(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: ஈரோடு
திருக்கோயில்: அருள்மிகு சுப்ரமண்ய சுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
ஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டிலிருந்து 30 கி .மீ தூரத்திலும், திருப்பூரிலிருந்து சுமார் 39 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது ('சிரகிரி' என்றும் குறிக்கப் பெறும்) சென்னிமலை. பாலன் தேவ ராய சுவாமிகளால் கந்தர் சஷ்டி கவச நூல் அரங்கேறியுள்ள சிறப்புப் பொருந்தியது. 'சிரகிரி வேலவ சீக்கிரம் வருக' எனும் கவச வரி இத்தலத்திகுரியது. 'சரவண முனிவர்' எனும் அருளாளர் தலபுராண நூலினை அருளிச் செய்துள்ளார்.
*
1300 படிகளோடு கூடிய அழகிய மலைக்கோயில். வாகனங்களில் செல்ல சீரான மலைப்பாதையும் உண்டு எனினும் வயது மற்றும் உடல்நலச் சூழல் காரணங்களுக்காகவே இப்பாதை எனும் தெளிவான புரிதல் அவசியம். ஏனையோர் படிகளேறிச் சென்று காதலுடன் கந்தக் கடவுளைத் தரிசிப்பதே ஆன்றோர் அறிவுறுத்தும் உத்தமமான வழிபாட்டு மார்க்கம். படிகள் செங்குத்தாக இல்லாமல் நீளவாக்கில் ஓரிரு அடிகள் வரையில் நீண்டிருப்பதால் ஏறிச் செல்வதில் ஒருசிறிதும் சிரமம் இருப்பதில்லை, சுமார் 1/2 மணி நேரத்திற்குள்ளாகவே மலைக்கோயிலை அடைந்து விடலாம்.
சென்னிமலை ஆண்டவன் தண்டமேந்திய திருக்கோலத்தில் வரப்பிரசாதியாய் எழுந்தருளி இருக்கின்றான். ஆண்டுதோறும் அனைத்து நாட்களிலும் பக்தர்கள் பெருந்திரளெனக் கூடி வந்து சென்னிமலை வேலவனைப் போற்றிப் பணிந்து நல்வரங்களைப் பெற்றுச் செல்கின்றனர். மூல மூர்த்திக்கு இடதுபுறமுள்ள தனிச்சன்னிதியொன்றில் வள்ளி; தெய்வயானை தேவியர் அருகருகே எழுந்தருளி இருக்கின்றனர்.
மலைக்கோயிலின் வெளிப்பிரகாரத்தை வலம் வருகையில் மற்றுமொரு சிறு ஆலயத்திற்குச் செல்ல படிகள் மேல்நோக்கிச் செல்கின்றன. இங்குள்ள ஆலயத்தில் வள்ளி; தெய்வயானை தேவியர் அருகருகே எழுந்தருளி இருக்க, இடையில் மூன்று சிறு சுயம்பு சிவலிங்கத் திருமேனிகளில் சென்னிமலை ஆண்டவன்; வள்ளி; தெய்வயானை தேவியர் ஆகிய மூவரும் எழுந்தருளி இருக்கின்றனர்.
திருப்புகழ் மாமுனிவரான நம் அருணகிரிப் பெருமான் இத்தலத்திற்கென ஒரு திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்,
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதனதனத் ...... தனதான
தனதனதனத் ...... தனதான
பகலிரவினில் தடுமாறா
பதிகுருவெனத் ...... தெளிபோத
ரகசியமுரைத்தநுபூதி
ரதநிலை தனைத் ...... தருவாயே
இகபரம் அதற்கிறையோனே
இயலிசையின் முத்தமிழோனே
சக சிரகிரிப் ...... பதிவேளே
சரவணபவப் ...... பெருமாளே
2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment