Sunday, August 26, 2018

திருச்செங்கோடு

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: நாமக்கல் 

திருக்கோயில்: அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்:

நாமக்கலிலிருந்து சுமார் 37 கி.மீ தூரத்திலும், ஈரோட்டிலிருந்து 25 கி.மீ பயணத் தொலைவிலும் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற திருத்தலமான திருச்செங்கோடு (கொடிமாடச் செங்குன்றூர்; நாககிரி; நாகசலம் என்ற திருப்பெயர்களாலும் குறிக்கப் பெறுகின்றது). 

ஞானசம்பந்தப் பெருமான் (அடியார்கள் எதிர்கொள்ள) இத்தல இறைவரை 'வெந்த வெண்ணீறணிந்து' எனும் திருப்பதிகத்தால் போற்றிப் பரவி, இந்நகரிலேயே சிறிது காலம் எழுந்தருளி இருக்கின்றார். பின்னர் திருநணா (பவானி) உள்ளிட்ட கொங்குத் தலங்களைத் தரிசித்து மீண்டும் செங்கோட்டிற்கு மீளுகையில், இப்பகுதியில் வெகுவாகப் பரவியிருந்த குளிர் சுரமொன்றினை 'அவ்வினைக்கு இவ்வினை' எனும் திருநீலகண்டத் திருப்பதிகத்தால் முற்றிலுமாய்ப் போக்கியருளிய நிகழ்வினைப் பெரியபுராணம் பதிவு செய்து போற்றுகின்றது. 

1300 படிகளோடு கூடிய அர்தநாரீஸ்வர ஷேத்திரம். அடிவாரக் கோயிலில் எழுந்தருளியுள்ள ஆறுமுக சுவாமியை முதற்கண் தரிசித்தல் மரபு. இங்கிருந்து தான் மலைக்கோயிலுக்கான படிகள் துவங்குகின்றன. பாதி தூரம் படிகளேறிச் செல்ல, பாதையின் வலதுபுறத்தில் ஞானசம்பந்த மூர்த்தியின் அற்புதத் திருமேனியொன்றினைத் தரிசிக்கலாம். இங்கிருந்து சரியாக 60 படிகள் முழுவதுமாய் மஞ்சள் வர்ணம் பூசப்பட்டுக் காட்சியளிக்கும், இதன் முடிவில் '60 படி முருகப் பெருமான்' எழுந்தருளி இருக்கின்றான். தனித்துவமான தெய்வத்தன்மை பொருந்திய சன்னிதியிது. ஒரு காலத்தில் இங்கு புரியப்பெறும் சத்தியத்தை வழக்காடு மன்றங்கள் கூட ஏற்றுக் கொள்ளுமாம். 

'சத்தியப்படி முருகன்' என்றும் போற்றப் பெறும் இச்சன்னிதியில் கந்தப் பெருமான் நின்ற திருக்கோலத்தில் (பின்புறம் மயில் விளங்கியிருக்க) எழுந்தருளி இருக்கின்றான். 'அத்த வேட்கை' என்று  துவங்கும் இத்தலத் திருப்புகழில் 'சத்ய வாக்யப் பெருமாளே' என்று நம் அருணகிரியார் குறித்திருப்பது இம்மூர்த்தியையே என்று உறுதியாகத் தோன்றுகின்றது. 

மலைக்கோயிலின் மூலக் கருவறையில் தனிப்பெரும் தெய்வமான அர்த்தநாரீஸ்வரப் பரம்பொருள் வார்த்தைகளால் விளக்கவொண்ணா பேரானந்தத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். நெடிதுயர்ந்த சுயம்பு அர்த்தநாரீஸ்வரத் திருமேனி, வலது புறம் தண்டமேந்திய சிவமூர்த்தி, இடது புறம் திருக்கரத்தினை இடையில் பொருத்திய திருக்கோலத்தில் நமையீன்ற அம்பிகை. முக்கண் முதல்வரின் ருத்ராக்ஷம், அம்பிகையின் திருமாங்கல்யம், இறைவரின் வலது திருவடி, அம்மையின் இடது திருவடி, திருவடி நிலைகளிலுள்ள இயற்கையான நீரூற்று ஆகியவைகளை அர்ச்சகர் தரிசனம் செய்து வைக்கின்றார் (திருமுக தரிசனம் இத்திருமேனியில் அவ்வளவு விளக்கமாகத் தரிசிக்கக் கிடைப்பதில்லை).

மற்றுமொரு திருச்சன்னிதியில் சிவசக்தி குமாரனான நம் செங்கோட்டு வேலவன் 'வெள்ளை பாஷாண சுயம்புத் திருமேனியோடு, வலது திருக்கரத்தில்  கல்லால்ஆன வேலுடனும், இடது திருக்கரத்தில் சேவலை ஏந்திய நின்ற திருக்கோலத்தில் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான் (இங்கும் திருமுகம் அவ்வளவு திருத்தமாகத் தரிசிக்கக் கிடைப்பதில்லை). வேலவனின் சன்னிதிக்குச் செல்லு முன்னர்; வலதுபுறம் கூப்பிய கரங்களுடன் அமர்ந்த திருக்கோலத்தில் திருப்புகழ் வேந்தரான நம் அருணகிரிப் பெருமான் எழுந்தருளி இருக்கின்றார். 

இத்தலத்திற்கென 21 திருப்பாடல்களை அருணகிரியார் அருளிச் செய்துள்ளார்.

(Google Maps: Arthanareeswarar Temple, Arthanareeswarar Hills, Tiruchengode, Tamil Nadu 637211, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 21.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான

அன்பாக வந்து உன்தாள் பணிந்து
     ஐம்பூதம் ஒன்ற ...... நினையாமல்

அன்பால் மிகுந்து நஞ்சாரு கண்கள் 
     அம்போருகங்கள் ...... முலைதானும்

கொந்தே மிகுந்து வண்டாடி நின்று
     கொண்டாடுகின்ற ...... குழலாரைக்

கொண்டே நினைந்து மன்பேது மண்டி
     குன்றா மலைந்து ...... அலைவேனோ

மன்றாடி தந்த மைந்தா மிகுந்த
     வம்பார் கடம்பை ...... அணிவோனே

வந்தே பணிந்து நின்றார் பவங்கள்
     வம்பே தொலைந்த ...... வடிவேலா

சென்றே இடங்கள் கந்தா எனும்பொ
     செஞ்சேவல் கொண்டு ...... வரவேணும்

செஞ்சாலி கஞ்சம் ஒன்றாய் வளர்ந்த
     செங்கோடமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான

பந்தாடி அங்கை நொந்தார் பரிந்து
     பைந்தார் புனைந்த ...... குழல்மீதே

பண்பார் சுரும்பு பண்பாடுகின்ற
     பங்கேருகம் கொள் ...... முகமீதே

மந்தார மன்றல் சந்தாரம் ஒன்றி
     வன்பாதகம் செய் ...... தனமீதே

மண்டாசை கொண்டு விண்டாவி நைந்து
     மங்காமல் உந்தன் அருள் தாராய்

கந்தா அரன்தன் மைந்தா விளங்கு
     கன்றா முகுந்தன் ...... மருகோனே

கன்றா விலங்கல் ஒன்றாறு கண்ட
     கண்டா அரம்பை ...... மணவாளா

செந்தாதடர்ந்த கொந்தார் கடம்பு
     திண்தோள் நிரம்ப ...... அணிவோனே

திண்கோடரங்கள் எண்கோடுறங்கு
     செங்கோடமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தந்தான தந்த தந்தான தந்த
     தந்தான தந்த ...... தனதான

வண்டார் மதங்கள் உண்டே மயங்கி
     வந்தூரு கொண்டல் அதனோடும்

வண்காமன் அம்பு தன்கால் மடங்க
     வன்போர் மலைந்த ...... விழிவேலும்

கொண்டே வளைந்து கண்டார் தியங்க
     நின்றார் குரும்பை ...... முலைமேவிக்

கொந்தார் அரும்பு நின்தாள் மறந்து
     குன்றாமல் உந்தன் அருள்தாராய்

பண்டாழி சங்கு கொண்டாழி தங்கு
     பண்போன் உகந்த ...... மருகோனே

பண்சார நைந்து நண்போதும் அன்பர்
     பங்காகி நின்ற ...... குமரேசா

செண்டாடி அண்டர் கொண்டாட மன்றில்
     நின்றாடி சிந்தை ...... மகிழ் வாழ்வே

செஞ்சாலி மிஞ்சி மஞ்சாடுகின்ற
     செங்கோடமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தனதன தனதன தனதன தனதன
     தந்தான தந்த ...... தனதான

கரையற உருகுதல் தருகயல் விழியினர்
     கண்டான செஞ்சொல் ...... மடமாதர்

கலவியில் முழுகிய நெறியினில் அறிவு!க
     லங்கா மயங்கும் ...... வினையேனும்

உரையையும் அறிவையும் உயிரையும் உணர்வையும்
     உன்பாத கஞ்ச ...... மலர்மீதே

உரவொடு புனைதர நினைதரும் !அடியரொ
     டொன்றாக என்று ...... பெறுவேனோ

வரையிரு துணிபட வளைபடு சுரர் குடி
     வந்தேற இந்த்ர ...... புரிவாழ

மதவித கஜரத துரகத பததியின்
     வன்சேனை மங்க ...... முதுமீன

திரைமலி சலநிதி முறையிட நிசிசரர்
     திண்டாட வென்ற ...... கதிர்வேலா

ஜெகதல மிடிகெட விளைவன வயலணி
     செங்கோடமர்ந்த ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனந்தாத் தனந்தாத் தனந்தாத் தனந்தாத்
     தனந்தாத் தனத்தம் ...... தனதான

இடம்பார்த்(து) இடம் பார்த்(து) இதம் !கேட்டிரந்தேற்
     றிணங்காப் பசிப் பொங்கனல் மூழ்கி

இறுங்காற்(கு) இறுங்கார்க்(கு) இரும்பார்க்கு நெஞ்சார்க்(கு) 
     இரங்கார்க்கியல் தண் ...... தமிழ்நூலின்

உடம்பாட்டுடன் பாட்டியம்பாத் தயங்காத்
     துளங்காத் திடப்புன் ...... கவிபாடி

ஒதுங்காப் பொதுங்காப் பதுங்காப் !புகன்றேத்
     துறும்பால் குணக்கன்புறலாமோ

கடந்தோல் கடந்தோற்(ற) அறிந்தாட்(கு) !அருந்தாள்
     கள்அணைந்தாட்(கு) அணித் திண் ...... புயமீவாய்

கரும்போற்(கு) அரும்போர்க் குளம்காட்டி !கண்டேத்
     து செங்கோட்டில் நிற்கும் ...... கதிர்வேலா

அடைந்தோர்க்கு உணந்தோர்க்கு அளிந்தோர்க்(கு) அமைந்தோர்க்(கு) 
     அவிழ்ந்தோர்க்(கு) உணற்கொன்றிலதாகி

அலைந்தோர்க்(கு) குலைந்தோர்க்(கு) இனைந்தோர்க்(கு) அலந்தோர்க்கு 
     அறிந்தோர்க்(கு) அளிக்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தனத்தந் தானன தனத்தந் தானன
     தனத்தந் தானன ...... தனதான

கலக்கும் கோதற வடிக்கும் சீரிய
     கருப்பஞ்சாறெனு(ம்) ...... மொழியாலே

கருத்தும் பார்வையும் உருக்கும் பாவிகள்
     கடைக்கண் பார்வையில் அழியாதே

விலக்கும் போதகம் எனக்கென்றேபெற
     விருப்பம் சாலவும் உடையேனான்

வினைக் கொண்டே மன(ம்) நினைக்கும் தீமையை
     விடற்கஞ்சேல் என ...... அருள்வாயே

அலைக்கும் தானவர் குலத்தின் சேனையை
     அறுக்கும் கூரிய ...... வடிவேலா

அழைத்துன் சீரிய கழல்செந்தாமரை
     அடுக்கும் போதகம் உடையோராம்

சிலர்க்கன்றே கதி பலிக்கும் தேசிக
     திருச்செங்கோபுர ...... வயலூரா

திதிக்கும் பார்வயின் மதிப்புண்டாகிய
     திருச்செங்கோடுறை ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
     தந்த தாத்தத் தனத்தந் தாத்தத்
          தந்த தாத்தத் தனத்தந் தாத்தத் ...... தனதான

துஞ்சு கோட்டிச் சுழற்கண் காட்டிக்
     கொங்கை நோக்கப் பலர்க்கும் காட்டிக்
          கொண்டணாப்பித் துலக்கம் சீர்த்துத் ...... திரிமானார்

தொண்டை வாய்ப்பொன் கருப்பஞ் சாற்றைத்
     தந்து சேர்த்துக் கலக்கும் தூர்த்தத்
          துன்ப வாழ்க்கைத் தொழில் பண்டாட்டத்துழலாதே

கஞ்சம் வாய்த்திட்டவர்க்கும் கூட்டிக்
     கன்று மேய்த்திட்டவர்க்கும் கூற்றைக்
          கன்ற மாய்த்திட்டவர்க்கும் தோற்றக் கிடையாநீ

கண்டு வேட்டுப் பொருள் !கொண்டாட்டத்
     தின்ப வாக்யத்தெனக்கும் கேட்கத்
          தந்து காத்துத் திருக்கண் சாத்தப் ...... பெறுவேனோ

வஞ்சமாய்ப் புக்கொளிக்கும் சூல்கைத்
     துன்று சூர்ப் பொட்டெழச் சென்றோட்டிப்
          பண்டு வாட்குள் களிக்கும் தோள் கொத்துடையோனே

வண்டு பாட்டுற்றிசைக்கும் தோட்டத்
     தண் குராப் பொன்புரக் கும்பேற்றித்
          தொண்டர் கூட்டத்திருக்கும் தோற்றத்திளையோனே

கொஞ்சு வார்த்தைக் கிளித்தண் சேல்கண் 
     குன்ற வேட்டிச்சியைக் கண் காட்டிக்
          கொண்டு வேட்டுப் புனப்பைங் காட்டில் ...... புணர்வோனே

கொங்குலாத்தித் தழைக்கும் காப்பொன் 
     கொண்டல்ஆர்த்துச் சிறக்கும் காட்சிக்
          கொங்கு நாட்டுத் திருச்செங்கோட்டுப் ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன
தானனந் தானதன தானனந் தானதன
     தானனந் தானதன தானனந் தானதன ...... தந்ததான

நீல மஞ்சானகுழல் மாலை வண்டோடு கதி
     நீடுபந்தாடு விழியார் பளிங்கான நகை
நீலபொன் சாபநுதல் ஆசையின் தோடசையும் 
     நீள்முகம் தாமரையினார் மொழிந்தார மொழி
நேர்சுகம் போல கமுகான கந்தாரர் புய
     நேர் சுணங்காவி கிளையேர் சிறந்தார் மலை இரண்டுபோல

நீளிபம் கோடிளநிர் தேனிருந்தார முலை
     நீடலங்கார சரமோடடைந்தார் மருவி
நீள்மணம் சாறுபொழி அவளம் போதிவையில் 
     நீலவண்டேவிய நல் காமன் அங்கார நிறை
நேச சந்தானஅல்குல் காம பண்டாரமுதை
     நேரு சம்போகர்இடை நூலொளிர்ந்தாசை உயிர் ...... சம்பையாரம் 

சாலுபொன் தோகைஅமை பாளிதம் சூழ்சரண
     தாள் சிலம்போலம்இடவே நடந்தான நடை
சாதி சந்தானெகின மார்பரம் தோகையென
     தானெழும் கோலவிலை மாதர் இன்பார்கலவி
தாவுகொண்டே கலிய நோய்கள் கொண்டே பிறவி
     தானடைந்தாழும் அடியேனிடம் சாலும்வினை ...... அஞ்சியோடத்

தார் கடம்பாடு கழல் பாத செந்தாமரைகள்
     தாழ்பெரும் பாதை வழியே படிந்தே வருகு
தாபம்விண்டே அமுத வாரி உண்டே பசிகள்
     தாபமும் தீர துகிர் போல்நிறம் காழ்கொள்உரு
சாரவும் சோதி முருகா எனும் காதல்கொடு
     தானிருந்தோத இரு ஓரகம் பேறுறுக ...... விஞ்சை தாராய்

சூலிஎந்தாய் கவுரி மோக சங்காரிகுழை
     தோடுகொண்டாடு சிவகாம சுந்தாரிநல
தூள்அணைந்தாளி நிருவாணி அங்காளிகலை
     தோகை செந்தாமரையின் மாது நின்றே துதிசெய்
தூய அம்பா கழைகொள் தோளிபங்காள க்ருபை
     தோய்பரன் சேயெனவுமே பெரும் பார்புகழும் ...... விந்தையோனே

சூரசங்கார சுரர் லோக பங்காஅறுவர்
     தோகை மைந்தா குமர வேள் கடம்பார தொடை
தோள கண்டா பரம தேசிகந்தா அமரர்
     தோகை பங்கா என வேதாகமம் சூழ்சுருதி
தோதகம் பாடமலை ஏழு துண்டாய் எழுவர்
     சோரி கொண்டாறு வர வேலெறிந்தே நடனமும் கொள்வேலா

மாலியன் பாறஒரு ஆடகன் சாகமிகு
     வாலியும் பாழி மரமோடு கும்பாகனனும் 
ஆழியும் கோரவலி ராவணன் பாறவிடும் 
     ஆசுகன் கோல முகிலோன் உகந்தோதிடையர்
மாதுடன் கூடி விளையாடு சம்போகதிரு
     மார்பகன் காணமுடியோன் அணங்கான மதி ...... ஒன்றும்ஆனை

மார்புடன் கோடுதன பாரமும் சேரஇடை
     வார் துவண்டாட முகமோடுகந்தீர ரச
வாயிதம் கோதிமணி நூபுரம் பாடமண
     ஆசை கொண்டாடு மயிலாளி துங்கா குறவி
மாது பங்கா மறைகுலாவு செங்கோடைநகர்
     வாழ வந்தாய் கரிய மாலயன் தேவர்புகழ் ...... தம்பிரானே.

