(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: நாமக்கல்
திருக்கோயில்: அருள்மிகு பால சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
ராசிபுரத்திலிருந்து சுமார் 12 கி.மீ தூரத்தில், வெண்ணந்தூர் பேரூராட்சியிலிலுள்ள அலவாய்ப்பட்டி எனும் சிற்றூரில், அலவாய்மலை எனும் மலைக்கோயில் அமைந்துள்ளது. கூகுள் மேப்ஸில் "alavaimalai" என்று குறிப்பிட்டால், படிகள் துவங்கும் மலையடிவாரப் பகுதிக்கு நேரே நம்மை இட்டுச் சென்று விடும்.
"கருவாகியெ தாய் உதரத்தினில்" என்று துவங்கும் திருப்புகழின் இறுதி வரியில் "அலையாமலை மேவிய பத்தர்கள் பெருமாளே" என்று அருணகிரிநாதர் குறித்துள்ளார். சிவத்திரு. தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை அவர்கள் இத்திருப்புகழைப் பழமுதிர்ச்சோலை தலப் பாடலாகக் குறித்திருப்பினும், 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரும், திருப்புகழ் தல ஆய்வாளருமான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்கள் இது தொடர்பான தன்னுடைய ஆய்வினை மேலும் தொடர்ந்து, 'ராசிபுரத்திலுள்ள அலவாய்மலை எனும் இப்பகுதியை' மேற்குறித்துள்ள திருப்பாடலுக்கான தலமாக முன்மொழிந்துள்ளார்.
இயற்கை எழில் கொஞ்சும் ரம்மியமான பகுதியில், 1200 படிகளோடு இம்மலைக்கோயில் விளங்குகின்றது. குமாரக் கடவுளின் சிறு திருக்கோயிலொன்று இம்மலையின் நடுபாகத்தில் அமைந்துள்ளது. விஷேஷ தினங்களில் மட்டுமே மலைக்கோயிலுக்கு அர்ச்சர்கர் சென்று வருவார் என்றும், பிற நேரங்களில் வெளியிலிருந்த வண்ணமே கந்தக் கடவுளைத் தரிசிக்க இயலுமென்றும் அங்குள்ளோர் மூலம் அறியப் பெறுகின்றோம். அடிவார மண்டபத்தில் எழுந்தருளியுள்ள விநாயகப் பெருமானைப் பணிந்து போற்றியவாறு படிகளில் ஏறத் துவங்குகின்றோம். மலைப் பகுதி முழுவதிலும் வறண்ட பகுதிகளென்று ஏதுமின்றிச் செழிப்புடன் காணப் பெறுகின்றது.
துவக்கத்தில் விசாலமாகத் தோன்றும் கருங்கல் படிகள் மெதுமெதுவே குறுகலாகத் துவங்குகின்றன. சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரத்தில் மலைக்கோயிலை அடையலாம். சற்று கடினமான செங்குத்தான கருங்கல் படிகள். அருணகிரிநாதரின் குருவருளையும், கந்தவேளின் திருவருளையும் பற்றுக் கோடெனக் கொண்டு மெதுமெதுவே முன்னேறிச் செல்கின்றோம். எங்கள் சிறு குழுவினரைத் தவிர வேறெவரும் அப்பாதை முழுவதிலும் இல்லை. இடையில் ஒரு மண்டபம் மட்டுமே இளைப்பாறக் கிடைக்கின்றது, அதன் பின்னர் படிகள் மட்டுமே.
திருவருளின் துணை கொண்டு அரிய பிரயத்தனத்துடன் மலைக்கோயிலை அடைகின்றோம். வியர்வை ஆறாகப் பெருகியோட, சற்று நிதான நிலைக்கு வரவே சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாகத் தேவைப்படுகின்றது. சிறு ஆலயம் மற்றுமொரு மண்டபம். வாயில் கம்பிகளின் வழியே காதலுடன் பார்க்கையில், நம் சுப்பிரமணிய தெய்வம் விபூதிக் காப்பு அலங்காரத்தில், வலது திருக்கரத்தில் வேலேந்திய நின்ற திருக்கோலத்தில், அற்புதப் புன்முறுவலோடு எழுந்தருளி இருக்கின்றான். நாம் நின்று தரிசிக்கும் இடத்திலிருந்து வேலவனின் திருமுகம் இருக்குமிடத்தை ஒருவாறு உணர்ந்து கொள்ள, சில நிமிட நேரம் தேவைப்படும்.
நெகிழ்வான தரிசனம், அங்கிருந்த வண்ணமே இத்தலத்திற்கான திருப்புகழைப் பாராயணம் புரிந்து வேலவனை வணங்கி மகிழ்ந்தோம். மீண்டும் படிகளில் இறங்கும் பொழுது மிகக் கவனமாகவும், மெதுமாகவும் பயணித்து அடிவாரத்தை அடைதல் வேண்டும்.
(இறுதிக் குறிப்பு: அடிவார மண்டபத்தில் கொங்கணகிரி திருப்புகழ் கல்வெட்டு ஒன்று பெரியதாகப் பொறிக்கப் பெற்றுள்ளது. இருப்பினும் நாம் பாராயணம் புரிந்து வணங்க வேண்டியது இப்பதிவில் இணைத்துள்ள அலவாய்மலை திருப்புகழையே)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனனாதன தானன தத்தன
தனனாதன தானன தத்தன
தனனாதன தானன தத்தன ...... தனதான
கருவாகியெ தாய் உதரத்தினில்
உருவாகவெ கால்கை உறுப்பொடு
கனிவாய்விழி நாசிஉடல் செவி ...... நரைமாதர்
கையிலே விழஏகி அணைத்துயில்
எனவேமிக மீது துயிற்றிய
கருதாய் முலையார் அமுதத்தினில் இனிதாகித்
தரு தாரமுமாகிய சுற்றமும்
நலவாழ்வு நிலாத பொருட்பதி
சதமாம்இது தானெனவுற்றுனை ...... நினையாத
சதுராய்உன தாளிணையைத் தொழ
அறியாத நிர்மூடனை நிற்புகழ்
தனையோதி மெய்ஞ் ஞானமுறச் செய்வதொருநாளே
செருவாய் எதிராம் அசுரத்திரள்
தலை மூளைகளோடு நிணத்தசை
திமிர் தாதுள பூதகணத்தொடு ...... வருபேய்கள்
திகுதாவுண வாய் உதிரத்தினை
பலவாய் நரியோடு குடித்திட
சிலகூகைகள் தாமு(ம்) நடித்திட ...... அடுதீரா
அருமா மறையோர்கள் துதித்திடு
புகர்வாரண மாதுதனைத் திகழ்
அளிசேர் குழல் மேவு குறத்தியை ...... அணைவோனே
அழகானபொன் மேடை உயர்த்திடு
முகில்தாவிய சோலை வியப்புறு
அலையாமலை மேவிய பத்தர்கள் ...... பெருமாளே.
2022 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment