Monday, May 28, 2018

திருவேங்கடம் (திருப்பதி):

(வட நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: வட நாடு

மாவட்டம்: சித்தூர் மாவட்டம் (ஆந்திர மாநிலம்):

திருக்கோயில்: அருள்மிகு ஸ்ரீகபிலேஸ்வர சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

திருவேங்கட மலைக்கும் ஆறுமுகக் கடவுளுக்கும் உள்ள தொடர்பினைக் கச்சியப்பரின் கந்தபுராணம் வாயிலாக முதலில் நினைவு கூர்வோம். (பால பருவத்தில்) ஒரு சமயம் முருகப் பெருமான் அம்பிகையிடம் ஏற்படும் சிறு கோபம் காரணமாக (ஒருவருமறியா வண்ணம்) பாதாள உலகத்தில் சிறிது காலம் எழுந்தருளி இருக்கின்றான். பின்னர் கோபம் தணியப் பெற்று திருவேங்கட மலையிலுள்ள குகையொன்றின் வழி வெளிவந்து மலைச் சிகரத்தில் நின்றருளிப் பின் திருக்கயிலைக்கு எழுந்தருளிச் செல்கின்றான். அருணகிரியார்  இந்நிகழ்வினைத் திருவேங்கடம் திருப்புகழில் 'குகைவழி வந்த மலைச்சிகர வடமலை நின்ற பெருமாளே' என்று குறித்தருளியுள்ளார். 
-
(கந்த புராணம் - வழி நடைப் படலம்):
அண்டம் மன்னுயிர் ஈன்றவளுடன் முனிவாகித்
தொண்டகங்கெழு சுவாமிதன் மால்வரை துறந்து
மண்டு பாதலத்து ஏகியே ஓர்குகை வழியே
பண்டு தான்வரு வேங்கட கிரியையும் பார்த்தான்!!!

மற்றொரு புறம் அருணகிரியார் ஸ்ரீவாஞ்சியம் திருப்புகழில் 'திருவேங்கட மலையில் ஸ்ரீநிவாசப் பெருமான் எழுந்தருளி இருப்பதையும்' ஆவணப் படுத்தியுள்ளார் (உலகீன்ற பச்சை உமைய(ண்)ணன், வடவேங்கடத்தில் உறைபவன் உயர் சார்ங்க சக்ர கரதலன் மருகோனே!!!).

'வேங்கையும் வாரணமும் வேங்கையு மானும்வளர் வேங்கட மாமலையில் உறைவோனே' என்று அருணகிரிப் பெருமான் போற்றிப் பரவும் குமாரக் கடவுளை நாம் திருவேங்கட மலையில் எங்கனம் எவ்விடம் தரிசித்துப் பணிவது ?

கீழ்த் திருப்பதியில் கபிலேஸ்வரம் (கபில தீர்த்தம்) எனும் பிரசித்தமான, கபில முனிவரால் பூசிக்கப் பெற்ற, நீர் வீழ்ச்சியோடு கூடிய புராதனத் சிவத் தலமொன்று அமைந்துள்ளது, இத்தலத்தில் ஷண்முகக் கடவுள் 'தனிச்சன்னதியில், அதி கம்பீரனாய், இரு தேவி மார்களோடும், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், 'நாமே திருப்புகழ் பெற்றுள்ள திருமூர்த்தி' என்று (இத்தலம் குறித்த) நம் சஞ்சலம் யாவையும் போக்கியருளும் திருக்கோலத்தில் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். 

அமைவிடம் (செல்லும் வழி):

கீழ்த் திருப்பதியில் அன்னை பத்வாதித் தாயார் திருக்கோயிலிலிருந்து 5 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள புராதனத் தலமான (அழகிய நீர்வீழ்ச்சியோடு கூடிய) ஸ்ரீகபிலேஸ்வர சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது.

(Google Maps: Kapila Teertham Waterfalls, Sri Kapileswara Swamy Temple Road, Tirupati, IN)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 6.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:

தனத்ததன தனதன தனந்த
     தனத்ததன தனதன தனந்த
          தனத்ததன தனதன தனந்த ...... தனதான

கறுத்ததலை வெளிறு மிகுந்து
     மதர்த்த இணை விழிகள் குழிந்து
          கதுப்பிலுறு தசைகள் வறண்டு ...... செவிதோலாய்க்

கழுத்தடியும் அடைய வளைந்து
     கனத்தநெடு முதுகு குனிந்து
          கதுப்புறுபல் அடைய விழுந்து ...... தடுநீர்சோர்

உறக்கம்வரும் அளவில் எலும்பு
     குலுக்கிவிடும் இருமல் தொடங்கி
          உரத்தகன குரலும் நெரிந்து ...... தடிகாலாய்

