Sunday, July 29, 2018

இலஞ்சி:

(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: பாண்டிய நாடு 

மாவட்டம்: திருநெல்வேலி 

திருக்கோயில்: அருள்மிகு இலஞ்சி குமாரர் திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

தென்காசியிலிருந்து 6 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்தலம்.

இத்தலத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் மற்றொரு திருப்புகழ் தலமான ஆய்க்குடி முருகன் திருக்கோயில் அமைந்துள்ளது.

(Google Maps: Shri Ilanji Kumarar Koil Temple, Tamil Nadu 627802, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனந்த தனதன தனந்த தனதன
     தனந்த தனதன ...... தனதான

கரம்கமல மினதரம் பவளம்வளை
     களம் பகழிவிழி ...... மொழிபாகு

கரும்பமுது முலை குரும்பை குருகு!ப
     கரும் பிடியினடை ...... எயின்!மாதோ

டரங்க நககன தனம் குதலையிசை
     அலங்க நியமுற ...... மயில்மீதே

அமர்ந்து பவவினை களைந்து வரு!கொடி
     யஅந்தகனகல ...... வருவாயே

தரங்கம் முதிய மகரம் பொருததிரை
     சலந்தி நதிகுமரென வான

தலம்பரவ மறை புலம்ப வருசிறு
     சதங்கை அடிதொழுபவர் ஆழி

இரங்கு தொலைதிருவரங்கர் மருக!ப
     னிரண்டு புயமலை ...... கிழவோனே

இலங்கு தரதமிழ் விளங்க வருதிரு
     இலஞ்சி மருவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தந்தன தான தனந்தன தானத்
     தந்தன தான தனந்தன தானத்
          தந்தன தான தனந்தன தானத் ...... தனதான

கொந்தள ஓலை குலுங்கிட வாளிச்
     சங்குடனாழி கழன்றிட மேகக்
          கொண்டைகள் மாலை சரிந்திட வாசப் ...... பனிநீர்சேர்

கொங்கைகள் மார்பு குழைந்திட வாளிக்
     கண்கயல் மேனி சிவந்திட கோவைக்
          கொஞ்சிய வாய் இரசம்கொடு மோகக் ...... கடலூடே

சந்திர ஆரம் அழிந்திட நூலில் 
     பங்கிடைஆடை துவண்டிட நேசத்
          தந்திட மாலு(ம்) ததும்பியும் மூழ்குற்றிடு போதுன்

சந்திர மேனி முகங்களும் நீலச்
     சந்த்ரகி மேல்கொடமர்ந்திடு பாதச்
          சந்திர வாகு சதங்கையுமோ சற்றருள்வாயே

சுந்தரர் பாடல்உகந்திரு தாளைக்
     கொண்டுநல் தூது நடந்தவர்ஆகத்
          தொந்தமொடாடி இருந்தவள் ஞானச் ...... சிவகாமி

தொண்டர்கள் ஆகம்அமர்ந்தவள் நீலச்
     சங்கரி மோக சவுந்தரி கோலச்
          சுந்தரி காளி பயந்தருள் ஆனைக்கிளையோனே

இந்திர வேதர் பயங்கெட சூரைச்
     சிந்திட வேல்கொடெறிந்து நல்!தோகைக்
          கின்புற மேவியிருந்திடு வேதப் ...... பொருளோனே

எண்புன மேவியிருந்தவள் மோகப்
     பெண் திருவாளை மணந்தியலார்!சொற்
          கிஞ்சிஅளாவும் இலஞ்சி விசாகப் ...... பெருமாளே

திருப்பாடல் 3:
தனந்தன தந்த தனந்தன தந்த
     தனந்தன தந்த ...... தனதானா

சுரும்பணி கொண்டல் நெடுங்குழல் கண்டு
     துரந்தெறிகின்ற ...... விழிவேலால்

சுழன்றுசுழன்று துவண்டுதுவண்டு
     சுருண்டு மயங்கி ...... மடவார்தோள்

விரும்பி வரம்பு கடந்து நடந்து
     மெலிந்து தளர்ந்து ...... மடியாதே

விளங்கு கடம்பு விழைந்தணி தண்டை
     விதங்கொள் சதங்கை ...... அடிதாராய்

பொருந்தல் அமைந்துசிதம் பெற நின்ற
     பொனங்கிரி ஒன்றை ...... எறிவோனே

புகழ்ந்து மகிழ்ந்து வணங்கு குணங்கொள்
     புரந்தரன் வஞ்சி ...... மணவாளா

இரும்புன மங்கை பெரும் புளகம்செய்
     குரும்பை மணந்த ...... மணிமார்பா

இலஞ்சியில் வந்த இலஞ்சியமென்று
     இலஞ்சியமர்ந்த ...... பெருமாளே

திருப்பாடல் 4:
தான தனந்த தான தனந்த
     தனா தனந்த ...... தனதான

மாலையில் வந்து மாலை வழங்கு
     மாலை அநங்கன் ...... மலராலும்

வாடையெழுந்து வாடை செறிந்து
     வாடையெறிந்த ...... அனலாலும்

கோலமழிந்து சால மெலிந்து
     கோமள வஞ்சி ...... தளராமுன்

கூடிய கொங்கை நீடிய அன்பு
     கூரவுமின்று ...... வரவேணும்

காலன் நடுங்க வேலது கொண்டு
     கானில் நடந்த ...... முருகோனே

கான மடந்தை நாணமொழிந்து
     காதலிரங்கு ...... குமரேசா

சோலை வளைந்து சாலி விளைந்து
     சூழும் இலஞ்சி ...... மகிழ்வோனே

சூரியனஞ்ச வாரியில் வந்த
     சூரனை வென்ற ...... பெருமாளே

No comments:

Post a Comment