(பாண்டிய நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: பாண்டிய நாடு
மாவட்டம்: மதுரை
திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
மதுரை மாநகரிலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்துள்ள மலைக்கோயில், சிவகுமரனின் ஆறாம் படைவீடாகப் போற்றப் பெறுவது.
மலையடிவாரத்தில் கள்ளழகர் திருக்கோயிலும், மலையுச்சிக்குச் சற்று அருகாமையில் சோலைமலை எனும் பழமுதிர்ச்சோலை ஆலயமும், மலையுச்சியில் நூபுர கங்கை தீர்த்தமும் அமையப் பெற்றுள்ளது.
நாள் முழுதுமே ஆலயம் திறந்திருக்கின்றது, மற்ற நேரங்களில் வேலவனைச் சற்று தூரத்திலிருந்தும், வழிபாட்டுக் காலங்களில் மிகமிக அருகிலிருந்தும் தரிசிக்குமாறு அமைக்கப் பெற்றுள்ளது.
கருவறைப் பகுதியில் அருகருகே மூன்று திருச்சன்னிதிகளைத் தரிசிக்கலாம், இடதுபுறம் யானை முக வள்ளலான நம் விநாயகப் பெருமான் திருக்காட்சி தருகின்றார், நடுநாயகமாய் சோலைமலை வேலவன் இரு தேவியரோடு - மயில் பின்புறம் விளங்கியிருக்க - அற்புதத் தன்மையில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், வலது புறம் சிவஞானமேயான வேலாயுதத்தினைத் தனிச்சன்னிதியில் தரிசிக்கலாம்.
அருணகிரிப் பெருமானார் சோலைமலை கந்தப் பெருமானை 15 திருப்பாடல்களால் போற்றிப் பரவுகின்றார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 15.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதன தான தனதன தான தனதன தான ...... தனதான
அகரமுமாகி அதிபனுமாகி அதிகமுமாகி ...... அகமாகி
அயனெனவாகி அரியெனவாகி அரனெனவாகி ...... அவர்மேலாய்
இகரமுமாகி எவைகளுமாகி இனிமையுமாகி ...... வருவோனே
இருநில மீதில் எளியனும் வாழ எனது முனோடி ...... வரவேணும்
மகபதியாகி மருவும் வலாரி மகிழ்களி கூரும் ...... வடிவோனே
வனமுறை வேடன் அருளிய பூஜை மகிழ் கதிர்காமம் உடையோனே
செககண சேகு தகுதிமி தோதி திமியென ஆடு ...... மயிலோனே
திருமலிவான பழமுதிர் சோலை மலைமிசை மேவு ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனதன தான தான தனதன தான தான
தனதன தான தான ...... தனதான
இலவிதழ் கோதிநேதி மதகலை ஆரவார
இளநகையாட ஆடி ...... !மிகவாதுற்
றெதிர்பொரு கோர பார ம்ருகமத கோல கால
இணைமுலை மார்பிலேற ...... மதராஜன்
கலவியிலோடி நீடு வெகுவித தாக போக
கரண ப்ரதாப லீலை ...... மடமாதர்
கலவியின் மூழ்கியாழும் இழிதொழிலேனும் மீது
கருதிய ஞானபோதம் அடைவேனோ
கொலைபுரி காளி சூலி வயிரவி நீலி மோடி
குலிச குடாரி ஆயி ...... மகமாயி
குமரி வராகி மோகி பகவதி ஆதி சோதி
குணவதி ஆல ஊணி ...... அபிராமி
பலிகொள் கபாலி யோகி பரம கல்யாணி லோக
பதிவ்ரதை வேதஞானி ...... புதல்வோனே
படையொடு சூரன் மாள முடுகிய சூர தீர
பழமுதிர்சோலை மேவு ...... பெருமாளே.
திருப்பாடல் 3:
தானதன தான தந்த ...... தனதான
காரணமதாக வந்து ...... புவிமீதே
காலன் அணுகாதிசைந்து ...... கதிகாண
நாரணனும் வேதன் முன்பு ...... தெரியாத
ஞான நடமே புரிந்து ...... வருவாயே
ஆரமுதமான தந்தி ...... மணவாளா
ஆறுமுகம் ஆறிரண்டு ...... விழியோனே
சூரர்கிளை மாள வென்ற ...... கதிர்வேலா
சோலைமலை மேவி நின்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 4:
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
சீலமுள தாயர் தந்தை மாதுமனையான மைந்தர்
சேரு பொருளாசை நெஞ்சு ...... தடுமாறித்
தீமையுறு மாயை கொண்டு வாழ்வு சதமாம் இதென்று
தேடினது போக என்று ...... தெருவூடே
வாலவயதான கொங்கை மேரு நுதலான திங்கள்
மாதர் மயலோடு சிந்தை ...... மெலியாமல்
வாழுமயில் மீது வந்து தாளிணைகள் தாழுமெந்தன்
மாயவினை தீர அன்பு ...... புரிவாயே
சேலவள நாடனங்கள் ஆரவயல் சூழும் இஞ்சி
சேணிலவு தாவ செம்பொன் ...... மணிமேடை
சேரும் அமரேசர் தங்கள் ஊரிதென வாழ்வுகந்த
தீரமிகு சூரை வென்ற ...... திறல்வீரா
ஆலவிட மேவு கண்டர் கோலமுடன் நீடு மன்றுள்
ஆடல்புரி ஈசர் தந்தை ...... களிகூர
ஆனமொழியே பகர்ந்து சோலைமலை மேவு கந்த
ஆதிமுதலாக வந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 5:
தானதன தான தந்த தானதன தான தந்த
தானதன தான தந்த ...... தனதான
வீரமதனூல் விளம்பு போகமட மாதர் தங்கள்
வேல்விழியினால் மயங்கி ...... புவிமீதே
வீசுகையினால் இதங்கள் பேசுமவர் வாயிதம்சொல்
வேலைசெய்து மால்மிகுந்து ...... விரகாகிப்
பாரவசமான அங்கண் நீடுபொருள் போன பின்பு
பாதகனுமாகி நின்று ...... பதையாமல்
பாகம்வர சேர அன்பு நீபமலர் சூடு தண்டை
பாதமலர் நாடியென்று ...... பணிவேனோ
பூரணமதான திங்கள் சூடும் அரனார்இடங்கொள்
பூவையருளால் வளர்ந்த ...... முருகோனே
பூவுலகெலாம் அடங்க ஓரடியினால் அளந்த
பூவை வடிவான் உகந்த ...... மருகோனே
சூரர்கிளையே தடிந்து பாரமுடியே அரிந்து
தூள்கள்பட நீறு கண்ட ...... வடிவேலா
சோலைதனிலே பறந்துலாவு மயிலேறி வந்து
சோலைமலை மேலமர்ந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 6:
தானதன தந்த தந்த தானதன தந்த தந்த
தானதன தந்த தந்த ...... தனதான
வாரண முகம்கிழிந்து வீழவும் அரும்பலர்ந்து
மால்வரை அசைந்த நங்கன் ...... முடிசாய
வாளகிரி அண்டர் அண்ட கோளமுற நின்றெழுந்த
மாதவம் அறம்துறந்து ...... நிலைபேரப்
பூரண குடம்கடிந்து சீதகளபம் புனைந்து
பூசலை விரும்பும் கொங்கை ...... மடவார்தம்
போக சயனம் தவிர்ந்துன் ஆடக பதம் பணிந்து
பூசனைசெய் தொண்டன் என்பதொரு நாளே
ஆரணம் முழங்குகின்ற ஆயிர மடம்தவங்கள்
ஆகுதி இடங்கள் பொங்கு ...... நிறைவீதி
ஆயிர முகங்கள் கொண்ட நூபுரம் இரங்கும் கங்கை
ஆரமர வந்தலம்பும் ...... துறைசேரத்
தோரணம் அலங்கு துங்க கோபுர நெருங்குகின்ற
சூழ்மணிபொன் மண்டபங்கள் ...... ரவிபோலச்
சோதியின் மிகுந்த செம்பொன் மாளிகை விளங்குகின்ற
சோலைமலை வந்துகந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 7:
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன
தான தானதன தத்ததன தத்ததன ...... தந்ததான
ஆசை நாலு சதுரக்கமல முற்றினொளி
வீசியோடிஇரு பக்கமொடுறச் செல்வளி
ஆவல் கூரமண் முதல்சலச பொற்சபையும் இந்துவாகை
ஆர மூணுபதியில் கொள நிறுத்திவெளி
ஆரு சோதிநுறு பத்தினுடன் எட்டு!இத
ழாகி ஏழும்அளவிட்டருண விற்பதியில் ...... விந்துநாத
ஓசை சாலுமொரு சத்தம் அதிகப்!படிக
மோடு கூடிஒருமித்தமுத சித்தியொடும்
ஓது வேதசர சத்திஅடியுற்றதிரு ...... நந்தியூடே
ஊமையேனை ஒளிர்வித்துனது முத்திபெற
மூல வாசல்வெளி விட்டுனதுரத்தில் ஒளிர்
யோக பேதவகை எட்டுமிதில் ஒட்டும்வகை ...... இன்றுதாராய்
வாசி வாணிகன் எனக்குதிரை விற்றுமகிழ்
வாதவூரன் அடிமைக்கொளும் க்ருபைக்கடவுள்
மாழை ரூபன்முக மத்திகை விதத்தருண ...... செங்கையாளி
வாகு பாதியுறை சத்தி கவுரிக் குதலை
வாயின் மாதுதுகிர் பச்சை வடிவிச் சிவைஎன்
மாசு சேர்எழுபிறப்பையும் அறுத்தஉமை ...... தந்தவாழ்வே
காசி ராமெசுரம் ரத்நகிரி சர்ப்பகிரி
ஆரூர் வேலுர் தெவுர் கச்சி மதுரைப் பறியல்
காவை மூதுர் அருணக்கிரி திருத்தணியல் ...... செந்தில்நாகை
காழி வேளுர்பழநிக்கிரி குறுக்கைதிரு
நாவலூர் திருவெணெய்ப்பதியின் மிக்கதிகழ்
காதல் சோலைவளர் வெற்பிலுறை முத்தர்புகழ் ...... தம்பிரானே.
திருப்பாடல் 8:
தானதத்த தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன
தானதத்த தான தனாதனா தன ...... தனதானா
சீர்சிறக்கும் மேனி பசேல் பசேலென
நூபுரத்தினோசை கலீர் கலீரென
சேரவிட்ட தாள்கள் சிவேல் சிவேலென ...... வருமானார்
சேகரத்தின் வாலை சிலோர் சிலோர்களும்
நூறுலக்ஷ கோடி மயால் மயால் கொடு
தேடியொக்க வாடி ஐயோ ஐயோ வென ...... மடமாதர்
மார்படைத்த கோடு பளீர் பளீரென
ஏமலித்தென் ஆவி பகீர் பகீரென
மாமசக்கில்ஆசை உளோம் உளோமென ...... நினைவோடி
வாடைபற்று வேளை அடா அடாவென
நீமயக்கமேது சொலாய் சொலாயென
வாரம்வைத்த பாதம் இதோ இதோ என ...... அருள்வாயே
பாரதத்தை மேரு வெளீ வெளீ திகழ்
கோடொடித்த நாளில் வரைஇவரைஇபவர்
பானிறக் கணேசர் குவா குவா கனர் ...... இளையோனே
பாடல்முக்ய மாது தமீழ் தமீழிறை
மாமுநிக்கு காதில் உணார் உணார் விடு
பாசமற்ற வேத குரூ குரூ பர ...... குமரேசா
போர்மிகுத்த சூரன் விடோம் விடோமென
நேரெதிர்க்க வேலை படீர் படீரென
போயறுத்த போது குபீர் குபீரென ...... வெகுசோரி
பூமியுக்க வீசு குகா குகா திகழ்
சோலைவெற்பின் மேவு தெய்வா தெய்வானைதொள்
பூணியிச்சை ஆறு புயா புயாறுள ...... பெருமாளே.
திருப்பாடல் 9:
தனன தான தான தத்த
தனன தான தான தத்த
தனன தான தான தத்த ...... தனதான
துடிகொள் நோய்களோடு வற்றி
தருண மேனி கோழை துற்ற
இருமல் ஈளை வாத பித்தம் அணுகாமல்
துறைகளோடு வாழ்வு விட்டு
உலக நூல்கள் வாதையற்று
சுகமுளாநுபூதி பெற்று ...... மகிழாமே
உடல்செய் கோர பாழ்வயிற்றை
நிதமும் ஊணினால் உயர்த்தி
உயிரினீடு யோக சித்தி ...... பெறலாமே
உருவிலாத பாழில் வெட்ட
வெளியிலாடு நாத நிர்த்த
உனது ஞான பாத பத்மம் உறுவேனோ
கடிதுலாவு வாயு பெற்ற
மகனும் வாலி சேயு மிக்க
மலைகள் போட ஆழி கட்டி ...... இகலூர்போய்க்
களமுறானை தேர் நுறுக்கி
தலைகளாறு நாலு பெற்ற
அவனை வாளியால் அடத்தன் ...... மருகோனே
முடுகு வீர சூர பத்மர்
தலையின் மூளை நீறு பட்டு
முடிவதாக ஆடு நிர்த்த ...... மயில்வீரா
முநிவர் தேவர் ஞானமுற்ற
புநித சோலை மாமலைக்குள்
முருக வேல த்யாகர் பெற்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 10:
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன
தானத் தானன தத்தன தத்தன ...... தனதான
பாசத்தால்விலை கட்டிய பொட்டிகள்
நேசித்தார் அவர் சித்த மருட்டிகள்
பாரப் பூதரமொத்த தனத்திகள் ...... மிகவேதான்
பாவத்தால் மெய் எடுத்திடு பட்டிகள்
சீவிக் கோதி முடித்தள கத்திகள்
பார்வைக்கே மயலைத்தரு துட்டிகள் ஒழியாத
மாசுற்றேறிய பித்தளையில் பணி
நீறிட்டேஓளி பற்ற விளக்கிகள்
மார்பில் காதினில் இட்ட பிலுக்கிகள் ...... அதிமோக
வாய்வித்தாரம் உரைக்கும் அபத்திகள்
நேசித்தாரையும் எத்தி வடிப்பவர்
மாயைக்கே மனம் வைத்ததனுள்தினம் அலைவேனோ
தேசிக் கானகம்உற்ற தினைப்புன
மேவிக் காவல் கவண் கல் சுழற்றுவள்
சீதப் பாத குறப்பெண் மகிழ்ச்சிகொள் ...... மணவாளா
தேடிப் பாடிய சொற் !புலவர்க்கித
மாகத் தூது செல்அத்தரில் கற்பக
தேவர்க்காதி திருப்புகலிப் பதி ...... வருவோனே
ஆசித்தார் மனதிற்புகும் உத்தம
கூடற்கே வைகையிற் கரை கட்டிட
ஆளொப்பாய் உதிர் பிட்டமுதுக்கடி ...... படுவோன்!ஓ
டாரத்தோடகில் உற்ற தருக்குல
மேகத்தோடொருமித்து நெருக்கிய
ஆதிச் சோலைமலைப் பதியில்திகழ் ...... பெருமாளே.
திருப்பாடல் 11:
தானதன தந்த தானதன தந்த
தானதன தந்த ...... தனதான
வாதினை அடர்ந்த வேல்விழியர் தங்கள்
மாயமதொழிந்து ...... தெளியேனே
மாமலர்கள் கொண்டு மாலைகள் புனைந்து
மாபதம் அணிந்து ...... பணியேனே
ஆதியொடும் அந்தமாகிய நலங்கள்
ஆறுமுகமென்று ...... தெரியேனே
ஆனதனி மந்த்ர ரூபநிலை !கொண்ட
தாடு மயிலென்பதறியேனே
நாதமொடு விந்து வானவுடல் கொண்டு
நானிலம் அலைந்து ...... திரிவேனே
நாகம்அணிகின்ற நாதநிலை கண்டு
நாடியதில் நின்று ...... தொழுகேனே
சோதியுணர்கின்ற வாழ்வு சிவமென்ற
சோகமது தந்து ...... எனையாள்வாய்
சூரர்குலம் வென்று வாகையொடு சென்று
சோலைமலை நின்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 12:
தானதன தத்த தானதன தத்த
தானதன தத்த ...... தனதான
வார்குழையை எட்டி வேளினை மருட்டி
மாய நமனுக்கும் உறவாகி
மாதவம்அழித்து லீலைகள் மிகுத்து
மாவடுவை ஒத்த ...... விழிமாதர்
சீருடன் அழைத்து வாய்கனிவு வைத்து
தேனிதழ் அளித்து ...... அநுபோக
சேர்வை தனையுற்று மோசம் விளைவித்து
சீர்மைகெட வைப்பர் உறவாமோ
வாரினை அறுத்து மேருவை மறித்து
மா கனகமொத்த ...... குடமாகி
வாரவணை வைத்து மா லளிதமுற்று
மாலைகளும் மொய்த்த ...... தனமாது
தோரணி புயத்தி யோகினி சமர்த்தி
தோகைஉமை பெற்ற ...... புதல்வோனே
சூர்கிளை மடித்து வேல்கரமெடுத்து
சோலைமலை உற்ற ...... பெருமாளே.
திருப்பாடல் 13:
தனன தனதன தனத்தத் தாத்த
தனன தனதன தனத்தத் தாத்த
தனன தனதன தனத்தத் தாத்த ...... தனதான
அழகு தவழ்குழல் விரித்துக் காட்டி
விழிகள் கடையிணை புரட்டிக் காட்டி
அணிபொன் அணிகுழை புரித்துக் காட்டி ...... அநுராக
அவச இதமொழி படித்துக் காட்டி
அதரம் அழிதுவர் வெளுப்பைக் காட்டி
அமர்செய் நகநுதி அழுத்தைக் காட்டி ...... அணியாரம்
ஒழுகும் இருதனம் அசைத்துக் காட்டி
எழுத வரியிடை வளைத்துக் காட்டி
உலவும் உடைதனை நெகிழ்த்திக் காட்டி ...... உறவாடி
உருகு கடிதடம் ஒளித்துக் காட்டி
உபய பரிபுர பதத்தைக் காட்டி
உயிரை விலைகொளும் அவர்க்குத் தேட்டம் ஒழிவேனோ
முழுகும் அருமறை முகத்துப் பாட்டி
கொழுநர் குடுமியை அறுத்துப் போட்ட
முதல்வ குகைபடு திருப்பொற் கோட்டு ...... முனிநாடா
முடுகு முதலையை வரித்துக் கோட்டி
அடியர் தொழ மகவழைத்துக் கூட்டி
முறைசெய் தமிழினை விரித்துக் கேட்ட ...... முதுநீதர்
பழைய கடதட முகத்துக் கோட்டு
வழுவை உரியணி மறைச்சொற் கூட்டு
பரமர் பகிரதி சடைக்குள் சூட்டு ...... பரமேசர்
பணிய அருள்சிவ மயத்தைக் காட்டு
குமர குலமலை உயர்த்திக் காட்டு
பரிவொடணி மயில் நடத்திக் காட்டு ...... பெருமாளே.
திருப்பாடல் 14:
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தத்தத்
தனதன தத்தத் தனதன தத்தத் ...... தனதானா
தலைமயிர் கொக்குக் கொக்க நரைத்துக்
கலகலெனப்பற் கட்டது விட்டுத்
தளர்நடை பட்டுத் தத்தடியிட்டுத் ...... தடுமாறித்
தடிகொடு தத்திக் கக்கல்!பெருத்திட்
டசனமும் விக்கிச் சத்தியெடுத்துச்
சளியும் மிகுத்துப் பித்தமும் முற்றிப் ...... பலகாலும்
திலதயில்அத்திட்டொக்க எரிக்கத்
திரிபலை சுக்குத் திப்பிலி இட்டுத்
தெளிய வடித்துற்றுய்த்துடல் செத்திட்டுயிர் போமுன்
திகழ்புகழ் கற்றுச் சொற்கள் பயிற்றித்
திருவடியைப் பற்றித் தொழுதுற்றுச்
செனனம் அறுக்கைக்குப் பர முத்திக்கருள்தாராய்
கலணை விசித்துப் பக்கரையிட்டுப்
புரவி செலுத்திக் கைக்கொடு வெற்பைக்
கடுகு நடத்தித் திட்டென எட்டிப் ...... பொருசூரன்
கனபடை கெட்டுத் தட்டற விட்டுத்
திரைகடலுக்குள் புக்கிட எற்றிக்
களிமயிலைச் சித்ரத்தில் நடத்திப் ...... பொருகோவே
குலிசன் மகட்குத் தப்பியும் மற்றக்
குறவர் மகட்குச் சித்தமும் வைத்துக்
குளிர்தினை மெத்தத் தத்து புனத்தில் ...... திரிவோனே
கொடிய பொருப்பைக் குத்தி முறித்துச்
சமரம் விளைத்துத் தற்பரமுற்றுக்
குலகிரியில் புக்குற்றுரை உக்ரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 15:
தனதன தனந்த தான தனதன தனந்த தான
தனதன தனந்த தான ...... தனதான
மலரணை ததும்ப மேக குழல்முடி சரிந்து வீழ
மணபரிமளங்கள் வேர்வை ...... அதனோடே
வழிபட இடங்கணாட பிறைநுதல் புரண்டு மாழ்க
வனைகலை நெகிழ்ந்து போக ...... இளநீரின்
முலையிணை ததும்ப நூலின் வகிரிடை சுழன்று வாட
முகமுகமொடொன்ற பாயல் அதனூடே
முதுமயல் கலந்து மூழ்கி மகிழ்கினும் அலங்கலாடு
முடிவடிவொடங்கை வேலும் ...... மறவேனே
சிலைநுதல் இளம்பெண் மோகி சடைஅழகியெந்தை பாதி
திகழ் மரகதம்பொன் மேனி ...... உமைபாலா
சிறுநகை புரிந்து சூரர் கிரிகடல் எரிந்து போக
திகழ்அயில் எறிந்த ஞான ......முருகோனே
கொலைமிக பயின்ற வேடர் மகள்வளி மணந்த தோள
குணவலர் கடம்ப மாலை ...... அணிமார்பா
கொடிமினலடைந்த சோதி மழகதிர் தவழ்ந்த ஞான
குலகிரி மகிழ்ந்து மேவு ...... பெருமாளே
No comments:
Post a Comment