(பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 301:
தானதன தானனத் ...... தனதான
நாரியர்கள் ஆசையைக் ...... கருதாதே
நானுன்இரு பாதபத்மமு நாட
ஆரமுதமான சர்க்கரை தேனே
ஆனஅநுபூதியைத் ...... தருவாயே
காரணமதான உத்தம சீலா
கானகுற மாதினைப் ...... புணர்வோனே
சூரர்கிளை தூளெழப் ...... பொரும்வேலா
தோகைமயில் வாகனப் ...... பெருமாளே
திருப்பாடல் 302:
தான தனத்த ...... தனதான
நாளு மிகுத்த ...... கசிவாகி
ஞான நிருத்தம் ...... அதைநாடும்
ஏழை தனக்கும் ...... அநுபூதி
ராசி தழைக்க ...... அருள்வாயே
பூளை எருக்கு ...... மதிநாக
பூணர் அளித்த ...... சிறியோனே
வேளை தனக்குசிதமாக
வேழம் அழைத்த ...... பெருமாளே
திருப்பாடல் 303:
தத்தனத் தனனதத்த ...... தனதான
நித்தம் உற்றுனை நினைத்து ...... மிகநாடி
நிட்டை பெற்றியல் கருத்தர் ...... துணையாக
நத்தி உதம தவத்தின் ..... நெறியாலே
லக்ய லக்கண நிருத்தம் ...... அருள்வாயே
வெற்றிவிக்ரம அரக்கர் ...... கிளைமாள
விட்ட நத்துகரனுக்கு ...... மருகோனே
குற்றமற்றவர் உளத்தில் ...... உறைவோனே
குக்குடக் கொடிதரித்த ...... பெருமாளே
திருப்பாடல் 304:
தானந்த தானத்தம் ...... தனதான
நீலங்கொள் மேகத்தின் ...... மயில்மீதே
நீவந்த வாழ்வைக் கண்டதனாலே
மால்கொண்ட பேதைக்குன் ...... மணநாறும்
மார்தங்கு தாரைத் தந்தருள்வாயே
வேல்கொண்டு வேலைப் பண்டெறிவோனே
வீரங்கொள் சூரர்க்குங் ...... குலகாலா
நாலந்த வேதத்தின் ...... பொருளோனே
நானென்று மார்தட்டும் ...... பெருமாளே
திருப்பாடல் 305:
தத்தத் தனான ...... தனதான
பட்டுப் படாத ...... மதனாலும்
பக்கத்து மாதர் ...... வசையாலும்
சுட்டுச் சுடாத ...... நிலவாலும்
துக்கத்தில் ஆழ்வதியல்போ தான்
தட்டுப் படாத ...... திறல்வீரா
தர்க்கித்த சூரர் ...... குலகாலா
மட்டுப் படாத ...... மயிலோனே
மற்றொப்பிலாத ...... பெருமாளே
திருப்பாடல் 306:
தனனத் தத்தன ...... தனதான
பரவைக்கெத்தனை ...... விசைதூது
பகரற்குற்றவர் ...... எனமாணுன்
மரபுக்குச்சித ...... ப்ரபுவாக
வர மெத்தத்தர ...... வருவாயே
கரடக் கற்பகன் ...... இளையோனே
கலைவிற் கட்குற ...... மகள்கேள்வா
அரனுக்குற்றது ...... புகல்வோனே
அயனைக் குட்டிய ...... பெருமாளே
திருப்பாடல் 307:
தனதனன தாத்தனத் ...... தனதான
பிறவியலை ஆற்றினிற் ...... புகுதாதே
பிரகிருதி மார்க்கம் உற்றலையாதே
உறுதிகுரு வாக்கியப் ...... பொருளாலே
உனதுபத காட்சியைத் ...... தருவாயே
அறுசமய சாத்திரப் ...... பொருளோனே
அறிவுள் அறிவார்க்குணக் ...... கடலோனே
குறுமுனிவன் ஏத்து முத்தமிழோனே
குமரகுரு கார்த்திகைப் ...... பெருமாளே
திருப்பாடல் 308:
தத்தனத் தாத்தத் தாத்த ...... தனதான
புத்தகத்தேட்டில் தீட்டி ...... முடியாது
பொற்புறக் கூட்டிக் காட்டி ...... அருள்ஞான
வித்தகப் பேற்றைத் தேற்றி ...... அருளாலே
மெத்தெனக் கூட்டிக் காக்க ...... நினைவாயே
தத்தைபுக் கோட்டிக் காட்டில் ...... உறைவாளைச்
சற்கரித்தேத்திக் கீர்த்தி ...... பெறுவோனே
கைத்தலத்தீக்குப் பார்த்து ...... நுழையாத
கற்பகத் தோப்புக் காத்த ...... பெருமாளே
திருப்பாடல் 309:
தன்ன தனந்தன ...... தனதான
பொன்னை விரும்பிய ......பொதுமாதர்
புன்மை விரும்பியெ ...... தடுமாறும்
என்னை விரும்பிநி ...... ஒருகால்நின்
எண்ணி விரும்பவும் ...... அருள்வாயே
மின்னை விரும்பிய ...... சடையாளர்
மெய்யின் விரும்பிய ...... குருநாதா
அன்னை விரும்பிய ...... குறமானை
அண்மி விரும்பிய ...... பெருமாளே
திருப்பாடல் 310:
தனனத்த தத்த ...... தனதான
மனைமக்கள் சுற்றம் ...... எனுமாயா
வலையைக் கடக்க ...... அறியாதே
வினையிற் செருக்கி ...... அடிநாயேன்
விழலுக்கிறைத்து ...... விடலாமோ
சுனையைக் கலக்கி ...... விளையாடு
சொருபக் குறத்தி ...... மணவாளா
தினநற் சரித்ரம் ...... உளதேவர்
சிறைவெட்டிவிட்ட ...... பெருமாளே
திருப்பாடல் 311:
தானனா தானன ...... தந்ததான
வாரிமீதே எழு ...... திங்களாலே
மாரவேள் ஏவிய ...... அம்பினாலே
பாரெலாம் ஏசிய ...... பண்பினாலே
பாவியேன் ஆவி ...... மயங்கலாமோ
சூரனீள் மார்பு தொளைந்த வேலா
சோதியே தோகை...... அமர்ந்தகோவே
மூரிமால் யானை ......மணந்தமார்பா
மூவர் தேவாதிகள் ...... தம்பிரானே
திருப்பாடல் 312:
தானத் தத்தத் தத்தன தத்தத் ...... தனதான
வான் அப்புக்குப் பற்று மருத்துக் ...... கனல்மேவு
மாயத்தெற்றிப் பொய்க்குடில் ஒக்கப் ...... பிறவாதே
ஞானச் சித்திச் சித்திர நித்தத் ...... தமிழாலுன்
நாமத்தைக் கற்றுப்புகழ் கைக்குப் ...... புரிவாயே
கானக் கொச்சைச் சொற்குறவிக்குக் ...... கடவோனே
காதிக் கொற்றப் பொற்குல வெற்பைப் ...... பொரும்வேலா
தேனைத் தத்தச் சுற்றிய செச்சைத் ...... தொடையோனே
தேவச் சொர்க்கச் சக்கிரவர்த்திப் ...... பெருமாளே
திருப்பாடல் 313:
(இத்திருப்பாடலின் சில பகுதிகள் கிடைக்கப் பெறவில்லை)
தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன
தனதன தனதன தனன தனதன
தனதன தனதன தனன தனதன
தந்தத் தனந்ததன தந்தத் தனந்ததன ...... தனதான
குருபர சரவணபவ சண்முககுக
ஒருபர வயமியல் எயினர் மகள்சுக
மண்டத் தனங்கள்புணர் சண்டத் திரண்டபுஜ
உழுவைகள் கரடிகள் கிடிகள் பகடுகள்
இளைகளை நெறுநெறு நெறென உலவு!வி
லங்கற் குறிஞ்சியுறை தொங்கற்கடம்ப ...... அருள் தருவாயே
???அடிபடு முரசு தவில்பட
கந்தக்கை துந்துமி தடந்தப்புடன் சலிகை
???கரடிகை அறைபறை திமிலை .. அபிநவ
சங்கொற்றை கொம்புகுழல் வங்கக் கருங்கடல் கொள்
பிரளயம் இதுவென அதிர உலகர்கள்
அரகர சிவசிவ அபயம் அபயம்!எ
னுஞ்சத்தம் எங்குமெழ வெஞ்சத்தி கொண்டுபடை ...... புகவானோர்
???வனச மலர்நிகர் செம்பொற் சதங்கையடி அன்பர்க்கு வந்துதவு ...... பெருமாளே
No comments:
Post a Comment