Friday, August 24, 2018

அவிநாசி (திருப்புக்கொளியூர்)

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: திருப்பூர் 

திருக்கோயில்: அருள்மிகு அவிநாசியப்பர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)


அமைவிடம் (செல்லும் வழி):

திருப்பூர் இரயில் நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற தலமான அவிநாசி (தலப்பெயர் திருப்புக்கொளியூர், ஆலயப் பெயர் அவிநாசி). சுந்தரரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. எண்ணிறந்த திருச்சன்னிதிகளோடு கூடிய விசாலமான திருக்கோயில் வளாகம், சிவபரம்பொருள் லிங்கேஸ்வரராகவும் உமையன்னை பெருங்கருணை நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். 

நம் சுந்தரனார், முதலை வாயினின்றும் பாலகனொருவனைத் திருவருளின் துணை கொண்டு உயிர்ப்பித்த தாமரைக் குளம் அவிநாசித் திருக்கோயிலிலிருந்து 1/2 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. தற்பொழுது நீரின்றிக் காணப் பெறும் அவ்விடத்தில் தம்பிரான் தோழருக்குச் சிறிய சன்னிதியொன்றும் உண்டு. 

திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் சுப்பிரமணியர் எனும் திருநாமத்தில், இரு தேவியருடன் நின்ற பேரழகுத் திருக்கோலத்தில் பிரத்யட்சமாக எழுந்தருளி இருக்கின்றான். இம்மூர்த்தியின் திருச்சன்னிதி முதலில் வெளிப்பிராகாரச் சுற்றில், மூலக் கருவறைக்குப் பின்புறம், வலது பக்கத்தில் அமைந்திருந்தது. பின்னர் அறுபடை வீடுகளின் திருச்சன்னிதிகளை ஆலய வளாகத்தில் அமைப்பதாகத் திருப்பணித் திட்டமொன்று துவங்கப் பெற்று, அதன் ஒரு பகுதியாக, சுப்பிரமண்யரை ஆலய வளாகத்தின் முற்புறத்தில் எழுந்தருளச் செய்தனர். பின்னர் எக்காரணத்தினாலோ அத்திருப்பணி இடையில் நின்று விட்டது. முன்பு சுப்பிரமணியர் எழுந்தருளியிருந்த இடத்தில இப்பொழுது புதிதாக பிரதிஷ்டை செய்விக்கப் பெற்ற செந்திலாண்டவன் எழுந்தருளி இருக்கின்றான். 

அருணகிரிப் பெருமான் (தற்பொழுது வெளிப்பிரகாரத் துவக்கத்தில்) எழுந்தருளியிருக்கும் சுப்பிரமணிய மூர்த்தியை 6 திருப்புகழ் திருப்பாடல்களால் போற்றிப் பரவியுள்ளார்,  

(Google Maps: Arulmigu Avinashi Lingeshwarar Temple, Mangalam Road, Avinashi, Tamil Nadu 641654, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 6.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதானத் தனதான தனதானத் ...... தனதான

இறவாமல் பிறவாமல் எனையாள்சற் ...... குருவாகிப்
பிறவாகித் திரமான பெருவாழ்வைத் ...... தருவாயே
குறமாதைப் புணர்வோனே குகனேசொற் ...... குமரேசா
அறநாலைப் புகல்வோனே அவிநாசிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தந்தத்தத் தானன தானன
     தந்தத்தத் தானன தானன
          தந்தத்தத் தானன தானன ...... தனதான

பந்தப்பொற் பார பயோதரம் 
     உந்திச் சிற்றாடகை மேகலை
          பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே

பண்டெச்சில் சேரியில் வீதியில்
     கண்டிச்சிச்சாரொடு மேவியெ
          பங்குக் கைக் காசு கொள் வேசியர் ...... பனிநீர் தோய்

கொந்துச்சிப் பூஅணி கோதையர்
     சந்தச் செந்தாமரை வாயினர்
          கும்பிட்டுப் பாணியர் வீணியர் அநுராகம் 

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினும் 
     மண்டிச் செச்சேஎன வானவர்
          கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே

அந்தத் தொக்காதியும் ஆதியும்
     வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
          அண்டத்துப் பாலுற மாமணி ...... ஒளிவீசி

அங்கத்தைப் பாவை செய்தாமென
     சங்கத்துற்றார் தமிழோத!உ
          வந்துக் கிட்டார் கழுவேறிட ...... ஒருகோடிச்

சந்தச் செக்காள நிசாசரர்
     வெந்துக்கத் தூளி படாமெழ
          சண்டைக்கெய்த்தார் அமராபதி ...... குடியேறத்

தங்கச் செங்கோல் அசை சேவக
     கொங்கில் தொக்கார் அவிநாசியில்
          தண்டைச் சிக்காரயில் வேல்விடு ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

மனத்திரைந்தெழும் ஈளையும் மேலிட
     கறுத்த குஞ்சியுமே நரையாயிட
          மலர்க்கண் அன்டிருளாகியுமே நடை ...... தடுமாறி

வருத்தமும் தரதாய் மனையாள் மக
     வெறுத்திடம் கிளையோருடன் யாவரும்
          வசைக்குறும் சொலினால் மிகவே தினம் ...... நகையாட

எனைக் கடந்திடு பாசமுமே கொடு
     சினத்து வந்தெதிர் சூலமுமே கையில் 
          எடுத்தெறிந்தழல் வாய்விடவே பயம் உறவேதான்

இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர்
     பிடிக்கு முன்புன தாள் மலராகிய
          இணைப்பதம் தரவே மயில் மீதினில் ...... வரவேணும்

