Monday, May 28, 2018

வட விஜயபுரம் (விஜயவாடா)

(வட நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: வட நாடு

மாவட்டம்: கிருஷ்ணா மாவட்டம் (ஆந்திர மாநிலம்):

திருக்கோயில்: அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில் 

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

தமிழகத்திற்கு வடக்கே அமைந்துள்ள திருப்புகழ் தலங்கள் 6, அவை திருவேங்கட மலையின் அடிவாரத்தில் (கீழ்த்திருப்பதியில்) அமைந்துள்ள கபிலேஸ்வரம், வடவிஜயபுரம் எனும் விஜயவாடா, திருப்பருப்பதம் எனும் ஸ்ரீசைல ஷேத்திரம், வாரணாசி எனும் காசித் தலம், மாயாபுரி எனும் ஹரித்வார் மற்றும் வட எல்லையிலுள்ள திருக்கயிலை மலை.    

அம்பிகை கனக துர்க்கையாய்க் கோலோச்சும் திருத்தலம், மகிஷாசுரனை வெற்றி கொண்ட ஷேத்திரமாதலால் 'விஜயபுரம்', தமிழகத்திற்கு வட திசையில் அமைந்துள்ளமையால் அருணகிரியார் இப்பதியினை 'வட விஜயபுரம்' என்று குறிக்கின்றார். 

இந்திரசைலாத்ரி மலையுச்சியில் கனக துர்க்கையும், அம்மலைச் சிகரத்தின் மற்றொரு பகுதியிலுள்ள குன்றொன்றின் மீது ஆறுமுக தெய்வமும் எழுந்தருளி இருக்கின்றனர். பெரும்பான்மையான அம்பிகை ஆலயங்களில் விநாயகப் பெருமானும், முருகக் கடவுளும் தனிச்சன்னிதிகளில் எழுந்தருளி இருப்பர், அம்முறையில் 'புராதனமான கனக துர்க்கை ஆலயத்திலும் வேலவனின் திருச்சன்னிதி ஆதியில் அமைந்திருந்துப் பின் காலவெள்ளத்தில் மறைந்திருக்கக் கூடும்' என்று கருதவும் இடமுண்டு. 

விஜயவாடா இரயில் நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்திலும், கனக துர்கை ஆலயத்திலிருந்து சுமார் 1 - 1/2 கி.மீ தூரத்திலும், கோத்தப் பேட்டை எனும் பகுதியில் அமைந்துள்ளது சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில். 236 படிகளோடு கூடிய குன்றின் உச்சியிலுள்ள இவ்வாலயக் கருவறையில் திருப்புகழ் தெய்வமான நம் முருகக் கடவுள் இரு தேவியரும் உடனிருக்க, ஒரு முகம் இரு திருக்கரங்களோடும், மயிலின் முன்பாக நின்ற திருக்கோலத்தில் அதி கம்பீரனாய் எழுந்தருளி இருக்கின்றான். 

இம்மூர்த்தி தன்னை வெளிப்படுத்தி அருளிய விதம் அற்புதமானது. அடியவரொருவரின் கனவினில் எழுந்தருளி தனக்கு இவ்விடத்தில் ஆலயமொன்றினைப் புதுக்குமாறு ஆணையிட்டு அருள, அவ்வடியவரும் வேலவனின் கட்டளையினைச் சிரமேற் கொண்டு இவ்வாலயத்தைக் கட்டுவிக்கின்றார். விக்கிரகத் திருமேனியினை உருவாக்கி வரும் சமயத்தில், ஆலய வளாகத்தின் நிலத்திற்கடியிலிருந்து இம்மூர்த்தி கண்டெடுக்கப் பெறுகின்றார். பெரிதும் உளம்குளிரும் அந்த அடியவர் வெளிப்பட்ட விக்கிரகத் திருமேனியையே ஆலயத்தில் பிரதிஷ்டை செய்விக்கின்றார். 

'நாமே திருப்புகழ் பெற்றுள்ள வடவிஜயபுர மூர்த்தி' என்று உறுதி கூறிப் பேரருள் புரியும் விதமாய் அமைந்துள்ளது நம் சுப்ரமண்ய சுவாமியின் இத்திருக்கோலம், கருவறைச் சுற்றில், மூல மூர்த்தியின் பின்புறம் பால ரூபியாய் மற்றொரு திருக்கோலத்திலும் எழுந்தருளி இருக்கின்றான். அவசியம் தரிசித்துப் போற்றி மகிழ வேண்டிய திருத்தலம், 

(Google Maps: Sri Subrahmanya Swami Temple, Kothapeta, Indrakeeladri, Behind Komala Vilas Hotel Hill Top, Vijayawada, Andhra Pradesh 520001, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தந்தன தானன தனதன தந்தன தானன
     தனதன தந்தன தானன ...... தனதான

குடல்நிணம் என்பு புலால்கமழ் குருதி நரம்பிவை தோலிடை
     குளுகுளெனும் படி மூடிய ...... மலமாசு

குதிகொளும் ஒன்பது வாசலை உடைய குரம்பையை நீரெழு
     குமிழியினும் கடிதாகியெ ...... அழிமாய

அடலை உடம்பை அவாவியெ அநவரதம்சில சாரமில் 
     அவுடதமும் பல யோகமும் ...... முயலா!நின்

றலமரு சிந்தையினாகுலம் அலம்அலம்என்றினி யானுநின் 
     அழகிய தண்டை விடாமலர் அடைவேனோ

இடமற மண்டு நிசாசரர் அடைய மடிந்தெழு பூதரம் 
     இடிபட இன்ப மகோததி ...... வறிதாக

இமையவரும் சிறை போயவர் பதியுள் இலங்க விடாதர
     எழில் படமொன்றும் ஒராயிர ...... முகமான

விடதர கஞ்சுகி மேருவில் வளைவதன் முன்புர நீறெழ
     வெயில் நகை தந்த புராரி மதனகோபர்

விழியினில் வந்து பகீரதி மிசை வளரும் சிறுவா வட
     விஜயபுரம் தனில் மேவிய ...... பெருமாளே.


(2021 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)




No comments:

Post a Comment