Monday, August 27, 2018

கருவூர்

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: கரூர் 

திருக்கோயில்: அருள்மிகு கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம் 

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்)


அமைவிடம் (செல்லும் வழி):

கரூரின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ளது (பிரசித்தி பெற்ற) கல்யாண பசுபதீஸ்வரர் திருக்கோயில். தலத்தின் பெயர் கருவூர், சிவாலயம் 'ஆநிலை' என்று குறிக்கப் பெறுகின்றது. 

ஞானசமபந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது,
-
நீதியார்; நினைந்தாய நான்மறை
ஓதியாரொடும் கூடலார்; குழைக்
காதினார்; கருவூருள் ஆனிலை
ஆதியார்; அடியார் தம்அன்பரே!!

புகழ்ச்சோழ நாயனாரின் ஆட்சிக்குட்பட்ட பகுதி, புகழ்ச்சோழனார் பலகாலும் தரிசித்துப் பரவிய ஆலயம். எறிபத்த நாயனார் திருத்தொண்டு புரிந்து வந்த புண்ணியப் பதி, சிவகாமி ஆண்டார் எனும் உத்தம அடியவர் மலர்த் தொண்டு புரிந்து வந்த ஷேத்திரம். சன்னிதி வீதியின் கிழக்கில், நான்கு சாலைகள் கூடுமிடத்தில் தான் 'புகழ்ச் சோழனாரின் பட்டத்து யானையை எறிபத்த நாயனார் வெட்டி வீழ்த்திய' பெரிய புராண நிகழ்வு நடந்தேறியதாகக் கூறுவர். ஆண்டுதோறும் நவராத்திரி சமயத்தில் இவ்வுற்சவம் நிகழ்ந்தேறுகின்றது.

மிகப் பிரமாண்டமான ஆலய வளாகம், ஆலயத்துள் நுழைந்ததும் கொடி மரத்திற்கருகில் புகழ்ச் சோழர் மண்டபத்தினைத் தரிசித்து மகிழலாம். திருவிசைப்பா ஆசிரியர்களுள் ஒருவரான கருவூர்த் தேவரின் அதிஷ்டான சன்னிதி வெளிப்பிரகாரச் சுற்றில் அமைந்துள்ளது. 

மூலக்கருவறையில் பசுபதீஸ்வரப் பரம்பொருள் நெடிதுயர்ந்த விசாலமான சிவலிங்கத் திருமேனியில் எழுந்தருளி இருக்கின்றார், காண்பதற்கரிய திருக்காட்சி. வெளிப்பிரகாரச் சுற்றின் முடிவில் அம்பிகை அலங்கார நாயகி; சௌந்தர நாயகி எனும் இருவேறு திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றாள். எனினும் அலங்கார நாயகியே ஆதிமுதல் எழுந்தருளியிருக்கும் அம்பிகை என்றும் சௌந்தர நாயகி பின்னாள் பிரதிஷ்டை என்பதாக அறிகின்றோம்.

கருவறைக்கு நேரெதிரில், திருநந்திதேவரின் திருமேனிக்கு இருபுறமும் அமைந்துள்ள 'முசுகுந்தச் சக்கரவர்த்தி மற்றும் புகழ்ச்சோழ நாயனாரின் திருவுருவத் திருமேனிகள்' தரிசித்து இன்புறத்தக்கது. 

உட்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறைக்குப் பின்புறம்; வலது பக்கத்தில் நம் கந்தக் கடவுள் அற்புதப் புன்முறுவலோடு கூடிய ஆறு திருமுகங்களும்; பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் விளக்கமாய் எழுந்தருளி இருக்கின்றான். இச்சன்னிதிக்கு அடுத்தாற்போல் அமைந்துள்ள உட்பிரகார மண்டபச் சுற்றின் துவக்கத்திலேயே நம் அருணகிரிப் பெருமான் கூப்பிய கரங்களுடன் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 

திருப்புகழ் வேந்தர் இத்தலத்துறை கந்தக் கடவுளை ஏழு திருப்புகழ் திருப்பாடல்களால் பணிந்தேத்துகின்றார்.

(Google Maps: Arulmigu Kalyana Pasupatheswarar Temple, Sannathi Street, Karur, Tamil Nadu 639001, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 7.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதானத் தனதான தனதானத் ...... தனதான

மதியால் வித்தகனாகி மனதால் உத்தமனாகிப்
பதிவாகிச் சிவஞான பரயோகத்தருள்வாயே
நிதியே நித்தியமேஎன் நினைவே நற்பொருளாயோய்
கதியேசொற் பரவேளே கருவூரில் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தனனத் தனத்ததன தனனத் தனத்ததன
     தனனத் தனத்ததன ...... தனதான

இளநிர்க் குவட்டுமுலை அமுதத் தடத்தை கனி
     இரதக் குடத்தைஎணும் ...... மரபோடே

இரு கைக்கடைத்து இடை துவளக் குழல் சரிய
     இதழ் சர்க்கரைப் பழமொடுறழூறல்

முளரிப் பு ஒத்தமுக(ம்) முகம் வைத்தருத்தி நலம் 
     முதிரத்து அற்பஅல்குல் ...... மிசைமூழ்கி

மொழி தத்தை ஒப்ப கடை விழிகள் சிவப்பமளி
     முழுகிச் சுகிக்கும் வினையற ஆளாய்

நளினப் பதக்கழலும் ஒளிர்செச்சை பொற்புயமென் 
     நயனத்தில் உற்றுநடம் இடும்வேலா

நரனுக்கமைத்த கொடி இரதச் சுதக் களவன் 
     நறை புட்ப நல்துளவன் ...... மருகோனே

களபத் தனத்தி சுக சரசக் குறத்திமுக
     கமலப் புயத்து வளி ...... மணவாளா

கடலைக் குவட்டவுணை இரணப்படுத்தி உயர்
     கருவைப் பதிக்குள் உறை ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனனா தனனத் தனனா தனனத்
     தனனா தனனத் ...... தனதான

தசையாகிய கற்றையினால் முடியத்
     தலைகால் அளவொப்பனையாயே

தடுமாறுதல் சற்றொரு நாள் உலகில் 
     தவிரா உடலத்தினை நாயேன்

பசுபாசமும் விட்டறிவால் அறியப்
     படுபூரண நிட்களமான

பதி பாவனை உற்றநுபூதியில் !அப்
     படியே அடைவித்தருள்வாயே

அசலேசுரர் புத்திரனே !குணதிக்
     கருணோதய முத்தமிழோனே

அகிலாகம வித்தகனே !துகளற்
     றவர்வாழ் வயலித் ...... திருநாடா

கசிவார் இதயத்தமிர்தே மதுபக்
     கமலாலயன் மைத்துன வேளே

கருணாகர சற்குருவே குடகில்
     கருவூர் அழகப் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தத்தத் தனதன தானன தானன
     தத்தத் தனதன தானன தானன
          தத்தத் தனதன தானன தானன ...... தனதான

நித்தப் பிணிகொடு மேவிய காயம்!இ
     தப்புப் பிருதிவி வாயுவும் தேயுவும் 
          நிற்பொற் ககனமொடாம்இவை பூதகலவை மேவி

நிற்கப்படும் உலகாளவும் மாகர்!இ
     டத்தைக் கொளவுமெ நாடிடும் ஓடிடும் 
          நெட்டுப் பணிகலை பூணிடு நானெனும் ...... மடஆண்மை

எத்தித் திரியும் இதேது பொயாதென
     உற்றுத் தெளிவுணராது மெய் !ஞானமொ
          டிச்சைப் பட அறியாதுபொய் மாயையில் உழல்வேனை

எத்திற் கொடு நினதார் அடியாரொடும் 
     உய்த்திட்டுனதருளால் உயர் !ஞானமு
          திட்டுத் திருவடியாம் உயர் வாழ்வுற ...... இனிதாள்வாய்

தத்தத் தனதன தானன தானன
     தித்தித் திமிதிமி தீதக தோதக
          டத்தக் குடகுகு தாகுட தீகுட ...... எனபேரிச்

சத்தத்தொலி திகை தாவிட வானவர்
     திக்குக் கெடவரும் சூரர்கள் தூள்பட
          சர்ப்பச் சதமுடி நாணிட வேலதை ...... எறிவோனே

வெற்றிப் பொடியணி மேனியர் கோகுல
     சத்திக்கிடமருள் தாதகி வேணியர்
          வெற்புப் புரமது நீறெழ காணியர் அருள்பாலா

வெற்புத் தடமுலையாள் வளிநாயகி
     சித்தத்தமர் குமரா எமை ஆள்கொள
          வெற்றிப் புகழ் கருவூர்தனில் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தத்தன தத்த தனதன, தத்தன தத்த தனதன
     தத்தன தத்த தனதனத் ...... தனதான

