(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: திருப்பூர்
திருக்கோயில்: அருள்மிகு அகிலாண்ட நாயகி அம்மை சமேத ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
திருப்பூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 30 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது சிங்கை எனும் புராதனத் தலம் (தற்கால வழக்கில் காங்கேயம்). அகத்திய மாமுனி வழிபட்ட சிறப்புப் பொருந்தியது.
ஓரளவு விசாலமான ஆலய வளாகம், நன்கு புனரமைக்கப் பெற்றுள்ள நிலையில் திகழ்கின்றது. சிவபரம்பொருள் அகஸ்தீஸ்வரர் எனும் திருநாமத்திலும், அம்பிகை அகிலாண்டேஸ்வரியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். உட்பிரகாரச் சுற்றின் பின்புறம், வலது பக்கத்தில் நம் வேலாயுதக் கடவுள் கடவுள் ஒரு திருமுகம்; இரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை 'சஞ்சரி உகந்து', 'சந்தித்தொறும் நாண' எனும் இரு திருப்பாடல்களால் போற்றிப் பரவியுள்ளார்.
(Google Maps: Akilandeswari Samedha Agastheeswarar Temple, Akhilandapuram, Kalimedu, Kangeyam, Tamil Nadu)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தந்ததன தந்த தந்ததன தந்த
தந்ததன தந்த ...... தனதான
சஞ்சரி உகந்து நின்று முரல்கின்ற
தண்குவளை உந்து ...... குழலாலும்
தண்தரள தங்கம் அங்கம் அணிகின்ற
சண்டவித கும்ப ...... கிரியாலும்
நஞ்சவினை ஒன்றி தஞ்சமென வந்து
நம்பிவிட நங்கையுடன் ஆசை
நண்புறெனை இன்று நன்றில்வினை கொன்று
நன்றுமயில் துன்றி ...... வரவேணும்
கஞ்சமலர் கொன்றை தும்பைமகிழ் விஞ்சி
கந்தி கமழ்கின்ற ...... கழலோனே
கன்றிடு பிணங்கள் தின்றிடு கணங்கள்
கண்டு பொருகின்ற ...... கதிர்வேலா
செஞ்சொல் புனைகின்ற எங்கள்குற மங்கை
திண்குயம் அணைந்த ...... திருமார்பா
செண்பகம் இலங்கு மின்பொழில் சிறந்த
சிங்கையில் அமர்ந்த ...... பெருமாளே
திருப்பாடல் 2:
தந்ததன தான தந்ததன தான
தந்ததன தான ...... தனதான
சந்திதொறும் நாணம் இன்றிஅகம் வாடி
உந்தி பொருளாக ...... அலைவேனோ
சங்கைபெற நாளும் அங்கமுள மாதர்
தங்கள் வசமாகி ...... அலையாமல்
சுந்தரமதாக எந்தன்வினை ஏக
சிந்தைகளி கூர ...... அருள்வாயே
தொங்குசடை மீது திங்களணி நாதர்
மங்கை ரண காளி ...... தலைசாயத்
தொந்திதிமி தோதி தந்திதிமி தாதி
என்று நடமாடும் அவர்பாலா
துங்கமுள வேடர் தங்கள்குல மாதை
மங்களமதாக ...... அணைவோனே
கந்த முருகேச மிண்டசுரர் மாள
அந்த முனை வேல்கொடெறிவோனே
கம்பர் கயிலாசர் மைந்த வடிவேல
சிங்கை நகர் மேவு ...... பெருமாளே
2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment