Tuesday, March 14, 2017

திருஎழுகூற்றிருக்கை:

 (பொதுத் திருப்புகழ் திருப்பாடல்கள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


ஓருருவாகிய தாரகப் !பிரமத்
     தொருவகைத் தோற்றத்திரு மரபெய்தி
          ஒன்றாய் ஒன்றி இருவரில் தோன்றி மூவாதாயினை

இருபிறப்பாளரின் ஒருவன் ஆயினை
     ஓராச் செய்கையின் இருமையின் முன்னாள்

நான்முகன் குடுமி இமைப்பினிற் பெயர்த்து
          மூவரும் போந்து இருதாள் வேண்ட
               ஒருசிறை விடுத்தனை

ஒருநொடி அதனில் இருசிறை மயிலின்
     முந்நீருடுத்த நானிலம் அஞ்ச நீவலஞ் செய்தனை

நால்வகை மருப்பின் மும்மதத் திருசெவி
     ஒருகைப் பொருப்பன் மகளை வேட்டனை

ஒருவகை வடிவினில் இருவகைத்தாகிய
     மும்மதன் தனக்கு மூத்தோனாகி
          நால்வாய் முகத்தோன் ஐந்துகைக் கடவுள்
               அறுகு சூடிக்கிளையோன் ஆயினை

ஐந்தெழுத்ததனில் நான்மறை உணர்த்து
     முக்கட் சுடரினை இருவினை !மருந்துக்
          கொருகுரு ஆயினை

ஒருநாள் உமையிரு முலைப்பால் அருந்தி
     முத்தமிழ் விரகன் நாற்கவி ராஜன்
          ஐம்புலக் கிழவன் அறுமுகன் இவனென
               எழில்தரும் அழகுடன் கழுமலத்துதித்தனை

அறுமீன் பயந்தனை ஐந்தரு வேந்தன்
     நான்மறைத் தோற்றத்து முத்தலைச் !செஞ்சூட்
          டன்றிலங் கிரியிரு பிளவாக ஒருவேல் விடுத்தனை

காவிரி வடகரை மேவிய குருகிரி இருந்த
     ஆறெழுத்தந்தணர் அடியிணை போற்ற
          ஏரகத்திறைவன் என இருந்தனையே 

No comments:

Post a Comment