முட்ட மருட்டி இருகுழை தொட்ட கடைக்கண் இயலென
     மொட்பை விளைத்து முறைஅளித்திடுமாதர்

முத்தம் இரத்ந மரகதம் வைத்த விசித்ர முகபடம் 
     மொச்சிய பச்சை அகில்மணத் ...... தனபாரம்

கட்டியணைத்து நகநுதி பட்ட கழுத்தில் இறுகிய
     கைத்தலம் எய்த்து வசனமற்றுயிர் சோரும் 

கட்ட முயக்கின் அநுபவம் விட்டவிடற்கு நியமித
     கற்பனை பக்ஷமுடன் அளித்தருளாதோ

வெட்டிய கட்கம் முனைகொடு வட்ட குணத்து ரணமுக
     விக்ரம உக்ர வெகுவிதப் ...... படைவீரா

வெற்றியை உற்ற குறவர்கள் பெற்ற கொடிக்கு மிகமகிழ்
     வித்தக சித்த வயலியில் ...... குமரேசா

கிட்டிய பற்கொடசுரர்கள் மட்டற உட்க அடலொடு
     கித்தி நடக்கும் அலகை சுற்றிய வேலா

கெட்டவருற்ற துணையென நட்டருள் சிட்ட பசுபதி
     கெர்ப்ப புரத்தில் அறுமுகப் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தந்தன தனன தனதாத்தன
     தந்தன தனன தனதாத்தன
          தந்தன தனன தனதாத்தன ...... தனதான

சஞ்சல சரித பரநாட்டர்கள்
     மந்திரி குமரர் படையாட்சிகள்
          சங்கட மகிபர் தொழஆக்கினை ...... முடிசூடித்

தண்டிகை களிறு பரிமேல்தனி
     வெண்குடை நிழலில் உலவாக் கன
          சம்ப்ரம விபவ சவுபாக்கியம் உடையோராய்க்

குஞ்சமும் விசிற இறுமாப்பொடு
     பஞ்சணை மிசையில் இசையாத் திரள்
          கொம்புகள் குழல்கள் வெகுவாத்தியம் இயல்கீதம் 

கொங்கணி மகளிர் பெருநாட்டிய
     நன்றென மனது மகிழ் பார்த்திபர்
          கொண்டயன் எழுதும் யமகோட்டியை ...... உணராரே

பஞ்சவர் கொடிய வினை நூற்றுவர்
     வென்றிட சகுனி கவறால் பொருள்
          பங்குடை அவனி பதி தோற்றிட ...... அயலேபோய்ப்

பண்டையில் விதியை நினையாப் !பனி
     ரண்டுடை வருஷ முறையாப்பல
          பண்புடன் மறைவின் முறையால் திருவருளாலே

வஞ்சனை நழுவி நிரைமீட்சியில்
     முந்துதமுடைய மனை வாழ்க்கையின்
          வந்தபின் உரிமை அதுகேட்டிட ...... இசையாநாள்

மண்கொள விசையன் விடுதேர்ப்பரி
     உந்தினன் மருக வயலூர்க் குக
          வஞ்சியில் அமரர் சிறைமீட்டருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன
     தனதன தந்தன தாத்தன ...... தனதான

முகிலளகம் சரியாக்குழை இகல்வன கண்சிவவாச் சிவ 
     முறுவல் முகம்குறு வேர்ப்பெழ ...... அநுபோக

முலைபுளகம் செய வார்த்தையும் நிலைஅழியும்படி கூப்பிட
     முகுளித பங்கயமாக் கர...... நுதல்சேரத்

துயரொழுகும் செல பாத்திரம் மெலிய மிகுந்துதராக்கினி
     துவள முயங்கி விடாய்த்தரிவையர் தோளின்

துவயலி நின்தன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில்
     சொருபமும் நெஞ்சில் இராப்பகல் ...... மறவேனே

சகலமயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்தருள்
     சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகிச்

சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்தகை வேற்கொடு
     சமரமுகம் தனில் நாட்டிய ...... மயிலேறி

அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத
     அசுரர் அகம்கெட ஆர்த்திடு ...... கொடிகூவ

அமரர் அடங்கலும் ஆட்கொள அமரர் தலம் குடியேற்றிட
     அமரரையும் சிறை மீட்டருள் ...... பெருமாளே

























































No comments:

Post a Comment