(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: கரூர்
திருக்கோயில்: அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
கரூரிலிருந்து சுமார் 20 கி.மீ தூரத்தில், வேலாயுதப் பாளையம் எனும் பகுதியில் அமைந்துள்ளது புகழி மலை. 345 படிகளோடு கூடிய மலைக்கோயில். தற்பொழுது ஆலயத் திருப்பணி நடந்தேறி வருவதால், அடிவார மண்டப முகப்பு துவங்கி, மலைப்பாதையின் இருபுறமும் ஆங்காங்கே அமைக்கப் பெற்றுள்ள திருவுருவச் சிலைகள் அனைத்தும் வெள்ளை வஸ்திரத்தால் முழுவதுமாய் மறைக்கப் பெற்றுள்ளன. வரும் பங்குனி மாதத்தில் கும்பாபிஷேகம் நிகழ இருப்பதாக அறிகின்றோம்.
மலைக்கோயிலில் வேலாயுதக் கடவுள் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களோடு, மயில் பின்புறம் விளங்கியிருக்க நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான் (இங்கு தேவியர் இல்லை).
இத்தலத் திருப்புகழில் 'கமலபத வாழ்வு தரமயிலின் மீது கருணையுடனேமுன் வர வேணும்' எனும் விண்ணப்பம் காணப் பெறுவதால், இதனைப் பலகாலும் பாராயணம் புரியும் அன்பர்கள் முன்பாக 'கந்தக் கடவுள் மயில் மீது எழுந்தருளி வந்து தன் திருவடிப் பேற்றினை அளித்தருள்வான்' என்பது புலனாகின்றது.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனனதன தான தனனதன தான
தனனதன தான ...... தனதான
மருவுமலர் வாசம் உறுகுழலினாலும்
வரிவிழியினாலும் ...... மதியாலும்
மலையின் நிகரான இளமுலைகளாலும்
மயல்கள்தரு மாதர் ...... வகையாலும்
கருது பொருளாலும் மனைவி மகவான
கடலலையில் மூழ்கி ...... அலைவேனோ
கமலபத வாழ்வு தரமயிலின் மீது
கருணையுடனேமுன் ...... வரவேணும்
அருமறைகளோது பிரமன்முதல் மாலும்
அமரர்முநி ராசர் ...... தொழுவோனே
அகிலதலம்ஓது நதிமருவு சோலை
அழகுபெறு போக ...... வளநாடா
பொருதவரும் சூரர் கிரியுருவ வாரி
புனல்சுவற வேலை ...... எறிவோனே
புகலரியதான தமிழ்முநிவரோது
புகழிமலை மேவு ...... பெருமாளே
2022 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment