Tuesday, March 28, 2017

சித்து வகுப்பு:

(பிற தொகுப்புகள்)

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

அடல் புனைந்த வேலு மயிலும் என்றும் வாழி
அரியதொன்று கூற அருகிருந்து கேண்மின்  ...... 1

அளவில் பல காயமோடாடி அண்டர்
அறிய விளையாடலாம் முலி ஒன்றில்  ...... 2

ஆசை வேறிலை அறுமுகவன்திரு
ஆணை மேருவை அடிதலை கண்டனம்  ...... 3

அகில லோகமும் அடைவடைவே முதல்
அருளினோம்அது சிவன்அறியாதல  ...... 4

அமையும் எனும்படி நின்ற மநோரதம்
அவை முழுதுந் தருவம் பதறாது கொள்  ...... 5

ஆதியு முடிவுமிலாநந்தந் தரும்
ஆறிரு கரதல நாதன் தந்தவை  ...... 6

(பச்சிலை மூலிகைகள், மருந்து வகைகள்).

அவுஷதம் உளசில கிலுகிலுப்பைகள்
அரசிலை நறுவிலி கரிய கக்கரி  ...... 7

அத்தி செம்பிராகை முட்காவளை
துத்தி சங்கம் ஓரிதழ்த் தாமரை  ...... 8

அவுரி கற்றாழை ஒடுவை குறிஞ்சிலி
சிவிறி கத்தாரி பொடுதலை சண்பகம்  ...... 9

ஆரை கொடுவேலி வேல் காஞ்சிரம்
வீரை இருவேலி பேரீந்திலை  ...... 10

அமுக்குரவெருக்கிலை முருக்கிதழ் செருப்படை
அகத்தி தமரத்தை மதமத்தமொடு பித்திகை  ...... 11

ஆலம் ஆத்தி கடுக்கை கொடிக்கழல்
கோலி தேட்கடை நெய்க்கொடை வக்கணை  ...... 12

அகில்பரம்பை காரை துடரி தும்பை சூரை
அலரி சம்பு நாவல் மருது சிந்துவாரம்  ...... 13

அறுகு தழுதாழை மாபாலை புன்கு
புரசு பழுபாகல் பூலா அழிஞ்சில்  ...... 14

ஆயில் ஆவிரை இறலி இரும்பிலி
ஆடி ஆவணி புடமிட என்றழை  ...... 15

அவனி பாடல மனல மகீருகம்
இவை சமூலமும் எழுபது சாலடை  ...... 16

அதிமதுரந் - தகரஞ் - சிறு பாலடை
பதிமுக வெந்தய - மின்கய மோதகம்  ...... 17

ஆறிடை அபின் அரிதாரங் கந்தகம்
நூறிடை திரிபலை ஓரொன்றெண் பலம்  ...... 18

அதிவிடயமு மொழி கிருமி சத்ருவும்
அனல் முறுகலும் அற முறுகு துத்தமும்  ...... 19

அற்பம் ஒன்று கீரை வித்தேழிடை
அத்தில் ஒன்று பாதி தக்கோலமும்  ...... 20

அடவி கச்சோல நிமிளை நறும்பிசின்
அரிதம் வெட்பாலை அரிசி கருங்கணி  ...... 21

ஆமலகம் ஏலம் நான்மூன்றிடை
சேமசிால கூட லோகாஞ்சனம்  ...... 22

அரப்பொடி கடிப்பகை விடத்திரணம் !அப்பிர
கசத்தை சத குப்பிவிதை கொத்தமலி திப்பிலி  ...... 23

ஆலி கோட்டம் எலிப்பகை சச்சிலை
நீலி காய்ச்சு நிலப்பனை கற்பிசின்  ...... 24

மடல் சிவந்த தாழை மணவ சம்பு நீலம்
வருகுரும்பை கோடல் துருசு சம்பிராணி  ...... 25

மரிசி வசவாசி காகீச மஞ்சள்
மகிழ விதைமேதை மாமேதை குன்றி  ...... 26

வாரி வாய்நுரை சயில சலம்புரி
பூரி வாதுமை சணவு பெருங்குமிழ்  ...... 27

வடுவில் சீரக பல மயிரோசனை
கடுகுரோகணி சிவதை மனோசிலை  ...... 28

வகைவகை கொண்டொரு மண்டல மோரொடு
குகையினில் எண்பது செம்பினில் ஊறவை  ...... 29

வாதநல் வழிகள் அநேகம் பண்டையில்
வாகடம் அலம், குருநாதன் தந்தது  ...... 30

வழிபடும் அரிஅர பிரமருட்பட
மொழிகிற வகையிது சிறிது பெற்றிலர்  ...... 31

மற்றும் இந்த்ர சாலம் உச்சாடனம்
முற்றும் இங்ஙனே தரத் தாழ்விலை  ...... 32

மதலையர்க்கீது மொழிவது பண்பல
கதவினில் தாழையிடு பயம் ஒன்றிலை  ...... 33

வாலுழுவை ஓரி காராம்பசு
வாலின்மயிர் கீரி தேவாங்கழை  ...... 34

மரித்தவர் சனித்தகுழி உப்புறு சலத்தினை
வடித்தினிதெடுத்தொரு குடத்தினில் நிறைத்துவை  ...... 35

