Monday, August 27, 2018

வெஞ்சமாக்கூடல்

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: கரூர் 

திருக்கோயில்: அருள்மிகு கல்யாண விகிர்தீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)


அமைவிடம் (செல்லும் வழி):

கரூரிலிருந்து 22 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது இத்தலம்.

(Google Maps: Venjamakoodaloor, Tamil Nadu 639109, India)

திருப்புகழ் பாடல்கள்:

கரூரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது வெஞ்சமாக்கூடல். 

(சுந்தரரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது): 
எறிக்கும் கதிர் வேயுதிர் முத்தம்மோ(டு) ஏலம்இலவங்கம் தக்கோலம்இஞ்சி
செறிக்கும் புனலுள் பெய்து கொண்டு மண்டித் திளைத்தெற்று சிற்றாறதன் கீழ்க்கரைமேல்
முறிக்கும்தழை மாமுடப் புன்னைஞாழல் குருக்கத்திகள் மேற்குயில் கூவலறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே!!!

முன்பொரு சமயம் பெருவெள்ளம் ஒன்றினால் இவ்வூரோடு சேர்த்து திருக்கோயில் முழுவதும் பல கி.மீ தூரத்திற்கு அடித்துச் செல்லப்பட்டுப் பேரழிவிற்கு உள்ளாகின்றது. பின்னர் ஈரோடு அருள்நெறி திருக்கூட்டத்தாரின் அரிய பிரயத்தனத்தினால், முன்பிருந்த இடத்திலேயே திருக்கோயிலை மீண்டும் எடுப்பிக்கும் திருப்பணி 1982ஆம் ஆண்டு துவங்கப் பெறுகின்றது. தவத்திரு. சுந்தர சுவாமிகள்; திருமுருக வாரியார் சுவாமிகள் மற்றும் தொழிலதிபர்கள் சிலரின் சீரிய முயற்சியால் இத்திருப்பணி நிறைவுற்று, 1986ஆம் ஆண்டு குடமுழுக்கு வைபவம் நடந்தேறியுள்ளது. 

ஓரளவு விசாலமான ஆலய வளாகம், திருக்கோயில் நன்கு பராமரிக்கப் பெற்ற நிலையில் மிளிர்கின்றது. தனிப்பெரும் தெய்வமான சிவமூர்த்தி கல்யாண விகிர்தீஸ்வரராகவும், அம்பிகை பண்ணேர் மொழியம்மையாகவும் எழுந்தருளியுள்ள புண்ணிய ஷேத்திரம். 

வெளிப்பிராகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம்; வலது பக்கத்தில் திருப்புகழ் தெய்வமான நம் குமாரக் கடவுள் ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களுமாய்; இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். சன்னிதியின் உட்புறத்திலேயே திருப்புகழ் வேந்தரான நம் அருணகிரிப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் கூப்பிய கரங்களுடன் எழுந்தருளி இருக்கின்றார்.  

இத்தலத் திருப்புகழில் 'சிந்தை மாய்த்தே சித்தருள்வாயே' எனும் வேண்டுதல் அமைந்துள்ளமையால், இத்திருப்பாடல் பாராயணத்தினால் 'மெய்யறிவு சித்திக்கும்' என்பது புலனாகின்றது. 

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்தனாத் தானத் ...... தனதான

வண்டுபோல் சாரத்தருள்தேடி
மந்திபோல் காலப் ...... பிணிசாடிச்
செண்டுபோல் பாசத்துடனாடிச்
சிந்தை மாய்த்தே சித்தருள்வாயே
தொண்டரால் காணப் ...... பெறுவோனே
துங்க வேற்கானத்துறைவோனே
மிண்டரால் காணக்கிடையானே
வெஞ்சமாக் கூடல் ...... பெருமாளே


2022 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)














































No comments:

Post a Comment