(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
அலைகடல் வளைந்துடுத்த எழுபுவி புரந்திருக்கும்
அரசென நிரந்தரிக்க வாழலாம் ....1
அளகைஅரசன் தனக்கும் அமரர் அரசன் தனக்கும்
அரசென அறஞ்செலுத்தி ஆளலாம் ....2
அடைபெறுவதென்று முத்தி அதிமதுர செந்தமிழ்க்கும்
அருள்பெற நினைந்து சித்தியாகலாம் ....3
அதிரவரும் என்று முட்ட அலகில்வினை சண்டை நிற்க
அடல்எதிர் புரிந்து வெற்றியாகலாம் ....4
இலகிய நலஞ்செய் புட்பகமும் உடல் நிறம் வெளுத்த
இபஅரசெனும் பொருப்பும் ஏறலாம் ....5
இருவர்அவர் நின்றிடத்தும் எவர்எவர் இருந்திடத்தும்
ஒருவன்இவன் என்றுணர்ச்சி கூடலாம் ....6
எமபடர் தொடர்ந்தழைக்கில் அவருடன் எதிர்ந்துள் உட்க
இடிஎன முழங்கி வெற்றி பேசலாம் ....7
இவையொழியவும் பலிப்பதகல விடும் உங்கள் !வித்தை
யினைஇனி விடும்பெருத்த பாருளீர் ....8
முலையிடை கிடந்திளைப்ப மொகுமொகென வண்டிரைப்ப
முகையவிழ் கடம்படுத்த தாரினான் ....9
முதலி பெரியம்பலத்துள் வரையசல மண்டபத்துள்
முநிவர்தொழ அன்று நிர்த்தம் ஆடினான் ....10
முனைதொறு முழங்கியொற்றி முகிலென இரங்க வெற்றி
முறைநெறி பறந்து விட்ட கோழியான் ....11
முதியவுணர் அன்றுபட்ட முதியகுடர் நன்று சுற்று
முதுகழுகு பந்தர் இட்ட வேலினான் ....12
மலைமருவு பைம்புனத்தி வளருமிரு குன்றமொத்தி
வலிகுடி புகுந்திருக்கு மார்பினான் ....13
மழலைகள் விளம்பி மொய்த்த அறுவர்முலை உண்டு முற்றும்
வடிவுடன் வளர்ந்திருக்கும் வாழ்வினான் ....14
மலையிறை மடந்தை பெற்ற ஒருமதலை என்றுதித்து
மலையிடியவுந் துணித்த தோளினான் ....15
மயிலையும் அவன் திருக்கை அயிலையும் அவன் கடைக்கண்
இயலையு நினைந்திருக்க வாருமே ....16
No comments:
Post a Comment