கனத்த செந்தமிழால் நினையே தினம்
     நினைக்கவும் தருவாய் உனதாரருள்
          கருத்திருந்துறைவாய் எனதாருயிர் ...... துணையாகக்

கடற்சலம் தனிலே ஒளி சூரனை
     உடல் பகுந்திரு கூறெனவே அது
          கதித்தெழுந்தொரு சேவலும் மாமயில் ...... விடும்வேலா

அனத்தனும் கமலாலய மீதுறை
     திருக்கலந்திடும் மாலடி நேடிய
          அரற்கரும் பொருள் தானுரை கூறிய ...... குமரேசா

அறத்தையும் தருவோர் கன பூசுரர்
     நினைத் தினம் தொழுவார் அமராய்புரி
          அருள் செறிந்தவிநாசியுள் மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தத்தன தானான தத்தன தானான
     தத்தன தானான ...... தனதான

பக்குவ ஆசார லட்சண சாகாதி
     பட்சணமா மோன ...... சிவயோகர்

பத்தியில் ஆறாறு தத்துவ மேல்வீடு
     பற்று நிராதார ...... நிலையாக

அக்கணமே மாய துர்க்குணம் வேறாக
     அப்படையே ஞான ...... உபதேசம்

அக்கற வாய்பேசு சற்குரு நாதா!உ
     னற்புத சீர்பாதம் ...... மறவேனே

உக்கிர வீராறு மெய்ப் புயனே நீல
     உற்பல வீராசி ...... மணநாற

ஒத்த நிலா வீசு நித்தில நீராவி
     உற்பல ராசீவ ...... வயலூரா

பொக்கமிலா வீர விக்ரம மாமேனி
     பொற்ப்ரபை யாகார ...... அவிநாசிப்

பொய்க்கலி போமாறு மெய்க்கருள் சீரான
     புக்கொளியூர் மேவு ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனத்தத்தன தானன தானன
     தனத்தத்தன தானன தானன
          தனத்தத்தன தானன தானன தந்ததான

மதப்பட்ட விசால கபோலமும் 
     முகப்பில்சன ஆடையும் ஓடையும் 
          மருக் கற்புர லேப லலாடமும் ...... மஞ்சையாரி

வயிற்றுக்கிடு சீகர பாணியும் 
     மிதல் செக்கர் விலோசன வேகமும் 
          மணிச் சத்த கடோர புரோசமும் ஒன்றுகோல

விதப்பட்ட வெளானையில் ஏறியும் 
     நிறைக் கற்பக நீழலில் ஆறியும்
          விஷத்துர்க்கன சூளிகை மாளிகை ...... இந்த்ர லோகம்

விளக்கச் சுரர் சூழ்தர வாழ்தரு
     பிரப்புத்வ குமார சொரூபக
          வெளிப்பட்டெனையாள் வயலூரில் இருந்த வாழ்வே

இதப்பட்டிடவே கமலாலய
     ஒருத்திக்கிசைவான பொனாயிரம் 
          இயற்றப்பதி தோறும் உலாவிய ...... தொண்டர் தாள

இசைக்கொக்க இராசத பாவனை
     உளப்பெற்றொடு பாடிட வேடையில் 
          இளைப்புக்கிட வார் மறையோன் என ...... வந்துகானில் 

திதப்பட்டெதிரே பொதி சோறினை
     அவிழ்த்திட்டவிநாசியிலே வரு
          திசைக் குற்ற சகாயனும் ஆகி மறைந்து போமுன்

செறிப்பித்த கராஅதின் வாய்!மக
     வழைப்பித்த புராண க்ருபாகர
          திருப்புக்கொளியூர் உடையார் புகழ் ...... தம்பிரானே.

திருப்பாடல் 6:
தனத்தத்தன தான தான தானன
     தனத்தத்தன தான தான தானன
          தனத்தத்தன தான தான தானன ...... தந்ததான

வனப்புற்றெழு கேத மேவு கோகிலம்
     அழைக்கப் பொரு மாரன் ஏவதா மலர்
          மருத்துப்பயில் தேரிலேறி மாமதி ...... தொங்கலாக

மறுத்துக்கடல் பேரி மோதவே இசை
     பெருக்கப் படை கூடி மேலெழா அணி
          வகுத்துக் கொடு சேமமாக மாலையில் ...... வந்து காதிக்

கனக்கப் பறைதாய் அளாவ நீள்கன
     கருப்புச் சிலை காமர்ஓவில் வாளிகள்
          களித்துப்பொர வாசம் வீசு வார்குழல் ...... மங்கை மார்கள்

கலைக்குட்படு பேதமாகி மாயும்!அ
     துனக்கு ப்ரியமோ க்ருபாகரா இது
          கடக்கப்படு நாமமான ஞானம்அதென்று சேர்வேன்

புனத்தில் தினை காவலான காரிகை
     தனப்பொன் குவடேயும் மோக சாதக
          குனித்தப் பிறை சூடும் வேணி நாயகர் ...... நல்குமாரா

பொறைக்குப் புவி போலும் நீதி மாதவர்
     சிறக்கத் தொகு பாசி சோலை மாலைகள்
          புயத்துற்றணி பாவ சூரன்ஆருயிர் ...... கொண்டவேலா

சினத்துக்கடி வீசி மோதும் மாகடல் 
     அடைத்துப் பிசிதாசனாதி மாமுடி
          தெறிக்கக் கணை ஏவும் வீர மாமனும் ...... உந்தி மீதே

செனித்துச் சதுர் வேதம்ஓது நாமனும் 
     மதித்துப்புகழ் சேவகா விழாமலி
          திருப்புக்கொளியூரில் மேவு தேவர்கள் ...... தம்பிரானே


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)





























No comments:

Post a Comment