Tuesday, July 31, 2018

கழுகு மலை:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: தூத்துக்குடி

திருக்கோயில்: அருள்மிகு கழுகாசல மூர்த்தி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்

கோவில்பட்டியிலிருந்தும், சங்கரன் கோயிலிலிருந்தும் 20 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது கழுகு மலை.

(Google Maps: Kalugumalai Murugan Koil, Temple Tank, Kalugumalai, Tamil Nadu 628552, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனன தனதனா தனத்த தானன
     தனன தனதனா தனத்த தானன
          தனன தனதனா தனத்த தானன ...... தனதான

குதலை மொழியினார் நிதிக்கொள்வார்அணி
     முலையை விலைசெய்வார் தமக்கு மாமயல்
          கொடிது கொடிததால் வருத்தமாயுறு ...... துயராலே

மதலை மறுகி வாலிபத்திலே வெகு
     பதகர் கொடியவாள் இடத்திலேமிக
          வறுமை புகல்வதே எனக்குமோஇனி ...... முடியாதே

முதல வரிவிலோடெதிர்த்த சூருடல்
     மடிய அயிலையே விடுத்தவா கரு
          முகிலை அனையதா நிறத்த மால்திரு ...... மருகோனே

கதலி கமுகுசூழ் வயற்குளேஅளி
     இசையை முரல மாஅறத்தில் மீறிய
          கழுகு மலைமகா நகர்க்குள் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனதன தத்தத் தனத்த தானன
     தனதன தத்தத் தனத்த தானன
          தனதன தத்தத் தனத்த தானன ...... தனதான

முலையை மறைத்துத் திறப்பர் ஆடையை
     நெகிழ உடுத்துப் படுப்பர் வாயிதழ்
          முறைமுறை முத்திக் கொடுப்பர் பூமலர் அணைமீதே

அலைகுலையக் கொட்டணைப்பர் ஆடவர்
     மனவலியைத் தட்டழிப்பர் மால்!பெரி
          தவர்பொருளைக் கைப்பறிப்பர் வேசைகள் உறவாமோ

தலைமுடி பத்துத்தெறித்து ராவணன் 
     உடல்தொளை பட்டுத் துடிக்கவேயொரு
          தநுவை வளைத்துத் தொடுத்த வாளியன் ...... மருகோனே

கலைமதிஅப்புத் தரித்த வேணியர் 
     உதவிய வெற்றித் திருக்கை வேலவ
          கழுகு மலைக்குள் சிறக்க மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தாந்த தனன தனன தாந்த தனன தனன
     தாந்த தனன தனனந் ...... தனதான

கோங்க முகையும் மெலிய வீங்கு புளக களபம் 
     ஏந்தும் குவடு குழையும் ...... படிகாதல்

கூர்ந்து குழையை அமளி தோய்ந்து குலவுமினிய
     தேங்கு கலவி அமுதுண்டியல்மாதர்

வாங்கு பகழி விழியை மோந்து பகலுமிரவும்
     வாய்ந்த துயிலை மிகவும் ...... தணியாத

வாஞ்சையுடைய அடிமை நீண்ட பிறவியலையை
     நீந்தி அமல அடிவந்தடைவேனோ

ஓங்கலனைய பெரிய சோங்கு தகர மகரம் 
     ஓங்கு ததியின் முழுகும் ...... பொருசூரும்

ஓய்ந்து பிரமன் வெருவ வாய்ந்த குருகு மலையில்
     ஊர்ந்து மயிலதுலவும் ..... தனிவேலா

வேங்கை அடவி மறவர் ஏங்க வனிதை உருக
     வேங்கை வடிவு மருவும்  ...... குமரேசா

வேண்டும் அடியர் புலவர் வேண்ட அரிய பொருளை
     வேண்டும் அளவில் உதவும் ...... பெருமாளே.


No comments:

Post a Comment