... முருகோனே
வாருறு தனத்தினார்கள் சேரும் மதிள்உப்பரீகை
வாகுள குறட்டி மேவு... பெருமாளே.
திருப்பாடல் 2:
தானன தனத்த தான தானன தனத்த தான
தானன தனத்த தான ...... தனதான
நீரிழிவு குட்டம்ஈளை வாதமொடு பித்தமூலம்
நீள்குளிர் வெதுப்பு வேறும்... உளநோய்கள்
நேருறு புழுக்கள்கூடு நான்முகன் எடுத்த வீடு
நீடிய விரத்தமூளை... தசைதோல்சீ
பாரிய நவத்துவார நாறும் முமலத்தில்ஆறு
பாய் பிணிஇயற்று பாவை... நரிநாய்பேய்
பாறோடு கழுக்கள்கூகை தாமிவை புசிப்பதான
பாழுடலெடுத்து வீணில்... உழல்வேனோ
நாரணி அறத்தின்நாரி ஆறுசமயத்திபூத
நாயகரிடத்து காமி... மகமாயி
நாடக நடத்திகோல நீலவருணத்திவேத
நாயகி உமைச்சி நீலி... திரிசூலி
வாரணி முலைச்சிஞான பூரணி கலைச்சி நாக
வாள் நுதலளித்த வீர... மயிலோனே
மாடமதில் முத்துமேடை கோபுர மணத்த சோலை
வாகுள குறட்டி மேவு பெருமாளே.
(2019 ஜூலை மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment