(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 51:
தானா தானா தானா தானா
தானா தானத் ...... தனதான
வாராய் பேதாய் கேளாய் நீதாய்
மானார் மோகத்துடனாசை
மாசூடாடாதூடே பாராய்
மாறா ஞானச் ...... சுடர்!தானின்
றாராயாதே ஆராய் பேறாம்
ஆனா வேதப் ...... பொருள்!காணென்
றாள்வாய் நீதானாதா பார்!மீ
தார் வேறாள்கைக்குரியார் தாம்
தோரா வானோர் சேனாதாரா
சூரா சாரற் ...... புனமாது
தோள்தோய் தோள்ஈராறா மாசூர்
தூளாய் வீழச் ...... சிறுதாரைச்
சீராவாலே வாளாலே!வே
லாலே சேதித்திடும் வீரா
சேயே வேளே பூவே கோவே
தேவே தேவப் ...... பெருமாளே
திருப்பாடல் 52:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அகல நீளம் யாதாலும் ஒருவராலும் ஆராய
அரிய மோனமே கோயிலெனமேவி
அசையவே க்ரியா பீடமிசை புகா மகாஞான
அறிவின் ஆதராமோத ...... மலர்தூவிச்
சகல வேதனாதீத சகல வாசகாதீத
சகல மாக்ரியாதீத ...... சிவரூப
சகல சாதகாதீத சகல வாசனாதீத
தனுவை நாடி மாபூசை ...... புரிவேனோ
விகடதார சூதான நிகள பாத போதூள
விரகராக போதார் அசுரர்கால
விபுத மாலிகாநீல முகபடாக மாயூர
விமல வ்யாபகா சீலக விநோத
ககன கூட பாடீர தவள சோபி தாளான
கவன பூதர் ஆரூட ...... சதகோடி
களப காம வீர்வீசு கரமுகார வேல்வீர
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 53:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அடைபடாது நாடோறும் இடைவிடாது போம்வாயு
அடைய மீளில் வீடாகும் ...... எனநாடி
அருள்பெறா அனாசார கரும யோகியாகாமல்
அவனி மீதில் ஓயாது ...... தடுமாறும்
உடலம் வேறு யான்வேறு கரணம் வேறு வேறாக
உதறி வாசகாதீத ...... அடியூடே
உருகி ஆரியாசார பரம யோகியாமாறுன்
உபய பாத ராசீகம் .....அருள்வாயே
வடபராரை மாமேரு கிரியெடா நடாமோது
மகர வாரியோரேழும் ...... அமுதாக
மகுட வாளரா நோவ மதிய நோவ வாரீச
வனிதை மேவு தோளாயிரமு நோவக்
கடையும் ஆதி கோபாலன் மருக சூலி காபாலி
புதல்வ கான வேல்வேடர் ...... கொடிகோவே
கனக லோக பூபால சகல லோக ஆதார
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 54:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அமல வாயுவோடாத கமல நாபி மேல்மூல
அமுத பானமேமூல ...... அனல்மூள
அசைவுறாது பேராத விதமு மேவி ஓவாது
அரிசதான சோபானம் .....அதனாலே
எமனை மோதி ஆகாச கமனமா மனோபாவம்
எளிது சால மேலாக ...... உரையாடும்
எனதி யானும் வேறாகி எவரும் யாதும் யானாகும்
இதய பாவனாதீதம் ...... அருள்வாயே
விமலை தோடி மீதோடு யமுனை போல ஓரேழு
விபுத மேகமே போல ...... உலகேழும்
விரிவு காணு மாமாயன் முடிய நீளுமா போல
வெகுவிதா முகாகாய ...... பதமோடிக்
கமல யோனி வீடான ககன கோள மீதோடு
கலப நீல மாயூர ...... இளையோனே
கருணை மேகமே தூய கருணை வாரியே ஈறில்
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 55:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அயிலின் வாளி வேல்வாளி அளவு கூரிதாய்ஈசர்
அமுதளாவும் ஆவேசம் ...... அதுபோல
அறவு நீளிதாய்மீள அகலிதாய வார்காதின்
அளவும்ஓடி நீடோதி ...... நிழலாறித்
துயில்கொளாத வானோரு மயல்கொளாத ஆவேத
துறவரான பேர்யாரு(ம்) ...... மடலேறத்
துணியுமாறுலா நீல நயன மாதராரோடு
துவளுவேனை ஈடேறு ...... நெறிபாராய்
பயிலு மேக நீகார சயில ராசன் வாழ்வான
பவதி யாமளா வாமை ...... அபிராமி
பரிபுரார பாதார சரணி சாமளாகார
பரம யோகினீ மோகி ...... மகமாயி
கயிலையாளர் ஓர்பாதி கடவுளாளி லோகாயி
கனதனாசலா பார ...... அமுதூறல்
கமழும்ஆரணா கீத கவிதை வாண வேல்வீர
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 56:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
இரதமான வாயூறல் பருகிடா விடாய்போக
இனிய போக வாராழி ...... அதில்மூழ்கி
இதயம் வேறு போகாமல் உருகி ஏகமாய் நாளும்
இனிய மாதர் தோள்கூடி ...... விளையாடுஞ்
சரச மோக மாவேத சரியை யோக்ரியா ஞான
சமுகமோ தராபூத ...... முதலான
சகளமோ சடாதார முகுளமோ நிராதார
தரணியோ நிராகார ...... வடிவேயோ
பரத நீல மாயூர வரத நாக கேயூர
பரம யோகி மாதேசி ...... மிகுஞான
பரமர் தேசிகா வேட பதிவ்ருதா சுசீபாத
பதும சேகரா வேலை ...... மறவாத
கரதலா விசாகா சகல கலாதரா போத
கமுக மூஷிகாரூட ...... மததாரைக்
கடவுள் தாதை சூழ்போதில் உலகமேழு சூழ்போது
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 57:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
குருதி தோலினால் மேவு குடிலில் ஏதமாம்ஆவி
குலைய ஏமனாலேவி ...... விடுகாலன்
கொடிய பாசம் ஓர்சூல படையினோடு கூசாத
கொடுமை நோய்கொடே கோலி ...... எதிராமுன்
பருதி சோமன் வானாடர் படியுளோர்கள் பாலாழி
பயமுறாமல் வேலேவும் ...... இளையோனே
பழுதுறாத பாவாணர் எழுதொணாத தோள்வீர
பரிவினோடு தாள்பாட ...... அருள்தாராய்
மருது நீறதாய்வீழ வலிசெய் மாயன் வேயூதி
மடுவில்ஆனை தான்மூலம் ...... எனஓடி
வருமுராரி கோபாலர் மகளிர் கேள்வன் மாதாவின்
வசனமோ மறாகேசன் ...... மருகோனே
கருதொணாத ஞானாதி எருதிலேறு காபாலி
கடிய பேயினோடாடி ...... கருதார்வெங்
கனலில் மூழ்கவே நாடி புதல்வ காரணாதீத
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 58:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
சுருதியூடு கேளாது சரியையாளர் காணாது
துரிய மீது சாராது ...... எவராலுந்
தொடரொணாது மாமாயை இடைபுகாது ஆனாத
சுகமகோத தீயாகி ...... ஒழியாது
பருதி காயில் வாடாது வடவை மூளில் வேகாது
பவனம் வீசில் வீழாது ...... சலியாது
பரவை சூழில்ஆழாது படைகள் மோதில் மாயாது
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
நிருதர் பூமி பாழாக மகர பூமி தீமூள
நிபிட தாருகா பூமி ...... குடியேற
நிகர பார நீகார சிகர மீது வேலேவு
நிருப வேத ஆசாரியனு மாலும்
கருதும் ஆகமாசாரி கனக கார் முகாசாரி
ககன சாரி பூசாரி ...... வெகுசாரி
கயிலை நாடகாசாரி சகல சாரி வாழ்வான
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 59:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
தொடஅடாது நேராக வடிவு காண வாராது
சுருதி கூறுவாராலும் ...... எதிர்கூறத்
துறையிலாததோர்ஆசை இறைவனாகி ஓரேக
துரியமாகி வேறாகி ...... அறிவாகி
நெடிய கால்கையோடாடும் உடலின் மேவி நீநானும்
எனவு நேர்மை நூல்கூறி ...... நிறைமாயம்
நிகரில் காலனார்ஏவ முகரியான தூதாளி
நினைவொடேகும் ஓர்நீதி ...... மொழியாதோ
அடல்கெடாத சூர்கோடி மடிய வாகை வேலேவி
அமர்செய் வீர ஈராறு ...... புயவேளே
அழகினோடு மானீனும் அரிவை காவலா வேதன்
அரியும் வாழ வானாளும் .....அதிரேகா
கடுவிடா களாரூப நடவிநோத தாடாளர்
கருதிடார்கள் தீமூள ...... முதல்நாடுங்
கடவுளேறு மீதேறி புதல்வ காரணாவேத
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 60:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
நிலவில் மாரன் ஏறூதை அசைய வீசும் ஆராம
நிழலில் மாட மாமாளிகையின் மேலாம்
நிலையில் வாச மாறாத அணையில் மாதராரோடு
நியதியாக வாயார ...... வயிறார
இலவிலூறு தேனூறல் பருகியார் அவாமீறி
இளகியேறு பாடீர ...... தனபாரம்
எனது மார்பிலேமூழ்க இறுக மேவி மால்!கூரு
கினும்உனீப சீர்பாத ...... மறவேனே
குலவியோம பாகீர திமிலை நாதர் மாதேவர்
குழைய மாலிகா நாகமொடு தாவிக்
குடில கோமளாகார சடில மோலி மீதேறு
குமர வேட மாதோடு ...... பிரியாது
கலவி கூரும் ஈராறு கனக வாகுவே சூரர்
கடக வாரி தூளாக ...... அமராடுங்
கட கபோல மால்யானை வனிதை பாக வேல்வீர
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 61:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
மனக பாட பாடீர தன தராதரா ரூப
மதன ராச ராசீப ...... சரகோப
வருண பாதகாலோக தருண சோபிதாகார
மகளிரோடு சீராடி ...... இதமாடிக்
குனகுவேனை நாணாது தனகுவேனை வீணான
குறையனேனை நாயேனை ...... வினையேனைக்
கொடியனேனை ஓதாத குதலையேனை நாடாத
குருடனேனை நீயாள்வதொருநாளே
அநக வாமனாகார முநிவராக மால்தேட
அரிய தாதை தானேவ ...... மதுரேசன்
அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற
அகில நாலும் ஆராயும் ......இளையோனே
கனக பாவனாகார பவள கோமளாகார
கலப சாமளாகார ...... மயிலேறுங்
கடவுளே க்ருபாகார கமல வேதனாகார
கருணை மேருவே தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 62:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
அதல சேடனாராட அகில மேரு மீதாட
அபின காளி தானாட ...... !அவளோடன்
றதிர வீசி வாதாடும் விடையிலேறுவார்ஆட
அருகு பூத வேதாளம் ..... அவையாட
மதுர வாணி தானாட மலரில் வேதனாராட
மருவு வானுளோராட ...... மதியாட
வனச மாமியாராட நெடிய மாமனாராட
மயிலுமாடி நீயாடி ...... வரவேணும்
கதைவிடாத தோள்வீமன் எதிர்கொள் வாளியால்நீடு
கருதலார்கள் மாசேனை ...... பொடியாகக்
கதறு காலி போய்மீள விஜயனேறு தேர்மீது
கனக வேத கோடூதி ...... அலைமோதும்
உததி மீதிலே சாயும் உலக மூடு சீர்பாத
உவணமூர்தி மாமாயன் ...... மருகோனே
உதய தாம மார்பான ப்ரபுடதேவ மாராஜன்
உளமுமாட வாழ்தேவர் ...... பெருமாளே
திருப்பாடல் 63:
தனன தான தானான தனன தான தானான
தனன தான தானான ...... தனதான
குருதி மூளை ஊனாறு மலமறாத தோல்மூடு
குடிசை கோழை மாசூறு ...... குழிநீர்மேற்
குமிழி போல நேராகி அழியு மாயை ஆதார
குறடு பாறு நாய்கூளி ...... பலகாகம்
பருகு காயமே பேணி அறிவிலாமலே வீணில்
படியின் மூழ்கியேபோது ...... தளிர்வீசிப்
பரவு நாடகாசார கிரியையாளர் காணாத
பரம ஞான வீடேது ...... புகல்வாயே
எரியின் மேனி நீறாடு பரமர் பாலில் வாழ்வான
இமய மாது மாசூலி ...... தருபாலா
எழுமையீறு காணாதர் முநிவரோடு வானாடர்
இசைகளோடு பாராட ...... மகிழ்வோனே
அரவினோடு மாமேரு மகர வாரி பூலோகம்
அதிர நாகமோரேழு ...... பொடியாக
அலகை பூத மாகாளி சமர பூமி மீதாட
அசுரர் மாள வேலேவு ...... பெருமாளே
திருப்பாடல் 64:
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன ...... தனதான
சரியும் அவல யாக்கையுள் எரியும் உரிய தீப்பசி
தணிகை பொருடிராப்பகல் ...... தடுமாறுஞ்
சகல சமய தார்க்கிகர் கலகம்ஒழிய நாக்கொடு
சரண கமலமேத்திய ...... !வழிபாடுற்
றரிய துரிய மேற்படு கருவி கரண நீத்ததொர்
அறிவின் வடிவமாய்ப் புளகிதமாகி
அவச கவச மூச்சற அமரும் அமலர் மேற்சில
ரதிபதி விடு பூக்கணை ...... படுமோதான்
விரியும் உதய பாஸ்கர கிரண மறைய ஆர்ப்பெழ
மிடையும் அலகில் தேர்ப்படையொடு சூழும்
விகட மகுட பார்த்திபர் அனைவருடனு நூற்றுவர்
விசையன் ஒருவனாற்பட ...... ஒருதூது
திரியுமொரு பராக்ரம அரியின் மருக பார்ப்பதி
சிறுவ தறுகண் வேட்டுவர் ...... கொடிகோவே
திமிர உததி கூப்பிட அவுணர் மடிய வேற்கொடு
சிகரி தகர வீக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 65:
தனன தனன தாத்தன, தனன தனன தாத்தன
தனன தனன தாத்தன ...... தனதான
மகளு மனைவி தாய்க்குலம் அணையும் அனைவர் வாக்கினில்
மறுகி புறமும் ஆர்த்திட ...... உடலூடே
மருவும் உயிரை நோக்கமும் எரியை உமிழ ஆர்ப்பவர்
உடனும் இயமன் மாட்டிட ...... அணுகாமுன்
உகமு முடிவுமாச் செலும் உதய மதியின் ஓட்டமும்
உளதுமிலதும் ஆச்சென ...... உறைவோரும்
உருகும் உரிமை காட்டிய முருகன்எனவு நாக்கொடு
உனது கழல்கள் போற்றிட ...... அருள்தாராய்
புகல வரிய போர்ச்சிலை விரக விசையனாற்புகழ்
உடைய திருதராட்டிர ...... புதல்வோர்தம்
புரவி கரிகள் தேர்ப்படை மடிய அரசை மாய்த்துயர்
புவியின் விதன மாற்றினர் ...... மருகோனே
மிகவு மலையு(ம்) மாக்கடல் முழுது மடிய வேற்றுரு
எனவு மருவி வேற்கொடு ...... பொருசூரன்
விரைசெய் நெடிய தோட்கன அடலும் உருவ வேற்படை
விசையம் உறவும் வீக்கிய ...... பெருமாளே
திருப்பாடல் 66:
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ...... தந்ததான
குடரு நீர்க்கொழு மலமும் ஈத்தொரு
குறைவிலாப்பல ...... என்பினாலுங்
கொடிய நோய்க்கிடம் எனவு நாட்டிய
குடிலில் ஏற்றுயிர் ...... என்றுகூறும்
வடிவிலாப் புலம் அதனை நாட்டிடு
மறலிஆட்பொர ...... வந்திடாமுன்
மதியு மூத்துனதடிகள் ஏத்திட
மறுவிலாப் பொருள் ...... தந்திடாதோ
கடிய காட்டகம் உறையும் வேட்டுவர்
கருதொணாக்கணி ...... வெங்கையாகிக்
கழைசெய் தோட்குற மயிலை வேட்டுயர்
களவினாற்புணர் ...... கந்தவேளே
முடுகி மேற்பொரும் அசுரர் ஆர்ப்பெழ
முடிய வேற்கொடு ...... வென்றவீரா
முடிவிலாத் திருவடிவை நோக்கிய
முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே
திருப்பாடல் 67:
தனன தாத்தன தனன தாத்தன
தனன தாத்தன ...... தந்ததான
பொதுவதாய்த் தனி முதலதாய்ப் பகல்
இரவு போய்ப் புகல்கின்ற வேதப்
பொருளதாய்ப் பொருள் முடிவதாய்ப் பெரு
வெளியதாய்ப் புதைவின்றி ஈறில்
கதியதாய்க் கருதரியதாய்ப் !பரு
கமுதமாய்ப் புலன் ...... ஐந்துமாயக்
கரண மாய்த்தெனை மரண மாற்றிய
கருணை வார்த்தை இருந்தவாறென்
உததி கூப்பிட நிருதர் ஆர்ப்பெழ
உலகு போற்றிட ...... வெங்கலாப
ஒருபராக்ரம துரகமோட்டிய
உரவ கோக்கிரி ...... நண்ப வானோர்
முதல்வ பார்ப்பதி புதல்வ கார்த்திகை
முலைகள் தேக்கிட ...... உண்ட வாழ்வே
முளரி பாற்கடல் சயில மேற்பயில்
முதிய மூர்த்திகள் ...... தம்பிரானே
திருப்பாடல் 68:
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
கவடு கோத்தெழும் உவரி மாத்திறல்
காய்வேல் பாடேனாடேன் வீடானதுகூட
கருணை கூர்ப்பன கழல்கள் ஆர்ப்பன
கால்மேல் வீழேன் வீழ்வார் கால்மீதினும்வீழேன்
தவிடினார்ப் பதம் எனினும் ஏற்பவர்
தாழாதீயேன் வாழாதே சாவதுசாலத்
தரமு மோக்ஷமும் இனியென் ஆக்கை!ச
தாஆமாறே நீதானாதா ...... புரிவாயே
சுவடு பார்த்தட வரு கராத்தலை
தூளாமாறே தானா நாராயணனே!நற்
றுணைவ பாற்கடல் வனிதை சேர்ப்ப!து
ழாய் மார்பா கோபாலா காவாய் .....எனவே!கைக்
குவடு கூப்பிட உவண மேற்கன
கோடூதா வானே போதாள்வான் ...... மருகோனே
குலிச பார்த்திபன் உலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே
திருப்பாடல் 69:
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
பருதியாய்ப்பனி மதியமாய்ப் படர்
பாராய் வானாய் நீர்தீ காலாய் ...... உடுசாலம்
பலவுமாய்ப்பல கிழமையாய்ப் !பதி
னால்ஆறேழா மேனாளாய்ஏழுலகாகிச்
சுருதியாய்ச் சுருதிகளின் !மேற்சுட
ராய் வேதாவாய் மாலாய் மேலே ...... சிவமான
தொலைவிலாப் பொருள் இருள் புகாக்கழல்
சூடா நாடா ஈடேறாதே ...... சுழல்வேனோ
திருதராட்டிரன் உதவு நூற்றுவர்
சேணாடாள்வான் நாளோர் மூவாறினில்வீழத்
திலக பார்த்தனும் உலகு காத்தருள்
சீராமாறே தேரூர் கோமான் ...... மருகோனே
குருதி வேற்கர நிருத ராக்ஷத
கோபா நீபா கூதாளா மா ...... மயில்வீரா
குலிச பார்த்திபன் உலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே
திருப்பாடல் 70:
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
முதலி யாக்கையும் இளமை நீத்தற
மூவா தாராகா ஆதாரா ...... எனஞாலம்
முறையிடாப்படு பறைகள் ஆர்த்தெழ
மூடா வீடூடேகேள் கோகோ ...... எனநோவ
மதலை கூப்பிட மனைவி கூப்பிட
மாதா மோதா வீழா வாழ்வே ...... எனமாய
மறலியூர்ப்புகு மரண யாத்திரை
வாரா வானாள் போநாம் நீமீளென வேணும்
புதலறாப்புன எயினர் கூக்குரல்
போகா நாடார் பாரா வாரார் ...... அசுரோடப்
பொருது தாக்கிய வய பராக்ரம
பூபாலா நீபாபாலா தாதையும் ஓதுங்
குதலை வாய்க்குரு பர சடாக்ஷர
கோடா ரூபாரூபா பாரீ ...... சதவேள்விக்
குலிச பார்த்திபன் உலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே
திருப்பாடல் 71:
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
வருக வீட்டெனும் விரகர் நேத்திரம்
வாளோ வேலோ சேலோ மானோ ...... எனுமாதர்
மனது போற்கருகின குவாற்குழல்
வானோ கானோ மாயா மாயோன் ...... வடிவேயோ
பருகு பாற்கடல் முருகு தேக்கிய
பாலோ தேனோ பாகோ வானோர் ......அமுதேயோ
பவள வாய்ப்பனி மொழியெனாக் கவி
பாடா நாயேன் ஈடேறாதே ...... ஒழிவேனோ
அருகு பார்ப்பதி உருகி நோக்கவொர்
ஆல்கீழ் வாழ்வார் வாழ்வே கோகோ ...... எனஏகி
அவுணர் கூப்பிட உததி தீப்பட
ஆகா சூரா போகாதே மீள் .....எனவோடிக்
குருகு பேர்க்கிரி உருவ ஓச்சிய
கூர்வேலாலே ஓர்வாளாலே ...... அமராடிக்
குலிச பார்த்திபன் உலகு காத்தருள்
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே
திருப்பாடல் 72:
தனன தாத்தன தனன தாத்தன
தானா தானா தானா தானா ...... தனதான
மறலி போற்சில நயன வேற்கொடு
மாயா தோயா வேயார் தோளார் ...... மறையோதும்
வகையு மார்க்கமும் மறமு மாய்த்திட
வாறாராயாதே போமாறா ...... திடதீர
விறலு மேற்பொலி அறிவும் ஆக்கமும்
வேறாய் நீரேறாதோர் மேடாய் ...... வினையூடே
விழுவினாற் களை எழுமதாற்பெரு
வீரா பாராய் வீணே மேவாதெனை ஆளாய்
மறலி சாய்த்தவர் இறை பராக்ரம
மால் காணாதே மாதோடே வாழ்பவர் சேயே
மறுவிலாத் திருவடிகள் நாள்தொறும்
வாயார் நாவால் மாறாதே ஓதினர் வாழ்வே
குறவர் காற்புன அரிவை தோட்கன
கோடார் மார்பா கூர்வேலாலே ...... அசுரேசர்
குலையமாக் கடல் அதனிலோட்டிய
கோவே தேவே வேளே வானோர் ...... பெருமாளே
திருப்பாடல் 73:
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
குருதியொழுகி அழுகும் அவல
குடிலை இனிது ...... புகலாலே
குலவும் இனிய கலவி மகளிர்
கொடிய கடிய ...... விழியாலே
கருதுமெனது விரக முழுது
கலக மறலி ...... அழியாமுன்
கனக மயிலின் அழகு பொழிய
கருணை மருவி ...... வரவேணும்
பரிதி சுழல மருவு கிரியை
பகிர எறிசெய் ...... பணிவேலா
பணில உததி அதனிலசுரர்
பதியை முடுக ...... வரும்வீரா
இரதி பதியை எரிசெய்தருளும்
இறைவர் குமர ...... முருகோனே
இலகு கமல முகமும் அழகும்
எழுத அரிய ...... பெருமாளே
திருப்பாடல் 74:
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
துயரம் அறுநின் வறுமை தொலையு(ம்)
மொழியும் அமிர்த ...... சுரபானம்
சுரபி குளிகை எளிது பெறுக
துவளும் எமது ...... பசிதீரத்
தயிரும் அமுதும் அமையும் இடுக
சவடி கடக ...... நெளிகாறை
தருக தகடொடுருக எனும்!இ
விரகு தவிர்வதொருநாளே
உயரு நிகரில் சிகரி மிடறும்
உடலும் அவுணர் ...... நெடுமார்பும்
உருவ மகர முகர திமிர
உததி உதரம் .....அதுபீற
அயரும் அமரர் சரண நிகள
முறிய எறியு(ம்) ...... மயில்வீரா
அறிவும் உரமும் அறமு நிறமும்
அழகுமுடைய ...... பெருமாளே
திருப்பாடல் 75:
தனன தனன தனன தனன
தனன தனன ...... தனதான
பணிகள் பணமும் அணிகொள் துகில்கள்
பழைய அடிமையொடு மாதும்
பகரிலொருவர் வருக அரிய
பயணம் அதனில் உயிர்போகக்
குணமும் மனமும் உடைய கிளைஞர்
குறுகி விறகில் ......உடல்போடாக்
கொடுமை இடுமுன் அடிமை அடிகள்
குளிர மொழிவதருள்வாயே
இணையில் அருணை பழநி கிழவ
இளைய இறைவ ...... முருகோனே
எயினர் வயினின் முயலு மயிலை
இருகை தொழுது ...... புணர்மார்பா
அணியொடமரர் பணிய அசுரர்
அடைய மடிய ...... விடும்வேலா
அறிவும் உரமும் அறமு நிறமும்
அழகுமுடைய ...... பெருமாளே
திருப்பாடல் 76:
தந்த தனன தந்த தனன
தந்த தனன ...... தனதான
மைந்தர் இனிய தந்தை மனைவி
மண்டி அலறி ...... மதிமாய
வஞ்ச விழிகள் விஞ்சு மறலி
வன்கை அதனில் ......உறுபாசந்
தந்து வளைய புந்தியறிவு
தங்கை குலைய ...... உயிர்போமுன்
தம்பம் உனது செம்பொனடிகள்
தந்து கருணை ...... புரிவாயே
மந்தி குதிகொள் அந்தண் வரையில்
மங்கை மருவு ...... மணவாளா
மண்டும் அசுரர் தண்டமுடைய
அண்டர் பரவ ...... மலைவோனே
இந்து நுதலும் அந்த முகமும்
என்றும் இனிய ...... மடவார்தம்
இன்பம் விளைய அன்பின்அணையும்
என்றும் இளைய ...... பெருமாளே
திருப்பாடல் 77:
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
ஒழுகூன் இரத்தமொடு தோலுடுத்தி
உயர்கால் கரத்தின் ......உருவாகி
ஒருதாய் வயிற்றின் இடையே உதித்து
உழல்மாய மிக்கு ...... வருகாயம்
பழசாய் இரைப்பொடிளையா விருத்த
பரிதாபமுற்று ...... மடியாமுன்
பரிவால் உளத்தில் முருகா எனச்சொல்
பகர் வாழ்வெனக்கும் ...... அருள்வாயே
எழுவானகத்தில் இருநாலு திக்கில்
இமையோர் தமக்கும் ......அரசாகி
எதிரேறு மத்த மதவாரணத்தில்
இனிதேறு கொற்றமுடன் வாழுஞ்
செழுமா மணிப்பொனகர்பாழ் படுத்து
செழுதீ விளைத்து ...... மதிள்கோலித்
திடமோடரக்கர் கொடுபோயடைத்த
சிறைமீள விட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 78:
தனனா தனத்த தனனா தனத்த
தனனா தனத்த ...... தனதான
கருவாய் வயிற்றில் உருவாய் உதித்து
முருகாய் மனக் கவலையோடே
கலைநூல் பிதற்றி நடுவே கறுத்த
தலைபோய் வெளுத்து ...... மரியாதே
இருபோது மற்றை ஒருபோதும் இட்ட
கனல்மூழ்கி மிக்க ...... புனல்மூழ்கி
இறவாத சுத்த மறையோர் துதிக்கும்
இயல் போதகத்தை ...... மொழிவாயே
அரும்ஆதபத்த அமரா பதிக்கு
வழிமூடி விட்ட ...... தனைமீள
அயிராவதத்து விழிஆயிரத்தன்
உடனே பிடித்து ...... முடியாதே
திருவான கற்ப தருநாடழித்து
விபுதேசர் சுற்றம் .....அவைகோலித்
திடமோடரக்கர் கொடு போயடைத்த
சிறைமீள விட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 79:
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் ...... தனதான
புரக்க வந்தநங் குறக்கரும்பை மென்
புனத்தில் அன்று சென்றுறவாடிப்
புடைத்தலங்க்ருதம் படைத்தெழுந்த திண்
புதுக்குரும்பை மென் ...... புயமீதே
செருக்க நெஞ்சகங் களிக்க அன்புடன்
திளைக்கு நின்திறம் ...... !புகலாதிந்
த்ரியக் கடஞ் சுமந்தலக்கண் மண்டிடுந்
தியக்கம் என்றொழிந்திடுவேனோ
குரக்கினங் கொணர்ந்தரக்கர் தண்டமுங்
குவட்டிலங்கையுந் ...... துகளாகக்
கொதித்த கொண்டலுந் த்ரியக்ஷருங் கடங்
கொதித்து மண்டுவெம் ...... பகையோடத்
துரக்கும் விம்ப கிம்புரி ப்ரசண்ட!சிந்
துரத்தனும் பிறந்திறவாத
சுகத்தில் அன்பருஞ் செகத்ரயங்களுந்
துதிக்கும் உம்பர்தம் ...... பெருமாளே
திருப்பாடல் 80:
தனத்த தந்தனம் தனத்த தந்தனம்
தனத்த தந்தனம் ...... தனதான
பெருக்க நெஞ்சு வந்துருக்கும் அன்பிலன்
ப்ரபுத்தனங்கள் பண்பெணு நாணும்
பிழைக்க ஒன்றிலன் சிலைக்கை மிண்டர்!குன்
றமைத்த பெண்தனந் ...... தனையாரத்
திருக்கை கொண்டணைந்திடச் செல்கின்றநின்
திறத்தை அன்புடன் ...... தெளியாதே
சினத்தில் மண்டி மிண்டுரைக்கும் வம்பனென்
திருக்கும் என்றொழிந்திடுவேனோ
தருக்கி அன்று சென்றருட்கண் ஒன்றரன்
தரித்த குன்ற நின்றடியோடுந்
தடக்கை கொண்டு வந்தெடுத்தவன் சிரந்
தறித்த கண்டன் எண்திசையோருஞ்
சுருக்கமின்றி நின்றருக்கன் இந்திரன்
துணைச் செய்கின்ற நின் ...... பதமேவும்
சுகத்தில் அன்பருஞ் செகத்ரயங்களுந்
துதிக்கும் உம்பர்தம் ...... பெருமாளே
திருப்பாடல் 81:
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
இருந்த வீடுங் கொஞ்சிய சிறுவரும் ...... உறுகேளும்
இசைந்த வூரும் பெண்டிரும் இளமையும் ...... வளமேவும்
விரிந்த நாடுங் குன்றமு நிலையென ...... மகிழாதே
விளங்கு தீபங் கொண்டுனை வழிபட ...... அருள்வாயே
குருந்திலேறுங் கொண்டலின் வடிவினன் ...... மருகோனே
குரங்குலாவுங் குன்றுறை குறமகள் ...... மணவாளா
திருந்த வேதந் தண்டமிழ் தெரிதரு ...... புலவோனே
சிவந்த காலுந் தண்டையும் அழகிய ...... பெருமாளே
திருப்பாடல் 82:
தனந்த தானந் தந்தன தனதன ...... தனதான
கலந்த மாதுங் கண்களி உறவரு ...... புதல்வோருங்
கலங்கிடார் என்றின்பமுறுலகிடை ...... கலிமேவி
உலந்த காயங் கொண்டுளம் உறுதுயருடன் மேவா
உகந்த பாதந் தந்துனை உரைசெய ...... அருள்வாயே
மலர்ந்த பூவின் மங்கையை மருவரி ...... மருகோனே
மறஞ்செய்வார் தம் வஞ்சியை மருவிய ...... மணவாளா
சிலம்பினோடுங் கிண்கிணி திசைதொறும் ...... ஒலிவீசச்
சிவந்த காலுந் தண்டையும் அழகிய ...... பெருமாளே
திருப்பாடல் 83:
தனந்த தானந் தனதன தானன ...... தனதான
இசைந்த ஏறுங் கரியுரி போர்வையும் ...... எழில்நீறும்
இலங்கு நூலும் புலியதள் ஆடையு ...... மழுமானும்
அசைந்த தோடுஞ் சிரமணி மாலையு ...... முடிமீதே
அணிந்த ஈசன் பரிவுடன் மேவிய ...... குருநாதா
உசந்த சூரன் கிளையுடன் வேரற ...... முனிவோனே
உகந்த பாசங் கயிறொடு தூதுவர் ...... நலியாதே
அசந்த போதென் துயர்கெட மாமயில் ...... வரவேணும்
அமைந்த வேலும் புயமிசை மேவிய ...... பெருமாளே
திருப்பாடல் 84:
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
திரிபுரம் அதனை ஒருநொடி அதனில்
எரி செய்தருளிய ...... சிவன்வாழ்வே
சினமுடை அசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி ...... விடுவோனே
பருவரை அதனை உருவிட எறியும்
அறுமுகம் உடைய ...... வடிவேலா
பசலையொடணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி ...... தொடலாமோ
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு ...... வருவோனே
கனதனமுடைய குறவர் தமகளை
கருணையொடணையு(ம்) ...... மணிமார்பா
அரவணை துயிலும் அரிதிரு மருக
அவனியு முழுதும் ......உடையோனே
அடியவர் வினையும் அமரர்கள் துயரும்
அறஅருளுதவு ...... பெருமாளே
திருப்பாடல் 85:
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
புழுககில் களபம் ஒளிவிடு தரள
மணிபல செறிய ...... வடமேருப்
பொருமிரு கலச முலையினை அரிவை
புனையிடு பொதுவின் ...... மடமாதர்
அழகிய குவளை விழியினும் அமுத
மொழியினும் அவச ...... அநுராக
அமளியின் மிசையில் அவர்வசம் உருகி
அழியு நினடிமை ...... தனையாள்வாய்
குழலிசை அதுகொடறவெருள் சுரபி
குறுநிரை அருளி ...... அலைமோதுங்
குரைசெறி உததி வரைதனில் விறுசு
குமுகுமு குமென ...... உலகோடு
முழுமதி சுழல வரைநெறு நெறென
முடுகிய முகிலின் ...... மருகோனே
மொகுமொகு மொகென ஞிமிறிசை பரவு
முளரியின் முதல்வர் ...... பெருமாளே
திருப்பாடல் 86:
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தந்ததான
முழுமதி அனைய முகமிரு குழையில்
முனிவிழி முனைகள் ...... கொண்டுமூவா
முதல்அறிவதனை வளைபவர் கலவி
முழுகிய வினையை ...... மொண்டுநாயேன்
வழிவழி அடிமை எனும்அறிவகல
மனமுறு துயர்கள் ...... வெந்துவாட
மதிதரும் அதிக கதி பெறும்அடிகள்
மகிழ்வொடு புகழும் ...... அன்புதாராய்
எழுதிட அரிய எழில்மற மகளின்
இருதன கிரிகள் ...... தங்குமார்பா
எதிர்பொரும் அசுரர் பொடிபட முடுகி
இமையவர் சிறையை ...... அன்றுமீள்வாய்
அழகிய குமர எழுதல மகிழ
அறுவர்கள் முலையை ...... உண்டவாழ்வே
அமருலகிறைவ உமைதரு புதல்வ
அரியர பிரமர் ...... தம்பிரானே
திருப்பாடல் 87:
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் ...... தனதான
கொடியன பிணிகொடு விக்கிக் கக்கிக்
கூன் போந்தசடாகுங்
குடிலுற வருமொரு மிக்கச் சித்ரக்
கோண் பூண்டமையாதே
பொடிவன பரசமயத்துத் தப்பிப்
போந்தேன் ...... தலைமேலே
பொருளது பெறஅடி நட்புச் சற்றுப்
பூண்டாண்டருள்வாயே
துடிபட அலகைகள் கைக்கொட்டிட்டுச்
சூழ்ந்தாங்குடன் ஆடத்
தொகுதொகு திகுதிகு தொக்குத் திக்குத்
தோந்தாந் ...... தரிதாளம்
படிதரு பதிவ்ரதை ஒத்தச் சுத்தப்
பாழ்ங்கான் ...... தனிலாடும்
பழயவர் குமர குறத் தத்தைக்குப்
பாங்காம் ...... பெருமாளே
திருப்பாடல் 88:
தனதன தனதன தத்தத் தத்தத்
தாந்தாந் ...... தனதான
சுடரொளி கதிரவன் உற்றுப் பற்றிச்
சூழ்ந்தோங்கிடு பாரில்
துயரிரு வினைபல சுற்றப் பட்டுச்
சோர்ந்தோய்ந்திட நாறுங்
கடுகென எடுமென் உடற் பற்றற்றுக்
கான் போந்துறவோருங்
கனலிடை விதியிடுதத் துக்கத்தைக்
காய்ந்தாண்டருளாயோ
தடமுடை வயிரவர் தற்கித் தொக்கத்
தாந் தோய்ந்திரு பாலும்
தமருக ஒலிசவுதத்தில் தத்தத்
தாழ்ந்தூர்ந்திட நாகம்
படிநெடியவர் கர மொத்தக் கெத்துப்
பாய்ந்தாய்ந்துயர் கானம்
பயில்பவர் புதல்வ குறத் தத்தைக்குப்
பாங்காம் ...... பெருமாளே
திருப்பாடல் 89:
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ...... தனதான
குடமென ஒத்த கொங்கை குயில்மொழி ஒத்த இன்சொல்
குறமகள் வைத்த நண்பை ...... நினைவோனே
வடவரை உற்றுறைந்த மகதெவர் பெற்ற கந்த
மதசல முற்ற தந்தி ...... இளையோனே
இடமுடன் வைத்த சிந்தை இனைவற முத்தி தந்து
இசையறிவித்து வந்து ...... எனையாள்வாய்
தடவரை வெற்பினின்று சரவண முற்றெழுந்து
சமர்கள வெற்றி கொண்ட ...... பெருமாளே
திருப்பாடல் 90:
தனதன தத்த தந்த தனதன தத்த தந்த
தனதன தத்த தந்த ...... தனதான
மடவியர் எச்சிலுண்டு கையில் முதலைக் களைந்து
மறுமை தனிற் சுழன்று ...... வடிவான
சடமிக வற்றி நொந்து கலவிசெயத் துணிந்து
தளர்வுறுதற்கு முந்தி ...... எனையாள்வாய்
படஅரவிற் சிறந்த இடமிதெனத் துயின்ற
பசுமுகிலுக்கு கந்த ...... மருகோனே
குடமுனி கற்க அன்று தமிழ்செவியிற் பகர்ந்த
குமர குறத்தி நம்பு ...... பெருமாளே
திருப்பாடல் 91:
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
கருமயலேறிப் பெருகிய காமக்
கடலினில் மூழ்கித் ...... துயராலே
கயல்விழியாரைப் பொருளென நாடிக்
கழியுஅநாளிற் ...... கடைநாளே
எருமையிலேறித் தருமனும் !வாவுற்
றிறுகிய பாசக் ...... கயிறாலே
எனைவளையாமல் துணை!நினைவேனுக்
கியலிசை பாடத் ...... தரவேணும்
திருமயில் சேர்பொற் புயனென வாழத்
தெரியலன்ஓடப் ...... பொரும்வீரா
செகதல மீதிற் பகர்தமிழ் பாடற்
செழுமறை சேர்பொற் ...... புயநாதா
பொருமயிலேறிக் கிரி பொடியாகப்
புவியது சூழத் ...... திரிவோனே
புனமகளாரைக் கனதன மார்பிற்
புணரும் விநோதப் ...... பெருமாளே
திருப்பாடல் 92:
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
குடலிடை தீதுற்றிடையிடை பீறிக்
குலவிய தோலத்தியினூடே
குருதியிலே சுக்கிலமது கூடிக்
குவலயம் வானப் ...... பொருகாலாய்
உடலெழு மாயப் பிறவியில்!ஆவித்
துறுபிணி நோயுற்றுழலாதே
உரைஅடியேனுக்கொளி மிகு !நீபத்
துனதிரு தாளைத் ...... தரவேணும்
கடலிடை சூரப் படைபொடியாகக்
கருதலர்ஓடப் ...... பொரும்வேலா
கதிர்விடு வேலைக் கதிரினில் மேவிக்
கலைபல தேர்முத்தமிழ் நாடா
சடையினர் நாடப் படர்மலைஓடித்
தனிவிளையாடித் ...... திரிவோனே
தனிமட மானைப் பரிவுடனாரத்
தழுவும் விநோதப் ...... பெருமாளே
திருப்பாடல் 93:
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
கருதியே மெத்த விடமெலாம் வைத்த
கலகவாள் ஒத்த ...... விழிமானார்
கடின போகத்த புளகவார்உற்ற
களபமார் செப்பு ...... முலைமீதே
உருகியான் மெத்த அவசமேவுற்ற
உரைகளே செப்பி ...... அழியாதுன்
உபய பாதத்தின் அருளையே செப்பு
முதய ஞானத்தை ...... அருள்வாயே
பருவரால்உற்று மடுவின் மீதுற்ற
பகடுவாய் விட்ட ...... மொழியாலே
பரிவினோடுற்ற திகிரியே விட்ட
பழய மாயற்கு ...... மருகோனே
முருகுலாவுற்ற குழலி வேடிச்சி
முலையின் மேவுற்ற ...... க்ருபைவேளே
முருகனே பத்தர் அருகனே வெற்பு
முரியவேல் தொட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 94:
தனதனா தத்த தனதனா தத்த
தனதனா தத்த ...... தனதான
கொலையிலே மெத்த விரகிலே கற்ற
குவளையேர் மைக்கண் ...... விழிமானார்
குழையிலே எய்த்த நடையிலே நெய்த்த
குழலிலே பற்கள் ...... தனிலேமா
முலையிலே அற்ப இடையிலே பத்ம
முகநிலா வட்டம் .....அதின்மீதே
முதுகிலே பொட்டு நுதலிலே தத்தை
மொழியிலே சித்தம் ...... விடலாமோ
கலையனே உக்ர முருகனே துட்டர்
கலகனே மெத்த ...... இளையோனே
கனகனே பித்தர் புதல்வனே மெச்சு
கடவுளே பச்சை ...... மயிலோனே
உலகனே முத்தி முதல்வனே சித்தி
உடையனே விஷ்ணு ...... மருகோனே
ஒருவனே செச்சை மருவுநேர் சித்ர
உருவனே மிக்க ...... பெருமாளே
திருப்பாடல் 95:
தனதனனந் தான தனதனனந் தான
தனதனனந் தான ...... தனதான
அகிலநறுஞ் சேறு ம்ருகமதமுந் தோயும்
அசலம் இரண்டாலும் ...... இடை!போமென்
றடியில் விழுந்தாடு பரிபுரசெஞ் !சீர
தபயமிடுங் கீதம் ...... அமையாதே
நகமிசை சென்றாடி வனசரர் சந்தான
நவையற நின்றேனல் ...... விளைவாள் தன்
லளிதவிர் சிங்கார தனமுறு சிந்தூர
நம சரண்என்றோத ...... அருள்வாயே
பகல்இரவுண்டான இருவரும் வண்டாடு
பரிமள பங்கேருகனு மாலும்
படிகநெடும் பார கடதட கெம்பீர
பணைமுக செம்பால ...... மணிமாலை
முகபட சிந்தூர கரியில்வருந் தேவு
முடியஅரன் தேவி ...... உடனாட
முழுதுலகுந் தாவி எழுகடல் மண்டூழி
முடிவினும் அஞ்சாத ...... பெருமாளே
திருப்பாடல் 96:
தனதனனந் தானம் தனதனனந் தானம்
தனதனனந் தானம் ...... தனதான
கலகமதன் காதுங் கனமலர் அம்பாலுங்
களிமது வண்டூதும் ...... பயிலாலும்
கடலலை அங்காலுங் கனஇரை ஒன்றாலும்
கலைமதியங் காயும் ...... வெயிலாலும்
இலகிய சங்காளும் இனியவள் அன்பீனும்
எனதரு மின்தான் இன்றிளையாதே
இருள்கெடமுன் தானின்றின மணி !செந்தார்தங்
கிருதனமுந் தோள் கொண்டணைவாயே
உலகை வளைந்தோடுங் கதிரவன்விண் பால்!நின்
றுனதபயங் காவென்றுனை நாட
உரவியவெஞ் சூரன் சிரமுடன்வன் தோளும்
உருவியுடன் போதும் ...... ஒளிவேலா
அலகையுடன் பூதம் பல கவிதம் பாடும்
அடைவுடனின்றாடும் ...... பெரியோர்முன்
அறமும் அறந்தோயும் அறிவு !நிரம்போதென்
றழகுடன் அன்றோதும் ...... பெருமாளே
திருப்பாடல் 97:
தனதனனந் தானந் தனதனனந் தானந்
தனதனனந் தானந் ...... தனதான
குருதிசலந் தோலுங் குடலுடன் என்பாலுங்
குலவியெழுங் கோலந் ...... தனில்மாயக்
கொடுமையுடன் கோபங் கடுவிரகஞ் சேருங்
குணவுயிர் கொண்டேகும் ...... படிகாலன்
கருதிநெடும் பாசங் கொடுவர நின்றாயுங்
கதற மறந்தேன் என்றகலாமுன்
கமல மலர்ந்தேறுங் குகனெனவும் போதுன்
கருணை மகிழ்ந்தோதுங் ...... கலைதாராய்
நிருதர்தளஞ் சூழும் பெரியநெடுஞ் சூரன்
நினைவும் அழிந்தோடும் ...... படிவேலால்
நிகரில்அதம் பார்ஒன்றிமையவர் நெஞ்சால்நின்
நிலைதொழ நின்றேமுன் ...... பொருவீரா
பருதியுடன் சோமன் படியை இடந்தானும்
பரவ விடந்தான் உண்டெழுபாரும்
பயமற நின்றாடும் பரமர்உளங் கூரும்
பழமறை அன்றோதும் ...... பெருமாளே
திருப்பாடல் 98:
தனதனன தாத்த தனதனன தாத்த
தனதனன தாத்த ...... தனதான
இருவினைகள் ஈட்டும் இழவுபடு கூட்டை
எடுமெடென வீட்டில் ...... அனைவோரும்
இறுதி இடுகாட்டில் அழுதுதலை மாட்டில்
எரியஎரி மூட்டியிடுமாறு
கரியஇரு கோட்டு முரணெருமை மோட்டர்
கயிறிறுக மாட்டி ......அழையாமுன்
கனகமணி வாட்டு மருவுகழல் பூட்டு
கழலிணைகள் காட்டி .....அருள்வாயே
பருவமலை நாட்டு மருவுகிளி ஓட்டு
பழைய குறவாட்டி ...... மணவாளா
பகைஞர்படை வீட்டில் முதிய கனலூட்டு
பகருநுதல் நாட்ட ...... குமரேசா
அருமறைகள் கூட்டி உரைசெய் தமிழ் பாட்டை
அடைவடைவு கேட்ட ...... முருகோனே
அலைகடலில் ஈட்ட அவுணர்தமை ஓட்டி
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 99:
தனதனன தாத்த தனதனன தாத்த
தனதனன தாத்த ...... தனதான
உறவின் முறையோர்க்கும் உறுதுயரம் வாய்த்து
உளமுருகு தீர்த்திவுடலூடே
உடலை முடிவாக்கு நெடியதொரு காட்டில்
உயர்கனலை மூட்டி ...... விடஆவி
மறலிமறம் ஆர்த்த கயிறுதனை வீக்கி
வலிவினொடு தாக்கி ...... வளையாமுன்
மனமுமுனி வேட்கை மிகவும்உன தாட்கள்
மகிழ்வியல் கொடேத்த ...... மதிதாராய்
பிறைநுதலி சேற்கண் அமையரிவை வேட்பு
வரையில் மறவோர்க்கு ...... மகவாகப்
பிறிதுருவில் வாய்த்து நிறைதினைகள் காத்த
பிடியினடி போற்று ...... மணவாளா
அறுகுபிறை ஆத்தி அலைசலமும் ஆர்த்த
அடர் சடையினார்க்கும் ......அறிவீவாய்
அடரவரு போர்க்கை அசுரர்கிளை மாய்த்து
அமரர்சிறை மீட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 100:
தனனதன தனனதன தனனதன தனனதன
தனனதன தனனதன ...... தனதான
அளகநிரை குலையவிழி குவியவளை கலகலென
அமுதமொழி பதறியெழ ...... அணியாரம்
அழகொழுகு புளகமுலை குழையஇடை துவளமிக
அமுதநிலை அதுபரவ ...... அதிமோகம்
உளமுருக வருகலவி தருமகளிர் கொடுமையெனும்
உறுகபடம் அதனில்மதி ...... அழியாதே
உலகடைய மயிலின்மிசை நொடியளவில் வலம்வரும்உன்
உபயநறு மலரடியை ...... அருள்வாயே
வளையமலை கடல்சுவற விடுபகழி வரதன்இரு
மருதினொடு பொருதருளும் ...... அபிராமன்
வரியரவின் மிசைதுயிலும் வரதஜயமகள் கொழுநன்
மருகஅமர் முடுகிவரு ...... நிருதேசர்
தளமுறிய வரைதகர அசுரர்பதி தலைசிதற
தகனமெழ முடுகவிடு ...... வடிவேலா
தரளமணி வடமிலகு குறவர்திரு மகள்கணவ
சகலகலை முழுதும்வல ...... பெருமாளே
No comments:
Post a Comment