(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: திருப்பூர்
திருக்கோயில்: அருள்மிகு முத்துக்குமாரசுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
திருப்பூரிலுள்ள மூன்று முருகன் திருக்கோயில்கள் (வெவ்வேறு ஆய்வுகளின் அடிப்படையில்) தத்தமது ஆலயங்களைக் கொங்கணகிரியாய் முன்னிறுத்திக் கொள்கின்றன.
(1) சிவத்திரு தணிகைமணி அவர்கள் முதற்கட்ட ஆய்வினை மேற்கொண்டு, திருப்பூரிலிருந்து சுமார் 15 கி.மீ தொலைவில்; சின்னப் புதூர் எனும் சிற்றூருக்கு அருகிலுள்ள பகுதியில், 18 படிகளோடு கூடிய சிறிய குன்றொன்றில் எழுந்தருளியுள்ள குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயிலையே கொங்கணகிரியாய்க் கருதுகின்றார்.
-
(2) தணிகைமணி அவர்களின் ஆய்வினை மேலும் தொடரும் 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள், திருப்பூர் பகுதியிலுள்ள பிற முருகன் திருக்கோயில்களின் அமைப்பு, மூல மூர்த்தி மற்றும் இன்னபிற சன்னிதிகளின் அமைப்பு; கொங்கண சித்தரோடு உள்ள தொடர்பு இவற்றையெல்லாம் நன்கு ஆய்ந்தறிந்து, திருப்பூரிலிருந்து 36 கி.மீ தூரத்திலும், காங்கேயத்திலிருந்து 7 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ள வட்டமலை எனும் மலைக்கோயிலையே திருப்புகழ் தலமாக முன்மொழிகின்றார்.
(3) திருப்பூரிலிருந்து சுமார் 3 கி.மீ தூரத்தில், கொங்கணகிரி எனும் பெயரிலேயே, புதிதாக எழுப்பப் பெற்றுள்ள திருக்கோயிலொன்று உள்ளது. பெயர் ஒற்றுமை சிறிது இருப்பினும் வட்டமலையே திருப்புகழ் தலமாகக் கொள்ளுதல் ஏற்புடையது என்பது திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களின் இறுதிக் கருத்து.
'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலே திருப்புகழ் தலங்களுக்கான இறுதிப் பிரமாண நூலாக அமைந்துள்ள தன்மையினால் இனி வட்டமலை குறித்து காண்போம்,
-
ஏகாந்தமான சூழலில் அமைந்துள்ள மலைக்கோயிலில், ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுமாய்; இரு தேவியரும் உடனிருக்க, முத்துக் குமார சுவாமி எனும் திருநாமத்தில் கந்தப் பெருமான் அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தந்ததன தத்ததன தந்ததன தத்ததன
தந்ததன தத்ததன ...... தனதான
ஐங்கரனை ஒத்த மனம் ஐம்புலம் அகற்றி வளர்
அந்தி பகல் அற்ற நினைவருள்வாயே
அம்புவி தனக்குள் வளர் செந்தமிழ் வழுத்திஉனை
அன்பொடு துதிக்க மனம் அருள்வாயே
தங்கிய தவத்துணர்வு தந்தடிமை முத்திபெற
சந்திர வெளிக்கு வழி ...... அருள்வாயே
தண்டிகை கனப்பவுசு எண்திசை மதிக்கவளர்
சம்ப்ரம விதத்துடனெ ...... அருள்வாயே
மங்கையர் சுகத்தை வெகு இங்கிதமெனுற்ற மனம்
உந்தனை நினைத்தமைய ...... அருள்வாயே
மண்டலிக ரப்பகலும் வந்தசுப ரட்சைபுரி
வந்தணைய புத்தியினை ...... அருள்வாயே
கொங்கிலுயிர் பெற்றுவளர் தென்கரையில் அப்பர் அருள்
கொண்டு உடலுற்ற பொருள் அருள்வாயே
குஞ்சர முகற்கிளைய கந்தனென வெற்றிபெறு
கொங்கண கிரிக்குள் வளர் ...... பெருமாளே
(2022 நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment