Friday, July 27, 2018

இராமேசுரம்

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: ராமநாதபுரம் 

திருக்கோயில்: அருள்மிகு இராமநாத சுவாமி திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞான சம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

மதுரையிலிருந்து 172 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது, ராமநாதபுரத்திலிருந்து 56 கி.மீ தூரத்திலும், ராமேஸ்வரம் இரயில் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திலும் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

(Google Maps: Arulmigu Ramanathaswamy Temple, Rameswaram, Tamil Nadu 623526, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானதன தானதன தானதன தானதன
     தானதன தானதன தானதன தானதன
          தானதன தானதன தானதன தானதன ...... தனதான

வாலவயதாகி அழகாகி மதனாகிபணி
     வாணிபமொடாடி மருளாடி விளையாடிவிழல்
          வாழ்வு சதமாகி வலுவாகி மட கூடமொடு ...... பொருள்தேடி

வாசபுழு கேடுமலரோடு மனமாகிமகிழ்
     வாசனைகள் ஆதியிடலாகி மயலாகிவிலை
          மாதர்களை மேவிஅவர் ஆசைதனிலே சுழல ...... சிலநாள்போய்த்

தோல்திரைகளாகி நரையாகி குருடாகியிரு
     கால்கள் தடுமாறிசெவி மாறிபசு பாசபதி
          சூழ்கதிகள் மாறி சுகமாறி தடியோடுதிரி ...... உறுநாளில் 

சூலைசொறி ஈளைவலி வாதமொடு நீரிழிவு
     சோகைகள மாலை சுரமோடுபிணி தூறிருமல்
          சூழலுற மூல கசுமாலமென நாறியுடல் அழிவேனோ

நாலுமுகன் ஆதியரி ஓமென அதாரம்!உரை
     யாதபிரமாவை விழ மோதிபொருள் ஓதுகென
          நாலுசிரமோடு சிகை தூளிபட தாளமிடும் இளையோனே

நாறிதழி வேணிசிவ ரூப கலியாணிமுதல் 
     ஈணமகவானை மகிழ் தோழ வன மீதுசெறி
          ஞானகுற மாதைதின காவில்மண மேவுபுகழ் ...... மயில்வீரா

ஓலமிடு தாடகை சுவாகுவளர் ஏழுமரம்
     வாலியொடு நீலி பகனோடொரு விராதன்எழும் 
          ஓத கடலோடுவிறல் ராவணகுழாம்அமரில் ...... பொடியாக

ஓகைதழல் வாளிவிடு மூரிதநு நேமிவளை
     பாணிதிரு மார்பன்அரிகேசன் மருகா எனவெ
          ஓதமறை ராமெசுரம் மேவு குமரா அமரர் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தானா தனத்ததன தானா தனத்ததன
     தானா தனத்ததன ...... தனதான

வானோர் வழுத்துனது பாதார பத்மமலர்
     மீதே பணிக்கும்வகை ...... அறியாதே

மானார் வலைக்கணதிலே தூளிமெத்தையினில் 
     ஊடே அணைத்துதவும் அதனாலே

தேனோ கருப்பிலெழு பாகோ இதற்கிணைகள் 
     ஏதோ எனக்கலவி ...... பலகோடி

தீரா மயக்கினொடு நாகா படத்திலெழு
     சேறாடல் பெற்றதுயர் ஒழியேனோ

மேனாடு பெற்றுவளர் சூராதிபற்கெதிரின் 
     ஊடேகி நிற்குமிரு ...... கழலோனே

மேகார உக்ரபரி தானேறி வெற்றிபுனை
     வீரா குறச்சிறுமி ...... மணவாளா

ஞானா பரற்கினிய வேதாகமப் பொருளை
     நாணாதுரைக்குமொரு ...... பெரியோனே

நாராயணற்கு மருகா வீறுபெற்றிலகு
     ராமேசுரத்திலுறை ...... பெருமாளே.

No comments:

Post a Comment