Friday, August 24, 2018

பட்டாலியூர்:

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: திருப்பூர் 

திருக்கோயில்: அருள்மிகு பால் வெண்ணீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


அமைவிடம் (செல்லும் வழி):

திருப்பூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 24 கி.மீ தூரத்திலும், காங்கேயத்திலிருந்து சுமார் 7 கி.மீ தூரத்திலும், பிரசித்தி பெற்ற சிவன்மலை திருக்கோயிலிலிருந்து 2 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது பட்டாலியூர் எனும் சிற்றூர். சிவன்மலை ஆலயப் படிகள் துவங்கும் இடத்திற்கு நேரெதிரிலேயே பட்டாலியூர் செல்வதற்கான பெரியதொரு பெயர்ப் பலகையினைக் காணலாம். அருணகிரிப் பெருமான் இத்தலத்திற்கான திருப்புகழ் திருப்பாடல்களில் (மலைக் கோயில் என்று குறிக்காமல்) பட்டாலியூர் என்று மட்டுமே குறித்துள்ளமையால், பட்டாலியூர் சிவன்மலையினின்றும் வேறுபட்ட தலமென்பது என்பது தெளிவு. 

பட்டாலியூரில் சிவபரம்பொருளின் திருநாமம் பால்வெண்ணீஸ்வரர், தற்பொழுது இங்கு சிறியதொரு ஆலயம் மட்டுமே மிகவும் பழுதடைந்த நிலையில் காணக் கிடைக்கின்றது. புனர் நிர்மாணப் பணி துவங்கும் பொருட்டு ஆலயத்திலுள்ள அனைத்து விக்கிரகத் திருமேனிகளையும் முழுவதுமாய் அகற்றிப் பிறிதொரு வளாகத்தில் காவல் துறையினரின் நேரடி பாதுகாப்பில் வைத்திருப்பதாக அறிகின்றாம். திருப்பணி துவக்க விவரங்கள் குறித்த எவ்வித தகவலும் எவரிடத்திலும் இல்லை.

கந்தப் பெருமானின் தரிசனத்திற்கென ஆர்வத்துடன் சென்றிருந்த எங்களுக்கு ஏக்கம் கலந்த ஏமாற்றமே.  ஆலய வளாகத்தின் முன்புள்ள பகுதியொன்றில், சிறிய சிவலிங்கத் திருமேனியொன்றினைத் தற்காலிகமாக அமைத்திருந்தனர். அத்திருமேனியின் திருமுன்பு நின்றவாறு இத்தலத்திற்கான திருப்புகழ் திருப்பாடல்களைப் பாராயணம் புரிந்து வழிபட்டோம். அச்சமயத்தில் ஆலயத்திற்கு அடுத்துள்ள நிலப்பரப்பில் மயிலொன்று ஓசையெழுப்பியவாறு நின்றிருக்க, ஆறுமுகக் கடவுளின் தரிசனமே கிடைத்தது போல் பெருமகிழ்வுடன் தரிசித்து மகிழ்ந்தோம். திருப்பணி துவங்கி நன்முறையில் நிறைவுற திருவருள் கூட்டுவிக்கட்டும். 

பட்டாலியூரில் திருப்புகழ் தெய்வத்தின் திருருவுவ தரிசனம் கிடைக்கப் பெறவில்லையே எனும் ஏக்கத்தைப் போக்கியருளும் விதமாக சிவன்மலையில் வேலாயுதக் கடவுள் கோயில் கொண்டருள்கின்றான். 

478 படிகளோடு கூடிய மலைக்கோயிலில் ஒரு திருமுகமும் நான்கு திருக்கரங்களுமாய் அற்புதத் திருக்கோலத்தில் சிவன்மலை ஆண்டவன் எழுந்தருளி இருக்கின்றான். வள்ளி; தெய்வயானை தேவியர் இருவரும் அருகிலுள்ள தனிச்சன்னிதியொன்றில் ஒருசேர எழுந்தருளி இருப்பது தனித்துவமான அமைப்பு. தரிசித்துப் பயன்பெற வேண்டிய அற்புத திருத்தலம்.

அருணகிரிநாதர் பட்டாலியூர் வேலவனுக்கு 3 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார்,

(Google Maps: ஸ்ரீ பட்டாலி பால்வெண்ணீஸ்வரர் ஆலயம்)

(குறிப்பு: பட்டாலியூர் மற்றும் சிவன்மலை தரிசனக் காட்சிகள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தனனத் தான தானன
     தனதன தனனத் தான தானன
          தனதன தனனத் தான தானன ...... தனதான

இருகுழையிடறிக் காது மோதுவ
     பரிமள நளினத்தோடு சீறுவ
          இணையறு வினையைத் தாவி மீளுவ ...... அதிசூர

எமபடர் படை கெட்டோட நாடுவ
     அமுதுடன் விடம் ஒத்தாளை ஈருவ
          ரதிபதி கலை தப்பாது சூழுவ ...... முநிவோரும்

உருகிட விரகில் பார்வை மேவுவ
     பொருளது திருடற்காசை கூறுவ
          யுகமுடிவிதெனப் பூசலாடுவ ...... வடிவேல்போல்

உயிர்வதை நயனக் காதல் மாதர்கள்
     மயல்தரு கமரில் போய் விழாவகை
          உனதடி நிழலில் சேர வாழ்வதும் ஒருநாளே

முருகவிழ் தொடையைச் சூடி நாடிய
     மரகத கிரணப் பீலி மாமயில்
          முது ரவி கிரணச் சோதி போல் வயலியில் வாழ்வே

முரண்முடி இரணச் சூலி மாலினி
     சரணெனும் அவர் பற்றான சாதகி
          முடுகிய கடினத்தாளி வாகினி ...... மதுபானம்

பருகினர் பரமப் போக மோகினி
     அரகர எனும் வித்தாரி யாமளி
          பரிபுர சரணக் காளி கூளிகள் ...... நடமாடும்

பறையறை சுடலைக் கோயில் நாயகி
     இறையொடும் இடமிட்டாடு காரணி
          பயிரவி அருள் பட்டாலியூர் வரு ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்தான தனன தனதன தத்தான தனன தனதன
     தத்தான தனன தனதன ...... தனதான

கத்தூரி அகரு ம்ருகமத வித்தார படிர இமசல
     கற்பூர களபம் அணிவன ...... மணிசேரக்

கட்டார வடமும் அடர்வன நிட்டூர கலகமிடுவன
     கச்சோடு பொருது நிமிர்வன ...... தனமாதர்

கொத்தூரு நறவம் எனஅதரத்தூறல் பருகி அவரொடு
     கொற்சேரி உலையில் மெழுகென ...... உருகாமே

கொக்காக நரைகள் வருமுன மிக்காய இளமையுடன்முயல்
     குற்றேவல் அடிமை செயும்வகை ...... அருளாதோ

அத்தூர புவன தரிசன நித்தார கனக நெடுமதில் 
     அச்சான வயலி நகரியில் உறைவேலா

அச்சோவென வசஉவகையில் உட்சோர்தல் உடைய !பரவையொ
     டக்காகி விரக பரிபவம் அறவேபார்

பத்தூரர் பரவ விரைவுசெல் மெய்த்தூதர் விரவ அருள்தரு
     பற்றாய பரம பவுருஷ ...... குருநாதா

பச்சோலை குலவு பனைவளர் மைச்சோலை மயில்கள் நடமிடு
     பட்டாலி மருவும் அமரர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
     தந்தத்தத் தான தனதன ...... தனதான

சங்கைக் கத்தோடு சிலுகிடு சங்கிச் சட் கோல சமயிகள்
     சங்கற்பித்தோதும் வெகுவித ...... கலைஞானச்

சண்டைக்குள் கேள்வி அலம் அலம் அண்டற்குப் பூசையிடும்அவர்
     சம்பத்துக் கேள்வி அலம் அலம் இமவானின்

மங்கைக்குப் பாகன் இருடிகள் எங்கட்குச் சாமி எனஅடி
     வந்திக்கப் பேசி அருளிய ...... சிவநூலின்

மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி அலம் அலம்
     வம்பில் சுற்றாது பரகதி ...... அருள்வாயே

வெங்கைச் சுக்ரீபர் படையை இலங்கைக்குப் போக விடவல
     வென்றிச் சக்ரேசன் மிகமகிழ் ...... மருகோனே

வெண்பட்டுப் பூணல் வனம் கமுகெண்பட்டுப் பாளை விரிபொழில்
     விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா

கொங்கைக்கொப்பாகும் வடகிரி செங்கைக்கொப்பாகும் நறுமலர்
     கொண்டைக்கொப்பாகும் முகிலென ...... வனமாதைக்

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொல் பாடும் இளையவ
     கொங்கில் பட்டாலி நகருறை ...... பெருமாளே


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

பட்டாலியூர் தரிசனக் காட்சிகள் 












சிவன்மலை தரிசனக் காட்சிகள் 









































No comments:

Post a Comment