(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: திருப்பூர்
திருக்கோயில்: அருள்மிகு முருகநாத சுவாமி திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)
அமைவிடம் (செல்லும் வழி):
திருப்பூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது திருமுருகன்பூண்டி. சுந்தரரால் பாடல் பெற்ற சிறப்புப் பொருந்தியது. சுந்தரர், சேரமான் பெருமாள் நாயனார் அன்புடன் அளித்திருந்த பொற்குவியல்களோடு இத்தலம் வழியே பயணித்துச் செல்லுகையில், சிவபெருமான் சிவபூத கணங்களை அனுப்புவித்து அச்செல்வங்களை அபகரிக்கச் செய்து, பின்னர் வன்தொண்டரின் தேவாரத் திருப்பாடலால் திருவுள்ளம் மகிழ்ந்து அவைகளை மீண்டும் (ஆலய வாயிலில்) சேர்ப்பிக்குமாறு அருளியுள்ளார் (குறிப்பு: இத்தலத்திலிருந்து சுமார் 7 கி.மீ பயணத் தொலைவில் மற்றொரு திருப்புகழ் மற்றும் தேவாரத் தலமான அவிநாசித் திருக்கோயிலைத் தரிசிக்கலாம்).
ஓரளவு விசாலமான ஆலய வளாகம், சிவபரம்பொருள் முருகநாத சுவாமி எனும் திருநாமத்திலும், அம்பிகை பூண்முலை அம்மை; ஆவுடைநாயகி; மங்களாம்பிகை ஆகிய திருநாமங்களிலும் எழுந்தருளி இருக்கின்றனர். சிவாலயங்களிலுள்ள வழக்கமான அமைப்பிற்கு மாறாக, முருகப் பெருமானின் சன்னிதி மூலக் கருவறைக்குச் செல்லும் வழியிலேயே; இடது புறத்தில் அமைந்துள்ளது.
வேலாயுதக் கடவுள் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களுமாய், நெடிதுயர்ந்த திருக்கோலத்தில், தேவியர் உடனிருக்க, மயில் பின்புறம் விளங்கியிருக்கப் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றான். இம்மூர்த்தியின் திருமேனி வடிவழகு தனித்துவமானது, அற்புதத் தன்மை பொருந்தியது. ஆறுமுகக் கடவுள் பூசித்த சிவமூர்த்தி சிறிய திருமேனியராய் சிவகுமரனின் இடதுபுறம் எழுந்தருளி இருக்கின்றார். இச்சன்னிதிக்கு இடது புறமுள்ள படிகளின் மீதேறிச் சென்றால் மட்டுமே இச்சிவலிங்கத் திருமேனியைத் தரிசிக்க இயலும்.
அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை ஒரு திருப்புகழ் திருப்பாடலால் போற்றிப் பரவியுள்ளார்,
(Google Maps: Thirumuruganatha Swamy Temple)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதனனந் தாந்தத் ...... தனதான
அவசியமுன் வேண்டிப் ...... பலகாலும்
அறிவின் உணர்ந்தாண்டுக்கொருநாளில்
தவசெபமும் தீண்டிக் ...... கனிவாகிச்
சரணமதும் பூண்டற்கருள்வாயே
சவதமொடும் தாண்டித் ...... தகரூர்வாய்
சடுசமயம் காண்டற்கரியானே
சிவகுமரன் பீண்டிற் ...... பெயரானே
திருமுருகன் பூண்டிப் ...... பெருமாளே.
2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment