(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: கரூர்
திருக்கோயில்: அருள்மிகு அக்னீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
கரூரிலிருந்து சுமார் 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது நெரூர். சிவபரம்பொருள் அக்னீஸ்வரர் எனும் திருநாமத்திலும், அம்பிகை சௌந்தர நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். இதன் புராதனத் திருக்கோயில் மிகவும் சிதிலமடைந்திருந்த காரணத்தால் அவ்விடத்திலேயே புதிதாக கற்கோயிலொன்றினை எழுப்பும் திருப்பணி 2007 ஆம் ஆண்டு துவங்கி இன்றளவும் நடந்தேறி வருகின்றது, இன்னமும் பணி மீதமுள்ளதாக அறிகின்றோம்.
*
ஆலய வளாகமெங்கிலும் பல்வேறு சிவபுராண வடிவங்களும், நிகழ்வுகளும் கற்சிற்பங்களாகப் பொறிக்கப் பெற்றுள்ளன. வழக்கமான சிவாலய அமைப்பில் இல்லாமல், அக்னீஸ்வரர்; அறுமுகக் கடவுள்; சௌந்தர நாயகி அம்மை ஆகியோரின் திருச்சன்னிதிகளை (அருகருகே) நேர்க்கோட்டில் அமைத்துள்ளனர்.
இங்கு திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் விளக்கமான ஆறுதிருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் பிரத்யட்சமாய் எழுந்தருளி இருக்கின்றான் (அருகில் தேவியர் இல்லை). வேலாயுத தெய்வத்தின் இடது பக்கத்தில் நம் அருணகிரிப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் கூப்பிய திருக்கரங்களுடன் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். காண்பதற்கரிய திருக்காட்சி.
அருணகிரியார் இத்தலத் திருப்புகழில் வயலூரில் கந்தவேள் தனக்குப் பேரருள் புரிந்த நிகழ்வினை நினைவு கூர்ந்து நன்றி பாராட்டுகின்றார்,
-
வயலி நகரியில் அருள்பெற மயில்மிசை
உதவு பரிமள மதுகர வெகுவித
வனச மலரடி கனவிலு(ம்) நனவிலு(ம்) மறவேனே
மேலும் இத்திருப்புகழில் மருதமரங்களாக மாறியிருந்த நள; கூபர்கள் எனும் கந்தர்வர்களுக்குச் சாப விமோசனம் அளித்தருள - உரலோடு தவழ்ந்து சென்ற கண்ணனின் இளமை அழகையும், கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்தருளிய கருணையோடு கூடிய வலிமையையும், மாபாரத யுத்தத்தில் அர்ஜுனனுக்குத் தேரோட்டிச் சென்ற ஸ்ரீகிருஷ்ணனின் எளி வந்த தன்மையினையும் போற்றிப் பின்னர் 'ஈரேழு புவனங்களும் போற்றும் திருமாலின் மருகனே' என்று நெரூருறை வேலாயுதப் பெருங்கடவுளைப் பணிந்தேத்துகின்றார்.
(குறிப்பு: இந்த ஆலயத்திலிருந்து சுமார் 2 கி.மீ தூரத்தில் பிரம்ம ஞானி சதாசிவ பிரமேந்திரரின் அதிஷ்ட்டான ஆலயம் அமைந்துள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன
தனன தனதன தனதன தனதன ...... தனதான
குருவும் அடியவர் அடியவர் அடிமையும்
அருண மணியணி கணபண விதகர
குடில செடிலினும் நிகரென வழிபடு ...... குணசீலர்
குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல்
அழுகுதலும்இலி நலமிலி பொறையிலி
குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர்
மருவு முலையெனும் மலையினில் இடறியும்
அளகமென வளர் அடவியில் மறுகியும்
மகரம் எறியிரு கடலினில் முழுகியும் உழலாமே
வயலி நகரியில் அருள்பெற மயில்மிசை
உதவு பரிமள மதுகர வெகுவித
வனச மலரடி கனவிலும் நனவிலும் ...... மறவேனே
உருவு பெருகயல் கரியதொர் முகிலெனும்
மருது நெறிபட முறைபட வரைதனில்
உரலினொடு தவழ் விரகுள இளமையும் ...... மிகமாரி
உமிழ நிரைகளின் இடர்கெட வடர்கிரி
கவிகை இடவல மதுகையும் நிலைகெட
உலவில் நிலவறை உருவிய அருமையும் ஒருநூறு
நிருப ரணமுக அரசர்கள் வலிதப
விசயன் ரதமுதல் நடவிய எளிமையும்
நிகில செகதலம் உரைசெயும் அரிதிரு ...... மருகோனே
நிலவு சொரிவளை வயல்களும் நெடுகிய
குடக தமனியும் நளினமும் மருவிய
நெருவை நகருறை திருஉரு அழகிய ...... பெருமாளே
2022 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment