(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: பாண்டிய நாடு
மாவட்டம்: மதுரை
திருக்கோயில்: அருள்மிகு பரங்கிரிநாதர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
மதுரையிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இத்திருக்கோயில். முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் ஒன்றாகத் திகழும் தலம்.
(Google Maps: Thirupparamkunram Murugan Temple, Thiruparankundram, Tamil Nadu 625005, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 14.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
அருக்கு மங்கையர் மலரடி வருடியே
கருத்தறிந்துபின் அரைதனில் உடைதனை
அவிழ்த்தும் அங்குள அரசிலை தடவியும் ...... இருதோள்!உற்
றணைத்தும் அங்கையின் அடிதொறும் நகமெழ
உதட்டை மென்றுபல் இடுகுறிகளும் இட
அடிக்களந்தனில் மயில்குயில் புறவென ...... மிக வாய்!விட்
டுருக்கும் அங்கியின் மெழுகென உருகிய
சிரத்தை மிஞ்சிடும் அநுபவம் உறுபலம்
உறக் கையின்கனி நிகரென இலகிய ...... முலைமேல் !வீழ்ந்
துருக் கலங்கிமெய் உருகிட அமுதுகு
பெருத்த உந்தியின் முழுகி மெயுணர்வற
உழைத்திடுங்கன கலவியை மகிழ்வது ...... தவிர்வேனோ
இருக்கு மந்திரம் எழுவகை முநிபெற
உரைத்த சம்ப்ரம சரவண பவகுக
இதத்த இங்கிதம் இலகிய அறுமுக ...... எழில்வேள்!என்
றிலக்கணங்களும் இயலிசைகளும் மிக
விரிக்கும் அம்பல மதுரித கவிதனை
இயற்று செந்தமிழ் விதமொடு புயமிசை ...... புனைவோனே
செருக்கும் அம்பல மிசைதனில் அசைவுற
நடித்த சங்கரர் வழிவழி அடியவர்
திருக்குருந்தடி அருள்பெற அருளிய ...... குருநாதர்
திருக்குழந்தையும் எனஅவர் வழிபடு
குருக்களின் திறம் எனவரு பெரியவ
திருப்பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
உனைத்தினம் தொழுதிலன் உனதியல்பினை
உரைத்திலன்பல மலர்கொடுன் அடியிணை
உறப் பணிந்திலன் ஒருதவமிலன் உனதருள் மாறா
உளத்துள் அன்பினர் உறைவிடம் அறிகிலன்
விருப்பொடுன் சிகரமும் வலம் வருகிலன்
உவப்பொடுன் புகழ் துதிசெய விழைகிலன் ...... மலைபோலே
கனைத்தெழும் பகடது பிடர் மிசைவரு
கறுத்த வெஞ்சின மறலிதன் உழையினர்
கதித்தடர்ந்தெறி கயிறடு கதைகொடு ...... பொருபோதே
கலக்குறுஞ்செயல் ஒழிவற அழிவுறு
கருத்து நைந்தலமுறு பொழுதளவை கொள்
கணத்தில் என்பயம் அறமயில் முதுகினில் ...... வருவாயே
வினைத் தலந்தனில் அலகைகள் குதிகொள
விழுக்குடைந்து மெய் உகுதசை கழுகுண
விரித்த குஞ்சியர் எனும் அவுணரைஅமர் ...... புரிவேலா
மிகுத்த பண்பயில் குயில்மொழி அழகிய
கொடிச்சி குங்கும முலைமுகடுழு நறை
விரைத்த சந்தன ம்ருகமத புயவரை ...... உடையோனே
தினத்தினம் சதுர் மறைமுநி முறைகொடு
புனல்சொரிந்தலர் பொதிய விணவரொடு
சினத்தை நிந்தனை செயு முநிவரர்தொழ ...... மகிழ்வோனே
தெனத்தெனந்தன எனவரி அளிநறை
தெவிட்ட அன்பொடு பருகுயர் பொழில்திகழ்
திருப்பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த
தனனதந்த தத்தத்த தந்த ...... தனதான
கருவடைந்து பத்துற்ற திங்கள்
வயிறிருந்து முற்றிப் பயின்று
கடையில் வந்துதித்துக் குழந்தை ...... வடிவாகிக்
கழுவி அங்கெடுத்துச் சுரந்த
முலையருந்து விக்கக் கிடந்து
கதறியங்கை கொட்டித் தவழ்ந்து ...... நடமாடி
அரைவடங்கள் கட்டிச் சதங்கை
இடு குதம்பை பொற்சுட்டி தண்டை
அவையணிந்து முற்றிக் கிளர்ந்து ...... வயதேறி
அரியபெண்கள் நட்பைப் புணர்ந்து
பிணியுழன்று சுற்றித் திரிந்த
தமையுமுன் க்ருபைச்சித்தம் என்று ...... பெறுவேனோ
இரவிஇந்த்ரன் வெற்றிக் குரங்கின்
அரசரென்றும் ஒப்பற்ற உந்தி
இறைவன் எண்கினக் கர்த்தனென்றும் ...... நெடுநீலன்
எரியதென்றும் ருத்ரற் சிறந்த
அநுமனென்றும் ஒப்பற்ற அண்டர்
எவருமிந்த வர்க்கத்தில் வந்து ...... புனமேவ
அரியதன் படைக் கர்த்தரென்று
அசுரர்தம் கிளைக்கட்டை வென்ற
அரிமுகுந்தன் மெச்சுற்ற பண்பின் ...... மருகோனே
அயனையும் புடைத்துச் சினந்து
உலகமும் படைத்துப் பரிந்து
அருள் பரங்கிரிக்குள் சிறந்த ...... பெருமாளே
திருப்பாடல் 4:
தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
கறுக்கும் அஞ்சன விழியிணை அயில்கொடு
நெருக்கி நெஞ்சற எறிதரு பொழுதொரு
கனிக்குள் இன்சுவை அமுதுகும் ஒருசிறு ...... நகையாலே
களக்கொழுங்கலி வலைகொடு விசிறியெ
மனைக்கெழுந்திரும் எனமனம் உருகஒர்
கவற்சி கொண்டிட மனைதனில் அழகொடு ...... கொடுபோகி
நறைத்த பஞ்சணை மிசையினில் மனமுற
அணைத்தகந்தனில் இணைமுலை எதிர்பொர
நகத்தழுந்திட அமுதிதழ் பருகியும் இடறூடே
நடித்தெழும்குரல் குமுகுமு குமுவென
இசைத்து நன்கொடு மனமது மறுகிட
நழுப்பு நஞ்சன சிறுமிகள் துயரற ...... அருள்வாயே
நிறைத்த தெண்திரை மொகுமொகு மொகுவென
உரத்த கஞ்சுகி முடிநெறு நெறுவென
நிறைத்த அண்டமும் கடுகிடு கிடுவென ...... வரைபோலும்
நிவத்த திண்கழல் நிசிசரர் உரமொடு
சிரக்கொடுங்குவை மலைபுரை தரஇரு
நிணக்குழம்பொடு குருதிகள் சொரிதர ...... அடுதீரா
திறற்கருங்குழல் உமையவள் அருளுறு
புழைக்கை தண்கட கயமுக மிகவுள
சிவக்கொழுந்தன கணபதி உடன்வரும் ...... இளையோனே
சினத்தொடுஞ்சமன் உதைபட நிறுவிய
பரற்குள் அன்புறு புதல்வநன் மணியுகு
திருப்பரங்கிரி தனிலுறை சரவண ...... பெருமாளே
திருப்பாடல் 5:
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
கனகந்திரள்கின்ற பெருங்கிரி
தனில்வந்து தகன்தகன் என்றிடு
கதிர்மிஞ்சிய செண்டை எறிந்திடு ...... கதியோனே
கடமிஞ்சி அநந்த விதம்புணர்
கவளந்தனை உண்டு வளர்ந்திடு
கரியின்றுணை என்று பிறந்திடு ...... முருகோனே
பனகந்துயில்கின்ற திறம்புனை
கடல்முன்பு கடைந்த பரம்பரர்
படரும்புயல் என்றவர் அன்புகொள் ...... மருகோனே
பலதுன்பம் உழன்று கலங்கிய
சிறியன் புலையன் கொலையன்புரி
பவமின்று கழிந்திட வந்தருள் ...... புரிவாயே
அனகன்பெயர் நின்றுருளும்!திரி
புரமும்திரி வென்றிட இன்புடன்
அழலுந்த நகுந்திறல் கொண்டவர் ...... புதல்வோனே
அடல்வந்து முழங்கியிடும் பறை
டுடுடுண்டுடு டுண்டுடு டுண்டென
அதிர்கின்றிட அண்ட நெரிந்திட ...... வருசூரர்
மனமுந்தழல் சென்றிட அன்றவர்
உடலும் குடலும்கிழி கொண்டிட
மயில்வென்றனில் வந்தருளும்கன ...... பெரியோனே
மதியும் கதிரும் தடவும்படி
உயர்கின்ற வனங்கள் பொருந்திய
வளமொன்று பரங்கிரி வந்தருள் ...... பெருமாளே
திருப்பாடல் 6:
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன
தானன தந்தன தந்தனந் தந்தன ...... தனதான
காதடருங்கயல் கொண்டிசைந்தைம் பொறி
வாளிமயங்க மனம்பயம் தந்திருள்
கால்தர விந்து விசும்பிலங்கும் பொழுதொரு கோடி
காய்கதிர்என்றொளிர் செஞ்சிலம்பும்!கணை
யாழியுடன் கடகம் துலங்கும்படி
காமனெடுஞ்சிலை கொண்டடர்ந்தும் பொரு ...... மயலாலே
வாது புரிந்தவர் செங்கை !தந்திங்கித
மாக நடந்தவர் பின்திரிந்தும் தன
மார்பிலழுந்த அணைந்திடும் துன்பமதுழலாதே
வாசமிகுந்த கடம்பமென் கிண்கிணி
மாலை கரங்கொளும் அன்பர் வந்தன்பொடு
வாழ நிதம்புனையும் பதம் தந்துனதருள்தாராய்
போதில் உறைந்தருள்கின்றவன் செஞ்சிரம்
மீது தடிந்து விலங்கிடும் புங்கவ
போத வளம்சிவ சங்கரன் கொண்டிட ...... மொழிவோனே
பூகமுடன்திகழ் சங்கினங்கொண்ட!கி
ரீவ மடந்தை புரந்தரன் தந்தருள்
பூவை கருங்குற மின்கலம் தங்கு பனிருதோளா
தீதகம் ஒன்றினர் வஞ்சகம் !துஞ்சியி
டாதவர் சங்கரர் தந்ததென்பும் பல
சேர் நிருதன்குலம் அஞ்சமுன் சென்றடு ...... திறலோனே
சீதள முந்து மணம் தயங்கும்பொழில்
சூழ்தர விஞ்சைகள் வந்திறைஞ்சும் பதி
தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தந்தனந் தந்தத் ...... தனதான
தந்தனந் தந்தத் ...... தனதான
சந்ததம் பந்தத் ...... தொடராலே
சஞ்சலம் துஞ்சித் ...... திரியாதே
கந்தன் என்றென்றுற்றுனை நாளும்
கண்டு கொண்டன்புற்றிடுவேனோ
தந்தியின் கொம்பைப் ...... புணர்வோனே
சங்கரன் பங்கிற் ...... சிவைபாலா
செந்திலங்கண்டிக் ...... கதிர்வேலா
தென்பரங்குன்றில் ...... பெருமாளே.
திருப்பாடல் 8:
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன
தனதந்தன தந்தன தந்தன ...... தனதான
சருவும்படி வந்தனன் இங்கித
மதன்நின்றிட அம்புலியும்சுடு
தழல்கொண்டிட மங்கையர் கண்களின் ...... வசமாகிச்
சயிலங்கொளு மன்றல் பொருந்திய
பொழிலின்பயில் தென்றலும் ஒன்றிய
தடவஞ்சுனை துன்றியெழுந்திட ...... திறமாவே
இரவும்பகல் அந்தியும் நின்றிடு
குயில்வந்திசை தெந்தன என்றிட
இருகண்கள் துயின்றிடல் இன்றியும் ...... அயர்வாகி
இவணெஞ்சு பதன்பதன் என்றிட
மயல்கொண்டு வருந்திய வஞ்சகன்
இனிஉந்தன் மலர்ந்திலகும் பதம் ...... அடைவேனோ
திருவொன்றி விளங்கிய அண்டர்கள்
மனையின்தயிர் உண்டவன் எண்திசை
திகழும்புகழ் கொண்டவன் வண்டமிழ் ...... பயில்வோர்பின்
திரிகின்றவன் மஞ்சு நிறம்புனை
பவன்மிஞ்சு திறங்கொள வென்றடல்
செயதுங்க முகுந்தன் மகிழ்ந்தருள் ...... மருகோனே
மருவுங்கடல் துந்திமியும்குட
முழவங்கள் குமின் குமினென்றிட
வளமொன்றிய செந்திலில் வந்தருள் ...... முருகோனே
மதியும் கதிரும் புயலும்தின
மறுகும்படி அண்டம் இலங்கிட
வளர்கின்ற பரங்கிரி வந்தருள் ...... பெருமாளே
திருப்பாடல் 9:
தனத்தத் தந்தனந் தனத்தத் தந்தனந்
தனத்தத் தந்தனந் ......தனதான
தடக்கைப் பங்கயம் கொடைக்குக் கொண்டல்!தண்
தமிழ்க்குத் தஞ்சமென்றுலகோரைத்
தவித்துச் சென்றிரந்துளத்திற் புண்படும்
தளர்ச்சிப் பம்பரம் ...... தனையூசல்
கடத்தைத் துன்பமண் சடத்தைத் துஞ்சிடும்
கலத்தைப் பஞ்சஇந்த்ரிய வாழ்வைக்
கணத்தில் சென்றிடம் திருத்தித் தண்டையம்
கழற்குத் தொண்டு கொண்டருள்வாயே
படைக்கப் பங்கயன் துடைக்கச் சங்கரன்
புரக்கக் கஞ்சைமன் ...... பணியாகப்
பணித்துத் தம்பயம் தணித்துச் சந்ததம்
பரத்தைக் கொண்டிடும் ...... தனிவேலா
குடக்குத் தென்பரம் பொருப்பில் தங்கும்!அங்
குலத்தில் கங்கைதன் ...... சிறியோனே
குறப்பொற் கொம்பைமுன் புனத்தில் செங்கரம்
குவித்துக் கும்பிடும் ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந்
தனத்ததந் தந்தத் தத்தன தத்தந் ...... தனதான
பதித்தசெஞ் சந்தப் பொற்குட நித்தம்
பருத்துயர்ந்தண்டத்தில் தலை முட்டும்
பருப்பதம் தந்தச் செப்பவை ஒக்கும் ...... தனபாரம்
படப்புயங்கம் பல் கக்கு கடுப்பண்
செருக்கு வண்டம்பப்பில் கயல் ஒக்கும்
பருத்தகண் கொண்டைக் கொக்கும் இருட்டென்றிளைஞோர்கள்
துதித்துமுன் !கும்பிட்டுற்றதுரைத்தன்
புவக்க நெஞ்சஞ்சச் சிற்றிடை சுற்றும்
துகில்களைந்தின்பத் துர்க்கம் அளிக்கும் ...... கொடியார்பால்
துவக்குணும் பங்கப் பித்தன் அவத்தன்
புவிக்குளென் சிந்தைப் புத்தி மயக்கம்
துறக்கநின் தண்டைப் பத்மம் எனக்கென்றருள்வாயே
குதித்துவெண் சங்கத்தைச் சுறவெற்றும்
கடல் கரந்தஞ்சிப் புக்க அரக்கன்
குடல் சரிந்தெஞ்சக் குத்தி விதிர்க்கும் ...... கதிர்வேலா
குலக்கரும்பின் சொற்றத்தை இபப்பெண்
தனக்கு வஞ்சம் சொற் பொச்சை இடைக்கும்
குகுக்குகும் குங்குக் குக்குகு குக்கும் ...... குகுகூகூ
திதித்திதிந் தித்தித் தித்தியெனக் !கொம்
பதிர்த்துவெண் சண்டக் கட்கம் விதிர்த்தும்
திரள் குவிந்தங்கண் பொட்டெழ வெட்டும் ...... கொலைவேடர்
தினைப்புனம் சென்றிச்சித்த பெணைக்!கண்
டுருக்கரந்தங்குக் கிட்டி அணைத்தொள்
திருப்பரங்குன்றில் புக்குளிருக்கும் ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தனத்தனந் தந்தன தனத்தனந் தந்தன
தனத்தனந் தந்தன ...... தந்ததான
பொருப்புறும் கொங்கையர் பொருள் கவர்ந்தொன்றிய
பிணக்கிடும் சண்டிகள் ...... வஞ்சமாதர்
புயல் குழன்றம்கமழ் அறல் குலம் தங்கவிர்
முருக்குவண் செந்துவர் ...... தந்துபோகம்
அருத்திடும் சிங்கியர் தருக்கிடும் செங்கயல்
அறச் சிவந்தங்கையில் ...... அன்புமேவும்
அவர்க்குழன்றங்கமும் அறத்தளர்ந்தென் பயன்
அருட்பதம் பங்கயம் ...... அன்புறாதோ
மிருத்தணும் பங்கயன் அலர்க்கணன் சங்கரர்
விதித்தெணும் கும்பிடு ...... கந்தவேளே
மிகுத்திடும் வன்சமணரைப் பெரும் திண்கழு
மிசைக்கிடும் செந்தமிழ் ...... அங்கவாயா
பெருக்குதண் சண்பக வனத்திடம் கொங்கொடு
திறல்செழும் சந்தகில் ...... துன்றிநீடு
தினைப்புனம் பைங்கொடி தனத்துடன் சென்றணை
திருப்பரங்குன்றுறை ...... தம்பிரானே.