உரத்த நடை தளரும் உடம்பு
     பழுத்திடுமுன் மிகவும் விரும்பி
          உனக்கடிமை படுமவர் தொண்டு ...... புரிவேனோ

சிறுத்தசெலு அதனுள் இருந்து
     பெருத்ததிரை உததி கரந்து
          செறித்தமறை கொணர நிவந்த ...... ஜெயமாலே

செறித்தவளை கடலில் வரம்பு
     புதுக்கி இளையவனோடறிந்து
          செயிர்த்த அநுமனையும் உகந்து ...... படையோடி

மறப்புரிசை வளையும் இலங்கை
     அரக்கனொரு பதுமுடி சிந்த
          வளைத்தசிலை விஜய முகுந்தன் ...... மருகோனே

மலர்க்கமல வடிவுள செங்கை
     அயிற்குமர குகைவழி வந்த
          மலைச்சிகர வடமலை நின்ற ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன தனதன தனதன
          தனதன தனதன தனதன தனதன ...... தனதான

சரவண பவநிதி அறுமுக குருபர
     சரவண பவநிதி அறுமுக குருபர
          சரவண பவநிதி அறுமுக குருபர ...... எனஓதித்

தமிழினில் உருகிய அடியவர் இடமுறு
     சனன மரணமதை ஒழிவுற சிவமுற
          தருபிணி துளவரம் எமதுயிர் சுகமுற ...... அருள்வாயே

கருணைய விழிபொழி ஒருதனி முதலென
     வருகரி திருமுகர் துணைகொளும் இளையவ
          கவிதைஅமுதமொழி தருபவர் உயிர்பெற ...... அருள்நேயா

கடல்உலகினில் வரும் உயிர்படும் அவதிகள்
     கலகம் இனையதுள கழியவும் நிலைபெற
          கதியும்உனது திருவடி நிழல் தருவதும் ...... ஒருநாளே

திரிபுரம் எரிசெயும் இறையவர் அருளிய
     குமர சமரபுரி தணிகையும் மிகுமுயர்
          சிவகிரியிலும் வடமலையிலும் உலவிய ...... வடிவேலா

தினமும் உனதுதுதி பரவிய அடியவர்
     மனது குடியும்இரு பொருளிலும் இலகுவ
          திமிர மலமொழிய தினகரன் எனவரு ...... பெருவாழ்வே

அரவணை மிசைதுயில் நரகரி நெடியவர்
     மருகன்எனவெ வரும் அதிசயமுடையவ
          அமலி விமலிபரை உமையவள் அருளிய ...... முருகோனே

அதல விதல முதல் கிடுகிடு கிடுவென
     வருமயில் இனிதொளிர் ஷடுமையில் நடுவுற
          அழகினுடன் அமரும் அரகர சிவசிவ ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தத்தத் தத்தத் தத்தத் தத்தத்
   தத்தத் தத்தத் தனதான
      தனத்த தனத்த தனத்த தனத்தன
         தனதன தனதன தனதன தனதன
            தனதன தனதன ...... தனதான

நெச்சுப் பிச்சிப் புட்பத் தட்பக்
   கச்சிக் கச்சுற்றறல் மேவி
      நெறித்து வெறித்து இருட்டை வெருட்டிய
         நிரைதரு மருமலர் செருகிடு பரிமள
            நிறையுறை மதுகர ...... நெடிதாடி

நிச்சிக்கச்சப் பட்டுச் !சிக்கற்
   றொப்புக் கொப்புக்குயர்வாகி
      நெளித்த சுளித்த விழைக்குள் அழைத்துமை
         நிகரென அகருவும் உகுபுகை தொகுமிகு
            நிகழ் புழுகொழுகிய ...... குழன்மேலும்

வச்ரப் பச்சைப் பொட்டிட்டப் !பொட்
   டுக்குள் செக்கர்ப் ப்ரபை போல
      வளைத்த தழைத்த பிறைக்கும் உறைக்கும்!மன்
         மதசிலை அதுவென மகபதி தனுவென
            மதி திலதமும் வதி ...... நுதல் மேலும்

மச்சச் செச்சைச் சித்ரச் சத்ரப்
   பொன் பக்கத்திச்சையனாகி
      மனத்தின் அனைத்தும் அணைத்த துணைப்பத
         மலர்அலதிலை நிலை எனமொழி தழியமெய்
            வழிபடல் ஒழிவனை ...... அருள்வாயே

நச்சுத்துச் சொப்பிச்சுக் !குட்டத்
   துள் தக்கட்டத்தசி காண
      நடத்தி விடத்தை உடைத்த படத்தினில்
         நடநவில் கடலிடை அடுபடை தொடுமுகில்
            நகைமுக திருஉறை ...... மணிமார்பன்

நத்தத்தைச் சக்ரத்தைப் !பத்மத்
   தைக் கைப்பற்றிப் பொரு மாயன்
      நரிக்கும் அரிக்கும் எரிக்கும் விருப்புற
         நசிதரு நிசிசரர் உடகுடல் இடல்செய்த
            நரகரி ஒருதிரு ...... மருகோனே

கச்சுத் தச்சுப் பொற்கட்டிட்டுப்
   பட்டுக்குட்பட்டமுதாலும்
      கருப்பி ரசத்து உருச்செய்து வைச்சிடு
         கனதன பரிமள முழுகு பனிருபுய
            கனக திவிய மணி ...... அணிமார்பா

கைச் சத்திக்குக் கெற்சித்தொக்கப்
   பட்சிக்கக் கொட்டசுராதி
      கறுத்த நிறத்த அரக்கர் குலத்தொடு
         கறுவிய சிறியவ கடவைகள் புடைபடு
            கட வட மலையுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான

கோங்கிள நீரிளக வீங்கு பயோதரமும்
     வாங்கிய வேல்விழியும் ...... இருள்கூரும்

கூந்தலும் நீள்வளைகொள் காந்தளும் நூலிடையும்
     மாந்தளிர் போல் வடிவும் ...... மிகநாடிப்

பூங்கொடியார் கலவி நீங்கரிதாகி மிகு
     தீங்குடனே உழலும் ...... உயிர் வாழ்வு

பூண்டடியேன் எறியில் மாண்டிஙனே நரகில்
     வீழ்ந்தலையாமல் அருள் ...... புரிவாயே

பாங்கியும் வேடுவரும் ஏங்கிட மாமுநியும்
     வேங்கையுமாய் மறமினுடன் வாழ்வாய்

பாண்டவர் தேர்கடவும் நீண்ட பிரான் மருக
     பாண்டியன் நீறணிய ...... மொழிவோனே

வேங்கையும் வாரணமும் வேங்கையும் மானும் வளர்
     வேங்கட மாமலையில் ...... உறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்ட வெறாதுதவும் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தாந்தன தானதன தாந்தன தானதன
     தாந்தன தானதன ...... தனதான

சாந்தமில் மோகவெரி காந்திஅவாவனில
     மூண்டவியாத சமய ...... விரோத

சாங்கலை வாரிதியை நீந்தவொணாதுலகர்
     தாந்துணை யாவரென ...... மடவார் மேல்

ஏந்திள வார்முளரி சாந்தணி மார்பினொடு
     தோய்ந்துருகா அறிவு ...... தடுமாறி

ஏங்கிட ஆருயிரை வாங்கிய காலன்வசம்
     யான்தனி போய் விடுவதியல்போ தான்

காந்தளின் ஆனகர மான்தரு கானமயில்
     காந்த விசாக சரவண....வேளே

காண்தகு தேவர்பதி ஆண்டவனே சுருதி
     ஆண்டகையே இபமின் ...... மணவாளா

வேந்த குமார குக சேந்த மயூர வட
     வேங்கட மாமலையில் ...... உறைவோனே

வேண்டிய போதடியர் வேண்டிய போகமது
     வேண்ட வெறாதுதவு ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனதாந்தன தானன தானன
     தனதாந்தன தானன தானன
          தனதாந்தன தானன தானன ...... தனதான

வரிசேர்ந்திடு சேல்கயலோ எனும்
     உழைவார்ந்திடு வேலையும் நீலமும்
          வடுவாங்கிடு வாள்விழி மாதர்கள் ...... வலையாலே

வளர்கோங்கிள மாமுகையாகிய
     தன வாஞ்சையிலே முக மாயையில்
          வள மாந்தளிர் போல் நிறமாகிய ...... வடிவாலே

இருள் போன்றிடுவார் குழல் நீழலில்
     மயல் சேர்ந்திடு பாயலின் மீதுற
          இனிதாம்கனி வாய் அமுதூறல்கள் ...... பருகாமே

எனதாம் தனதானவை போயற
     மலமாம் கடு மோக விகாரமும்
          இவை நீங்கிடவே இருதாளினை ...... அருள்வாயே

கரிவாம்பரி தேர் திரள் சேனையும்
     உடனாம் துரியோதனனாதிகள்
          களமாண்டிடவே ஒரு பாரதம் அதிலேகிக்

கனபாண்டவர் தேர் தனிலேஎழு
     பரிதூண்டிய சாரதியாகிய
          கதிரோங்கிய நேமியனாம்அரி ...... ரகுராமன்

திரைநீள்திரை வாரியும் வாலியும்
     நெடிதோங்கு மராமரம் ஏழொடு
          தெசமாம்சிர ராவணனார்முடி ...... பொடியாகச்

சிலை வாங்கிய நாரணனார் !மரு
     மகனாம் குகனே பொழில் சூழ்தரு
          திருவேங்கட மாமலை மேவிய ...... பெருமாளே.

(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


3 comments: