Monday, May 28, 2018

ஸ்ரீசைலம் (திருமலை)

(வட நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: வட நாடு

மாவட்டம்: கர்னூல் மாவட்டம் (ஆந்திர மாநிலம்):

திருக்கோயில்: அருள்மிகு பிரமாரம்பா தேவி சமேத ஸ்ரீமல்லிகார்ஜுன சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

பன்னிரு ஜோதிர் லிங்க ஷேத்திரங்களுக்குள் ஒன்றாகப் போற்றப் பெறும் திருத்தலம். தேவார மூவரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. ஞானசம்பந்த மூர்த்தியும், சுந்தர மூர்த்தி சுவாமிகளும் திருக்காளத்தியிலிருந்து அகக் கண்களால் திருப்பருப்பதம் எனும் இத்தலத்தினைத் தரிசித்துப் போற்றியுள்ளனர். நாவுக்கரசு சுவாமிகள் நேரில் ஸ்ரீசைல ஷேத்திரத்தினைத் தரிசித்துப் பரவியுள்ளார். 

மல்லிகார்ஜுனப் பரம்பொருள் சிறிய திருமேனியராய் மூலக் கருவறையில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். அனுதினமும் குறிப்பிட்ட 1 மணி நேரத்திற்கு (மதியம் 2.15 முதல் 3.15 மணி வரையில்) பக்தர்கள் யாவரும் சிவலிங்கத் திருமேனியைத் தங்கள் கரங்களாலேயே ஸ்பரிசித்து வழிபாடு செய்து மகிழலாம். மூல மூர்த்தியின் சன்னிதியினின்றும் வெளிப்பட்டு அம்பிகையின் சன்னிதிக்குச் செல்வதற்கு முன்னர் இடையிலுள்ள வழியில் நுழைந்துப் பிற சன்னிதிகளைத் தரிசித்து விட வேண்டும். அம்பிகை சன்னிதிக்கு நேரே சென்று விட்டால் அதன் பின்னர் ஆலய வளாகத்தின் இப்பகுதிக்கு மீண்டும் வர இயலாது. 

ஆறுமுக தெய்வம் 'குமார சுவாமி' எனும் திருநாமத்தில், ஆறு திருமுகங்களுடன், பத்து திருக்கரங்களில் ஆயுதங்களுடனும், முன்னிரு திருக்கரங்களில் சின்முத்திரை மற்றும் அபய ஹஸ்தத்துடனும், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆறு திருமுகங்களும் நேர்க்கோட்டில் அமைந்திருப்பது பிற ஆலயங்களில் கண்டிராத தனித்துவமான திருக்கோலம். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார் (ஸ்ரீசைல ஷேத்திரத்தினைத் 'திருமலை' என்று குறித்துப் போற்றியுள்ளார்).  

உமையன்னை பிரமாரம்பா தேவி எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள். 

ஆலயத்திலிருந்து சுமார் 1 - 1/2 கி.மீ தூரத்தில் பாதாள கங்கை தீர்த்தத்திற்கு இட்டுச் செல்லும் மார்க்கம் அமைந்துக்ள்ளது. வின்ச் மூலம் ஸ்ரீசைல பர்வதத்தின் இயற்கைச் சூழலைத் தரிசித்தவாறே கீழிறங்கிப் புண்ணியப் புனலினை அடைந்து நீராடலாம். 

ஆலயத்திலிருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் (ஸ்ரீசைலத்திலிருந்து புறப்பட்டுச் செல்லும் பாதை மார்க்கத்தில்) 'சிகர தரிசனம்' எனும் இடம் அமைந்துள்ளது. இச்சிகர உச்சியிலிருந்து 4 நிலை கோபுரங்களோடு கூடிய ஸ்ரீசைல ஷேத்திரத்தினையும் திருக்கோயிலையும் தரிசிப்பவர்க்கு மறுபிறப்பில்லை என்று புராணங்கள் அறுதியிடுகின்றன. 

(Google Maps: Shiv Jyotirling Shri Mallikarjuna Temple @ Srisaila Devasthanam, Srisaila Devasthanam, Dt, Srisailam, Andhra Pradesh 518101)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதன தனதன தனதன தனதன
     தனதன தனதன ...... தனதான

ஒருபதும் இருபதும் அறுபதும் உடனறும்
     உணர்வுற இருபதம் உளநாடி

உருகிட முழுமதி தழலென ஒளிதிகழ்
     வெளியொடு ஒளிபெற ...... விரவாதே

தெருவினில் மரமென எவரொடும் உரைசெய்து
     திரிதொழில் அவமது ...... புரியாதே

திருமகள் மருவிய திரள்புய அறுமுக
     தெரிசனை பெறஅருள் ...... புரிவாயே

பரிவுடன் அழகிய பழமொடு கடலைகள்
     பயறொடு சிலவகை ...... பணியாரம்

பருகிடு பெருவயிறுடையவர் பழமொழி
     எழுதிய கணபதி ...... இளையோனே

பெருமலை உருவிட அடியவர் உருகிட
     பிணிகெட அருள்தரு ...... குமரேசா

பிடியொடு களிறுகள் நடையிட கலைதிரள்
     பிணையமர் திருமலை ...... பெருமாளே.


(2021 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment