(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
சந்தான புஷ்ப பரிமள கிண்கிணீ முகச்
சரணயுகளமிர்த ப்ரபா
சந்த்ரசே கர மூஷிகாரூட வெகுமோக
சத்ய ப்ரியாலிங்கனச்
சிந்தாமணிக் கலச கரகட கபோல!த்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாப மயிலாம்
மந்தாகிநிப் பிரபவ தரங்க விதரங்க
வனசரோதய கிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
அராசலன் !குலிசாயுதத்
திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறு நீலக்ரீவ
ரத்னக் கலாப மயிலே
திருப்பாடல் 2:
சக்ர ப்ரசண்டகிரி முட்டக் கிழிந்துவெளி
பட்டு க்ரவுஞ்ச சயிலந்
தகரப் பெருங்கனக சிகரச் சிலம்பும்எழு
தனிவெற்பும் அம்புவியும் எண்
திக்குத் தடங்குவடும் ஒக்கக் குலுங்கவரு
சித்ரப் பதம்பெயரவே
சேடன்முடி திண்டாட ஆடல்புரி வெஞ்சூரர்
திடுக்கிட நடிக்கு மயிலாம்
பக்கத்தில் ஒன்றுபடு பச்சைப் பசுங்கவுரி
பத்மப் பதங் கமழ்தரும்
பாகீரதிச் சடில யோகீசுரர்க்குரிய
பரம உபதேசம் !அறிவிக்
கைக்குச் செழுஞ் சரவணத்திற் பிறந்தஒரு
கந்தச்சுவாமி தணிகைக்
கல்லார கிரியுருக வருகிரண மரகத
கலாபத்தில் இலகு மயிலே
திருப்பாடல் 3:
ஆதார பாதளம் பெயரஅடி பெயர!மூ
தண்ட முகடது பெயரவே
ஆடரவ முடிபெயர எண்திசைகள் பெயரஎறி
கவுள்கிரி சரம்பெயரவே
வேதாள தாளங்களுக்கிசைய ஆடுவார்
மிக்க ப்ரியப்பட விடா
விழிபவுரி கவுரிகண்டுள மகிழ விளையாடும்
விஸ்தார நிர்த்த மயிலாம்
மாதாநு பங்கியெனு மாலது சகோதரி
மகீதரி கிராத குலிமா
மறைமுநி குமாரி சாரங்கநந் தனிவந்த
வள்ளிமணி நூபுர மலர்ப்
பாதாரவிந்த சேகரன் நேய மலரும்!உற்
பலகிரி அமர்ந்த பெருமாள்
படைநிருதர் கடகமுடை படநடவு பச்சைப்
பசுந்தோகை வாகை மயிலே
திருப்பாடல் 4:
யுககோடி முடிவின் மண்டிய சண்ட மாருதம்
உதித்ததென்றயன் அஞ்சவே
ஒருகோடி அண்டர் அண்டங்களும் பாதாள
லோகமும் பொற்குவடுறும்
வெகுகோடி மலைகளும் அடியினில் தகர்ந்திரு
விசும்பிற் பறக்க விரிநீர்
வேலை சுவறச் சுரர் நடுக்கங் கொளச் சிறகை
வீசிப் பறக்கு மயிலாம்
நககோடி கொண்டவுணர் நெஞ்சம் பிளந்தநர
கேசரி முராரி திருமால்
நாரணன் கேசவன் சீதரன் தேவகீ
நந்தனன் முகுந்தன் மருகன்
முககோடி நதிகரன் குருகோடி அநவரதம்
முகிலுலவு நீலகிரிவாழ்
முருகன்உமை குமரன் அறுமுகன் நடவு விகடதட
மூரிக் கலாப மயிலே
திருப்பாடல் 5:
சோதிஇம வேதண்ட கன்னிகையர் தந்த!அபி
நய துல்ய சோம வதன
துங்கத்ரி சூலதரி கங்காளி சிவகாம
சுந்தரி பயந்த நிரைசேர்
ஆதிநெடு மூதண்ட அண்ட பகிரண்டங்கள்
யாவுங் கொடுஞ் சிறகினால்
அணையுந் தனதுபேடை அண்டங்கள் என்னவே
அணைக்குங் கலாப மயிலாம்
நீதிமறை ஓதண்ட முப்பத்து முக்கோடி
நித்தரும் பரவு கிரியாம்
நீலகிரி வேலவன் நிராலம்பன் நிர்ப்பயன்
நிர்வியாகுலன் சங்குவாள்
மாதிகிரி கோதண்ட தண்டந் தரித்தபுயன்
மாதவன் முராரி திருமால்
மதுகைட வாரிதிரு மருகன்முருகன் குமரன்
வரமுதவு வாகை மயிலே
திருப்பாடல் 6:
சங்கார காலமென அரிபிரமர் வெருவுறச்
சகல லோகமு நடுங்கச்
சந்த்ரசூரியர் ஒளித்திந்த்ராதி அமரருஞ்
சஞ்சலப் பட உமையுடன்
கங்காளர் தனிநாடகஞ் செய்த !போதந்த
காரம் பிறந்திட நெடுங்
ககனகூட முமேலை முகடுமூடிய பசுங்
கற்றைக் கலாப மயிலாஞ்
சிங்கார குங்கும படீர ம்ருகமத யுகள
சித்ரப் பயோதர கிரித்
தெய்வ வாரண வநிதை புனிதன் குமாரன்
திருத்தணி மகீரதன் !இருங்
கெங்காதரன் கீதம் ஆகிய சுராலய
க்ருபாகரன் கார்த்திகேயன்
கீர்த்திமா அசுரர்கள் மடிய க்ரவுஞ்ச கிரி
கிழிபட நடாவு மயிலே
திருப்பாடல் 7:
தீரப் பயோததி திக்கும் ஆகாயமுஞ்
செகதலமு நின்று சுழலத்
திகழ்கின்ற முடிமவுலி சிதறிவிழ வெஞ்சிகைத்
தீக்கொப்புளிக்க வெருளும்
பாரப் பணாமுடி அநந்தன்முதல் அரவெலாம்
பதைபதைத்தே நடுங்கப்
படர்சக்ர வாளகிரி துகள்பட வையாளிவரு
பச்சை ப்ரவாள மயிலாம்
ஆரப்ரதாப புளகித மதன பாடீர
அமிர்த கலசக் கொங்கையாள்
ஆடுமயில் நிகர்வல்லி அபிராமவல்லி !பர
மாநந்த வல்லி சிறுவன்
கோரத்ரி சூல த்ரியம்பக ஜடாதார
குருதரு திருத்தணி கைவேள்
கொடிய நிசிசரர் உதரம் எரிபுகுத விபுதர்பதி
குடிபுகுத நடவு மயிலே
திருப்பாடல் 8:
செக்கரள கேசசிக ரத்நபுரி ராசிநிரை
சிந்தப் புராரி அமிர்தந்
திரும்பப் பிறந்ததென ஆயிரம் பகுவாய்கள்
தீவிஷங் கொப்புளிப்பச்
சக்ரகிரி சூழவரு மண்டலங்கள் சகல
சங்கார கோர நயனத்
தறுகண் வாசுகிபணா முடியெடுத்துதறுமொரு
சண்டப் பரசண்ட மயிலாம்
விக்ரம கிராதகுலி புனமீதுலாவிய
விருத்தன் திருத்தணிகை வாழ்
வேலாயுதன் பழவினைத் துயர் அறுத்தெனை
வெளிப்பட உணர்த்தியருளித்
துக்கசுக பேதமற வாழ்வித்த கந்தச்
சுவாமி வாகனமானதோர்
துரககஜ ரதகடக விகடதட நிருதர்குல
துஷ்டர் நிஷ்டூர மயிலே
திருப்பாடல் 9:
சிகர தமனியமேரு கிரிரசத கிரிநீல
கிரியெனவும் ஆயிரமுகத்
தெய்வநதி காளிந்தியென நீழல் இட்டுவெண்
திங்கள் சங்கெனவும் ப்ரபா
நிகரெனவும் எழுதரிய நேமியென உலகடைய
நின்ற மாமுகில் என்னவே
நெடியமுது ககன முகடுற வீசி நிமிருமொரு
நீலக் கலாப மயிலாம்
அகருமரு மணம்வீசு தணிகை அபிராமவேள்
அடியவர்கள் மிடிய கலவே
அடல்வேல் கரத்தசைய ஆறிரு புயங்களில்
அலங்கற் குழாம் அசையவே
மகரகன கோமளக் குண்டலம் பலஅசைய
வல்லவுணர் மனம்அசைய மால்
வரை அசைய உரகபிலம் அசைய எண்திசை அசைய
வையாளி ஏறு மயிலே
திருப்பாடல் 10:
நிராசத விராசத வரோதய பராபரன்
நிராகுல நீராமய பிரான்
நிலாதெழுதலால்அறமிலான் நெறியிலான் நெறி
நிலாவிய உலாச இதயன்
குராமலி விராவுமிழ் பராரை அமராநிழல்
குராநிழல் பராவு தணிகைக்
குலாசல சராசரம் எலாமினி துலாவிய
குலாவிய கலாப மயிலாம்
புராரி குமரா குரு பராஎனும் வரோதய
புராதன முராரி மருகன்
புலோமசை சலாமிடு பலாசன வலாரி!புக
லாகும் அயிலாயுதன் நெடுந்
தராதல கிராதர்கள் குலாதவபிராம வல
சாதனன் விநோத சமரன்
தடாரி விகடாசுரன் குடாரித படாதிகழ்
ஷடாநநன் நடாவு மயிலே
திருப்பாடல் 11:
எந்நாளும் ஒருசுனையில் இந்த்ர !நீலப்போ
திலங்கிய திருத்தணிகை வாழ்
எம்பிரான் இமையவர்கள் தம்பிரான் ஏறும்ஒரு
நம்பிரானான மயிலைப்
பன்னாளும் அடிபரவும் அருணகிரிநாதன்
பகர்ந்த அதிமதுர சித்ரப்
பாடல்தரு மாசறு விருத்தம் ஒருபத்தும்
படிப்பவர்கள் ஆதி மறைநூல்
மன்நான்முகம் பெறுவர் அன்னம் ஏறப்பெறுவர்
வாணிதழுவப் பெறுவரால்
மகராலயம்பெறுவர் உவணம் ஏறப்பெறுவர்
வாரிச மடந்தையுடன் வாழ்
அந்நாயகம் பெறுவர் அயிராவதம் பெறுவர்
அமுதாசனம் பெறுவர் மேல்
ஆயிரம் பிறைதொழுவர் சீர்பெறுவர் பேர்பெறுவர்
அழியா வரம்பெறுவரே
No comments:
Post a Comment