மாறில் தோத்திர வித்தை பலித்திடின்
மாடை சேர்க்க வருத்தம் உனக்கிலை  ...... 36

(ரசவாதி கேட்பன  ...... 37 - 72)

மணமதின்று நாளை எனமொழிந்து கேளு
மனைகள் எங்கும் ஓடி இனிவிரைந்து தேடு  ...... 37

வளையல் குழைபீலி காலாழி தண்டை
மணிவயிர வீடு மேலீடு செம்பொன்  ...... 38

வாளி பாடக மணிபிறை சங்கிலி
பாளை சூடக மயிலம் இலம்பகம்  ...... 39

மவுலி நூபுர மயில்திரு வாசிகை
சவடி தோள்வளை முகவளை மேல்வளை  ...... 40

மரகத குண்டலம் வெண்டய மேகலை
அரசிலை கம்பி குறுங்குணி சாலகம்  ...... 41

வாரணி உடைமணி ஆரங் கிங்கிணி
வாகுவலய நெளி பீடங் கண்டிகை  ...... 42

மணி மகரிகை வளை திகிரி பட்டிகை
பணிகளில் அழகிய பணிகள் கொக்கிகள்  ...... 43

வட்ட அம்பொன்ஓலை முத்தாவளி
சுட்டி சந்துகாறை கைக் காறைகள்  ...... 44

வடக முத்தோலை அரைவடமுஞ் செறி
கடகம் வித்தார மகர நெடுங்குழை  ...... 45

மாதரணி தாலி நூல்காஞ்சனம்
மாலிகை மதாணி பீதாம்பரம்  ...... 46

மதிப்பரிய கைச்சரி சரப்பணி இலைச்சினை
பதக்கம் இவைஉட்பட அணிப்படலம் இட்டுவை  ...... 47

மாடை பாட்டி புதைத்த !குடப்பண
மோடு கூட்டி உருக்க விருப்புடன்  ...... 48

இடு ப்ரசங்கியாமல் உலை அநந்தகோடி
எரியில் வெந்திடாத கரிநிரம்ப வேணும்  ...... 49

இதுபழைய கவுரி பாஷாண உண்டை
இடுசகல வேதி பூநாக செம்பின்  ...... 50

ஈயம் ஆனதொர் இரதமும் எண்பலம்
ஏழு கோடியும் இரவு சிவந்திடும்  ...... 51

யமுனை நீர்கொடு குகை பதினாயிரம்
இறுகவே சமை நிலஅறை ஊடுவை  ...... 52

எழுபதொடெண்பது வண்டியிலே பதர்
இடுகொடு வந்து சொரிந்து குவாலிடு  ...... 53

யாமொழி பட ரசவாதந் தந்தன
நீசிவகுரு உபகாரங் கண்டிரு  ...... 54

இரதமொடுருகிய சருகு பித்தளை
இவைஇவை குகைதொறும் இடை நறுக்கிவை  ...... 55

எற்ற வந்திராது பொய்க்காள்அல
எட்டிரண்டும் ஆறு தப்பாதுகொள்  ...... 56

எழுபதக்ரோணி புடமுள செங்களம்
ரணமுகத்தானை படையொடு வந்திரு  ...... 57

ஈழம்வெகு கோடி யாமீந்திட
ஏழுநிலை மாட நீமேய்ந்துகொள்  ...... 58

இபத்திரள் உரித்தன பருத்தன துருத்திகள்
இலக்கற உனக்கருகடுக்கிவை சடக்கென  ...... 59

யாவும் வாய்ப்பது சத்யம் உனக்கிவை
ஏழு நாட்டரும் மெத்த விளைத்தனம்  ...... 60

இறைவர் குன்ற மானை மணமகிழ்ந்த நாளில்
இணையில் அண்டரோடும் உணவு கொண்டதாகும்  ...... 61

எமது பசிதீர மாராச இந்த்ர
அமுது படைபோத ஆகாச கங்கை  ...... 62

ஆறு போலநெய் சொரி வடகம்படை
நூறு சாலொடு பொரியலை இங்கழை  ...... 63

இடுக மாவடு வடையிடை கீரையி 
லவணம் ஊறிய கறியடைவே படை  ...... 64

இருபது தண்டை உடும்பு குவால்சமை
துருவைகள் பன்றி சமைந்த எலாம்அழை  ...... 65

ஆமைஅவியல்முயல் ஆணங் !கண்டறி
யோம்இது சிவசிவ மேலெங்கும் படை  ...... 66

இடைவெளி அறமிகு விடுகருக்கலை
இறவகை கயல்கெளிறிவை பொடித்தன  ...... 67

எட்டு வண்டி வாளையிற் பீலியில்
இட்டமுண்டு தீயன் முற்பாடழை  ...... 68

இடைகொழுப்பாடில் இளைய எலும்புடன்
அடை சுரைக்காயில் அடுபடை முன்கறி  ...... 69

ஈறுபுளி வார் விடாய் போம்படி
ஏடு பிரியாத பால்தேன் சொரி  ...... 70

இருக்கிற சருக்கரை வருக்கை கதலிக்கனி
ரசத்தினை அனைத்தையும் இலைக்குள் அடையப்படை  ...... 71

ஈக பாக்குடன் வெற்றிலை கர்ப்புரம்
யாருமேத்த இனிச்சுகம் உற்றிரு  ...... 72

(முருகன் பெருமை - சித்தர்களுள் ப்ரசித்தி பெற்றவர்
முருகன் திருப்புகழைக் கற்றவரே  -- 73-96)

மிடைதரும் ப்ரவாள சடைபெரும் ப்ரவாக
விமலர் கொன்றை மாலை தருண சந்த்ர ரேகை  ...... 73

விரவு மணநாறு பாதார விந்த
விதரண விநோத மாதாவின் மைந்தன்  ...... 74

மீன கேதனன் உருவின் மிகுந்தருள்
தான வாரிதி சரவண சம்பவன்  ...... 75

விகிர்தி வேதனன் மவுன சுகாதனன்
அகில காரணன் அகில கலாதரன்  ...... 76

விகசித சுந்தர சந்தன பாளித
ம்ருகமத குங்கும கஞ்ச பயோதரி  ...... 77

வேழுமும் உழைகளும் ஆரும் பைம்புனம்
மேவுறு குறமகள் மேவுந் திண்புயன்  ...... 78

விரிகடல் துகள்எழ வெகுளும் விக்ரமன்
அரிதிரு மருமகன் அறுமுகத்தவன்  ...... 79

வெட்சி கொண்ட தோளன் வெற்பூடுற
விட்ட வென்றி வேல் முழுச்சேவகன்  ...... 80

வெருவு நக்கீரர் சரணென வந்தருள்
முருகன் நிஷ்க்ரோத முநிகுண பஞ்சரன்  ...... 81

மேதகு புராண வேதாங்குரன்
ஓதரிய மோன ஞானாங்குரன்  ...... 82

மிகைத்தவர் புரத்ரயம் எரித்தவர் ப்ரியப்பட
அகத்திய முநிக்கொரு தமிழ்த்ரயம் உரைத்தவன்  ...... 83

வேத மூர்த்தி திருத்தணி வெற்புறை
சோதி கார்த்திகை பெற்ற விளக்கொளி  ...... 84

வெகுளி வென்ற வேள்வி முநிவர் சங்கம் ஏற
விரவும் இந்த்ரலோக வழிதிறந்த மீளி  ...... 85

மிகவிருது கூறு மேவார்கள் கண்டன்
விகட அசுரேசர் சாமோது சண்டன்  ...... 86

மேக வாகன மிகுமத வெண்கய
பாக சாதனன் நகரி புரந்தவன்  ...... 87

விபுத தாரகன் விபுத திவாகரன்
விபுத தேசிகன் விபுத சிகாமணி  ...... 88

விபரித கஞ்ச விரிஞ்ச பராமுகன்
அபிநவ கந்தன் அடைந்தவர் தாபரன்  ...... 89

மேருவை இடிபட மோதுஞ் சங்க்ரம
தாரகன் மகுட விபாடன் புங்கவன்  ...... 90

வெயிலுமிழ் கொடியொடு வினைமுகத்தினின்
மயில்மிசை வருமொரு வரதன் நிர்ப்பயன்  ...... 91

வித்தகன் சுவாமி நிர்ப்பாவகன்
சத்தியன் ப்ரதாப வித்யாதரன்  ...... 92

விரத நட்பாளர் பரியும் அசஞ்சலன்
நிருத நிட்டூரன் நிருதர் பயங்கரன்  ...... 93

வீரமத லோக வேள் காங்கெயன்
சூரரண சூர சூராந்தகன்  ...... 94

வினைப்பகை அறுப்பவன் நினைத்தது முடிப்பவன்
மனத்துயர் கெடுத்தெனை வளர்த்தருள் க்ருபைக்கடல்  ...... 95

வேலன் வாய்த்த திருப்புகழ் கற்றவர்
சீலம் ஏத்திய சித்த ப்ரசித்தரே.  ...... 96

No comments:

Post a Comment