திருப்பாடல் 12:
தந்தனந் தந்ததன தந்தனந் தந்ததன
தந்தனந் தந்ததன ...... தனதான
மன்றலம் கொந்துமிசை தெந்தனத் தெந்தனென
வண்டினம் கண்டுதொடர் ...... குழல்மாதர்
மண்டிடும் தொண்டைஅமுதுண்டு கொண்டன்புமிக
வம்பிடும் கும்பகன ...... தனமார்பில்
ஒன்றஅம் பொன்றுவிழி கன்ற அங்கம்குழைய
உந்தியென்கின்ற மடு ...... விழுவேனை
உன்சிலம்பும் கனக தண்டையும் கிண்கிணியும்
ஒண்கடம்பும் புனையும் ...... அடிசேராய்
பன்றியம் கொம்பு கமடம் புயங்கம் சுரர்கள்
பண்டை என்பங்கம் அணிபவர்சேயே
பஞ்சரம் கொஞ்சுகிளி வந்து வந்தைந்து கர
பண்டிதன் தம்பியெனும் ...... வயலூரா
சென்றுமுன் குன்றவர்கள் தந்தபெண் கொண்டுவளர்
செண்பகம் பைம்பொன்மலர் ...... செறிசோலை
திங்களும் செங்கதிரு மங்குலும் தங்குமுயர்
தென்பரம் குன்றிலுறை ...... பெருமாளே.
திருப்பாடல் 13:
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன
தனத்த தந்தன தனதன தனதன ...... தனதான
வடத்தை மிஞ்சிய புளகித வனமுலை
தனைத் திறந்தெதிர் வருமிளைஞர்கள் உயிர்
மயக்கி ஐங்கணை மதனனை ஒருஅருமையினாலே
வருத்தி வஞ்சக நினைவொடு மெலமெல
நகைத்து நண்பொடு வருமிரும் எனஉரை
வழுத்தி அங்கவரொடு சருவியும் உடல் ...... தொடுபோதே
விடத்தை வென்றிடு படைவிழி கொடும்உளம்
மருட்டி வண்பொருள் கவர்பொழுதினில் மயல்
விருப்பெனும்படி மடிமிசையினில்விழு ...... தொழில்தானே
விளைத்திடும்பல கணிகையர் தமதுபொய்
மனத்தை நம்பிய சிறியனை வெறியனை
விரைப்பதம்தனில் அருள்பெற நினைகுவதுளதோ தான்
குடத்தை வென்றிரு கிரியென எழில்தள
தளத்த கொங்கைகள் மணிவடம் அணிசிறு
குறக்கரும்பின்மெய் துவள்புயன் எனவரு ...... வடிவேலா
குரைக்கரும்கடல் திருஅணை எனமுனம்
அடைத்திலங்கையின் அதிபதி நிசிசரர்
குலத்தொடும்பட ஒருகணை விடும்அரி ...... மருகோனே
திடத்தெதிர்ந்திடும் அசுரர்கள் பொடிபட
அயில் கொடும்படை விடு சரவணபவ
திறல் குகன் குருபரனென வருமொரு ...... முருகோனே
செழித்த தண்டலை தொறும் இலகியகுட
வளைக்குலம் தரு தரளமும் மிகுமுயர்
திருப்பரங்கிரி வளநகர் மருவிய ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான
தனத்தனந் தந்த தான ...... தனதான
வரைத்தடம் கொங்கையாலும்
வளைப்படும் செங்கையாலும்
மதர்த்திடும் கெண்டையாலும் ...... அனைவோரும்
வடுப்படும் தொண்டையாலும்
விரைத்திடும் கொண்டையாலும்
மருட்டிடும் சிந்தை மாதர் ...... வசமாகி
எரிப்படும் பஞ்சு போல
மிகக்கெடும் தொண்டனேனும்
இனற்படும் தொந்த வாரி ...... கரையேற
இசைத்திடும் சந்த பேதம்
ஒலித்திடும் தண்டை சூழும்
இணைப்பதம் புண்டரீகம் ...... அருள்வாயே
சுரர்க்கு வஞ்சம் செய் சூரன்
இள க்ரவுஞ்சன் தனோடு
துளக்கெழுந்தண்ட கோளம் ...... அளவாகத்
துரத்தி அன்றிந்த்ர லோகம்
அழித்தவன் பொன்றுமாறு
சுடப்பரும் சண்ட வேலை ...... விடுவோனே
செருக்கெழுந்தும்பர் சேனை
துளக்க வென்றண்டம் ஊடு
தெழித்திடும் சங்க பாணி ...... மருகோனே
தினைப்புனம் சென்றுலாவு
குறத்திஇன்பம் பராவு
திருப்பரங்குன்ற மேவு ...... பெருமாளே
No comments:
Post a Comment