திருப்பாடல் 9:
தந்த தத்தத் தந்த தத்தத்
     தந்த தத்தத் தந்த தத்தத்
          தந்த தத்தத் தந்த தத்தத் ...... தனதான

பொன்றலைப் பொய்க்கும் பிறப்பைத்
     தும்பறுத்திட்டின்று நிற்கப்
          புந்தியில் சற்றும் குறிக்கைக்கறியாமே

பொங்கி முக்கிச் சங்கை பற்றிச்
     சிங்கியொத்தச் சங்கடத்துப்
          புண் படைத்துக் கஞ்ச மைக்கண் ...... கொடியார்மேல்

துன்றும் இச்சைப் பண்டனுக்குப்
     பண்பளித்துச் சம்ப்ரமித்துத்
          தும்பி பட்சிக்கும் ப்ரசச் செய்ப்பதி மீதே

தொண்டு பட்டுத் தெண்டனிட்டுக்
     கண்டு பற்றத் தண்டை வர்க்கத்
          துங்க ரத்தப் பங்கயத்தைத் ...... தருவாயே

குன்றெடுத்துப் பந்தடித்துக்
     கண்சிவத்துச் சங்கரித்துக்
          கொண்டல் ஒத்திட்டிந்த்ரனுக்கிச் ...... சுரலோகா

கொம்பு குத்திச் சம்பழுத்தித்
     திண்தலத்தில் தண்டு வெற்பைக்
          கொண்டமுக்கிச் சண்டையிட்டுப் ...... பொரும் வேழம்

சென்றுரித்துச் !சுந்தரிக்கச்
     சம் தவிர்த்துக் கண் சுகித்துச்
          சிந்தையுள் பற்றின்றி நித்தக் ...... களிகூரும் 

செண்பகத்துச் சம்புவுக்குத்
     தொம் பதத்துப் பண்புரைத்துச்
          செங்குவட்டில் தங்கு சொக்கப் ...... பெருமாளே.

திருப்பாடல் 10:
தந்தத் தனத்தந் தாத்தன தந்தத் தனத்தந் தாத்தன
     தந்தத் தனத்தந் தாத்தன ...... தனதான

மந்தக் கடைக்கண் காட்டுவர் கந்தக் குழல்பின் காட்டுவர்
     மஞ்சள் பிணிப்பொன் காட்டுவர் அநுராக

வஞ்சத்திரக்கம் காட்டுவர் நெஞ்சில் பொருத்தம் காட்டுவர்
     வண்பல் திருப்பும் காட்டுவர் ...... தனபாரச்

சந்தப் பொருப்பும் காட்டுவர் உந்திச் சுழிப்பும் காட்டுவர்
     சங்கக் கழுத்தும் காட்டுவர் ...... விரகாலே

சண்டைப் பிணக்கும் காட்டுவர் பண்டிட்டொடுக்கம் காட்டுவர்
     தங்கட்கிரக்கம் காட்டுவதொழிவேனோ

பந்தித்தெருக்கம் தோட்டினை இந்துச் சடைக்கண் சூட்டுமை
     பங்கில் தகப்பன் தாள்தொழு ...... குருநாதா

பைம்பொன் பதக்கம் பூட்டிய அன்பற்கெதிர்க்கும் கூட்டலர்
     பங்கப்படச் சென்றோட்டிய ...... வயலூரா

கொந்தில் புனத்தின் பாட்டியல் அந்தக் குறப்பெண்டாட்டொடு
     கும்பிட்டிடக் கொண்டாட்டமொடணைவோனே

குன்றில் கடப்பம் தோட்டலர் மன்றல் ப்ரசித்தம் கோட்டிய
     கொங்கில் திருச்செங்கோட்டுறை ...... பெருமாளே

திருப்பாடல் 11:
தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

மெய்ச் சார்வற்றே பொய்ச்சார் உற்றே
     நிச்சார் துற்பப் ...... பவ வேலை

விட்டேறிப் போகொட்டாமல் தே
     மட்டே அத் தத்தையர் மேலே

பிச்சாய் உச்சாகிப் போர் எய்த்தார்
     பத்தார் விற்பொற் ...... கழல்பேணிப்

பிற்பால் பட்டே நற்பால் பெற்றார்
     முன் பாலைக் கற்பகமே தான்

செச்சாலிச் சாலத்தேறிச் சேல் 
     உற்றாணித்துப் ...... பொழிலேறும் 

செக்கோடைக் கோடுக்கே நிற்பாய்
     நித்தா செக்கர்க் ...... கதிரேனல்

முச்சாலிச் சாலித் தாள் வெற்பாள்
     முத்தார் வெட்சிப் ...... புயவேளே

முத்தா முத்தீ அத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

திருப்பாடல் 12:
தனத்தந் தான தானன தனத்தந் தான தானன
     தனத்தந் தான தானன ...... தனதான

வருத்தம் காண நாடிய குணத்தன்பான மாதரும் 
     மயக்கம் பூண மோதிய ...... துரம்ஈதே

மலக்கம் கூடியேயின உயிர்க்கும் சேதமாகிய
     மரிக்கும் பேர்களோடுறவணியாதே

பெருத்தும் பாவ நீடிய மலத்தின் தீமை கூடிய
     பிறப்பும் தீரவே உனதிருதாளே

பெறத் தந்தாளவே உயர் சுவர்க்கம் சேரவே அருள்
     பெலத்தின் கூர்மையானது ...... மொழிவாயே

இரத்தம் பாய மேனிகள் உரத்தும் சாடி வேல்கொடு
     எதிர்த்தும் சூரர் மாளவே ...... பொரும்வேலா

இசைக்கும் தாள மேளமே தனத்தந் தான தானன
     எனத்திண் கூளி கோடிகள் ...... புடைசூழத்

திருத்தன்பாகவே ஒரு மயில் கொண்டாடியே புகழ்
     செழித்தன்பாக வீறிய ...... பெரு வாழ்வே

திரள் சங்கோடை வாவிகள் மிகுத்தும் காவி சூழ்தரு
     திருச்செங்கோடு மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 13:
தான தானன தத்தன தத்தன
     தான தானன தத்தன தத்தன
          தான தானன தத்தன தத்தன ...... தனதான

ஆலகால படப்பை மடப்பியர்
     ஈர வாளற வெற்றும் விழிச்சியர்
          யாவராயினும் நத்தி அழைப்பவர் ...... தெருவூடே

ஆடியாடி நடப்பதொர் பிச்சியர்
     பேசியாசை கொடுத்து மருட்டிகள்
          ஆசை வீசியணைக்கும் முலைச்சியர் ...... பலரூடே

மாலையோதி விரித்து முடிப்பவர்
     சேலை தாழ நெகிழ்த்தரை சுற்றிகள்
          வாசம் வீசு மணத்தில் மினுக்கிகள் ...... உறவாலே

மாயையூடு விழுத்தி அழுத்திகள்
     காம போக வினைக்குள் உனைப்பணி
          வாழ்விலாமல் மலச் சனனத்தினில் உழல்வேனோ

மேலை வானொர் உரைத் தசரற்கொரு
     பாலனாகி உதித்தொர் முநிக்கொரு
          வேள்வி காவல் நடத்தி அகற்குரு ...... அடியாலே

மேவியே மிதிலைச் சிலை செற்றுமின்
     மாது தோள் தழுவிப்பதி புக்கிட
          வேறு தாய் அடவிக்குள் விடுத்த பினவனோடே

ஞால மாதொடு புக்க வனத்தினில்
     வாழும் வாலி படக்கணை தொட்டவன் 
          நாடி ராவணனைச் செகுவித்தவன் ...... மருகோனே

ஞான தேசிக சற்குரு உத்தம
     வேலவா நெருவைப்பதி வித்தக
          நாக மாமலை சொற்பெற நிற்பதொர் ...... பெருமாளே.

திருப்பாடல் 14:
தான தனத் ...... தனதான

காலனிடத்தணுகாதே
காசினியில் ...... பிறவாதே
சீல அகத்திய ஞான
தேனமுதைத் ...... தருவாயே
மால்அயனுக்கரியானே
மாதவரைப் ...... பிரியானே
நாலு மறைப் ...... பொருளானே
நாககிரிப் ...... பெருமாளே

திருப்பாடல் 15:
தானா தானா தானா தானா
     தானா தானத் ...... தனதான

தாமா தாமாலாபா !லோகா
     தாரா தாரத் தரணீசா

தானாசாரோ பாவா பாவோ
     நாசா பாசத்தபராத

யாமா யாமா தேசார் !ஊடா
     யாரா ஆபத்தெனதாவி

ஆமா காவாய் தீயேன் நீர்!வா
     யாதே ஈமத்துகலாமோ

காமா காமாதீனா நீள்!நா 
     கா வாய் காளக் ...... கிரியாய் !கங்

காளா லீலா பாலா நீபா
     காமாமோதக் ...... கனமானின்

தேமார் தேமா காமீ பாகீ
     தேசா தேசத்தவர் ஓதும் 

சேயே வேளே பூவே கோவே
     தேவே தேவப் ...... பெருமாளே.

திருப்பாடல் 16:
தத்த தனதனன தத்த தனதனன
     தத்த தனதனன ...... தனதான

அத்துகிரின் நலதரத்து அலன!அள
     கத்து வளர்செய் புளகித !பூத

ரத்திரு கமல கரத்திதயம் உருகி
     அத்தி இடனுறையும் ...... !நெடுமாம

ரத்து மலர்கனி அலைத்து வரும்!இடைத
     லத்துரக சிகரி ...... பகராதே

அத்தி மலஉடல் நடத்தி எரிகொள்!நிரை
     யத்தின் இடையடிமை ...... விழலாமோ

தத்து கவனஅரிணத்து உபநிட!வி
     தத்து முநியுதவு ...... மொழியால்!துத்

தத்தை நறவை அமுதத்தை நிகர்குறவர்
     தத்தை தழுவிய பனிருதோளா

தத்துததி துரகதத்து மிகு திதிசர்
     தத்து மலைஅவுணர் ...... குலநாகம் 

தத்த மிசை மரகதத் தமனிய மயில்
     தத்த விடும் அமரர் ...... பெருமாளே.

திருப்பாடல் 17:
தத்த தாத்தத் தத்த தாத்தத்
     தத்த தாத்தத் ...... தனதான

அத்த வேட்கைப் பற்றி நோக்கத்
     தத்தை மார்க்குத் ...... தமராய்!அன்

பற்ற கூட்டத்தில் !பராக்குற்
     றச்சு தோள் பற்றியவோடும்

சித்தம் மீட்டுப் பொய்த்த வாழ்க்கைச்
     சிக்கை நீக்கித் ...... திணிதாய

சித்ர வாக்குப் பெற்று வாழ்த்திச்
     செச்சை சாத்தப் ...... பெறுவேனோ

கொத்து நூற்றுப் பத்து நாட்டக்
     கொற்ற வேத்துக்கரசாய

குக்குடாத்தச் சர்ப்ப கோத்ரப்
     பொற்ப வேற்கைக் ...... குமரேசா

தத்வ நாற்பத்தெட்டு !நாற்பத்
     தெட்டும் ஏற்றுத் ...... திடமேவும்

தர்க்க சாத்ரத் தக்க மார்க்கச்
     சத்ய வாக்யப் ...... பெருமாளே.

திருப்பாடல் 18:
தத்தன தத்தன தத்தன தத்தன
     தத்தன தத்தன ...... தனதான

பத்தர் கணப்ரிய நிர்த்த நடித்திடு
     பட்சி நடத்திய ...... குகபூர்வ

பச்சிம தட்சிண உத்தர திக்குள
     பத்தர்கள் அற்புதம் எனஓதும் 

சித்ர கவித்துவ சத்த மிகுத்த!தி
     ருப்புகழைச் சிறிதடியேனும் 

செப்பென வைத்துலகிற் பரவத்!தெரி
     சித்த அநுக்ரகம் ..... மறவேனே

கத்திய தத்தை களைத்து விழத்திரி
     கற்கவணிட்டெறி ...... தினைகாவல்

கற்ற குறத்தி நிறத்த கழுத்தடி
     கட்டியணைத்த பனிருதோளா

சத்தியை ஒக்க இடத்தினில் வைத்த!த
     கப்பனும் மெச்சிட ...... மறைநூலின்

தத்துவ தற்பர முற்றும் உணர்த்திய
     சர்ப்பகிரிச் சுரர் ...... பெருமாளே.

திருப்பாடல் 19:
தத்ததன தான தத்ததன தான
     தத்ததன தான ...... தனதான

புற்புதமென் நாமம் அற்ப நிலையாத
     பொய்க்குடில் குலாவு ...... மனையாளும்

புத்திரரும் வீடும் மித்திரருமான
     புத்தி சலியாத ...... பெருவாழ்வு

நிற்பதொரு கோடி கற்பமென மாய
     நிட்டையுடன் வாழும் அடியேன்யான்

நித்தநின தாளில் வைத்ததொரு காதல்
     நிற்கும் வகை ஓத ...... நினைவாயே

சற்பகிரி நாத முத்தமிழ் விநோத
     சக்ரகதை பாணி ...... மருகோனே

தர்க்க சமண் மூகர் மிக்க கழுவேற
     வைத்தஒரு காழி ...... மறையோனே

கற்பு வழுவாது வெற்படியின் மேவு
     கற்றை மறவாணர் ...... கொடிகோவே

கைத்த அசுரேசர் மொய்த்த குலகால
     கற்பதரு நாடர் ...... பெருமாளே.

திருப்பாடல் 20:
தத்தத்தத் தத்தத் தத்தத்
     தத்தத்தத் தத்தத் தத்தத்
          தத்தத்தத் தத்தத் தத்தத் ...... தனதான

பொற்சித்ரப் பச்சைப் பட்டுக்
     கச்சிட்டுக் கட்டிப் பத்மப்
          புட்பத்துக்கொப்பக் கற்பித்திளைஞோர்கள்

புள்பட்டுச் செப்பத்துப் பல் 
     கொத்தப் பொன் தித்தத் திட்பப்
          பொற்பில் பெற்றுக்ரச் சக்ரத் ...... தனமானார்

கல் சித்தச் சுத்தப் பொய்ப்!பித்
     தத்தில் புக்கிட்டப் பட்டுக்
          கைக் குத்திட்டிட்டுச் சுற்றித் ...... திரியாமல்

கற்றுற்றுச் சித்திக்கைக்குச்
     சித்திப்பப் பக்ஷத்தில் சொல் 
          கற்பித்தொப்பித்துக் கொற்றக் ...... கழல் தாராய்

குற்சித்துக் கொட்டுக் கொட்டுத்
     துக்கச்சத்துக்குக் குக்குக்
          குக்குக்குக் குக்குக் குக்குக்கென மாறா

குட்சிக்குப் பக்ஷிக்கைக்குக்
     கக்ஷத்தில் பட்சத்தத்தக்
          கொட்டிச் சுட்டிக் கொக்ரிக் குக்குடதாரி

சற்சித்துத் தொல் புத்திப்!பட்
     சத்தர்க்கொப்பித்து அட்சத்துச்
          சத்தத்தைச் சத்திக் கொச்சைப் ...... பதிவாழ்வே

தக்ஷப் பற்றுக் கெர்ப்பத்தில் 
     செல்பற்றைச் செற்றிட்டுச்சச்
          சற்பப் பொற்றைக்குள் சொக்கப் ...... பெருமாளே.

திருப்பாடல் 21:
தனன தனதன தனதன தனதன
     தனன தனதன தனதன தனதன
          தனன தனதன தனதன தனதன ...... தனதான

கொடிய மறலியும் அவனது கடகமும் 
     மடிய ஒருதினம் இருபதம் வழிபடு
          குதலை அடியவன் நினதருள் கொடுபொரும் அமர்காண

குறவர் மகள்புணர் புயகிரி சமுகமும் 
     அறுமுகமும் வெகு நயனமும் ரவியுமிழ்
          கொடியும் அகிலமும் வெளிபட இருதிசை ...... இருநாலும்

படியும் நெடியன எழுபுணரியும் முது
     திகிரி திகிரியும் வருகென வருதகு
          பவுரி வருமொரு மரகத துரகத ...... மிசையேறிப்

பழய அடியவருடன் இமையவர் கணம் 
     இருபுடையு மிகு தமிழ்கொடு மறைகொடு
          பரவ வருமதில் அருணையில் ஒருவிசை ...... வரவேணும்

சடில தரவிட தரபணி தரதர
     பரசுதர சசிதர சுசிதர இத
          தமருக மிருகதர வனிதர சிரதர பாரத்

தரணிதர தநுதர வெகு முககுல
     தடினிதர சிவசுத குணதர பணி
          சயில விதரண தருபுர சசிதரு ...... மயில்வாழ்வே

நெடிய உடலுரு இருளெழ நிலவெழ
     எயிறு சுழல்விழி தழலெழ எழுகிரி
          நெரிய அதிர்குரல் புகையெழ இடியெழ ...... நெடுவானும்

நிலனும் வெருவர வரு நிசிசரர் தள
     நிகில சகலமும் மடியஓர் படைதொடு
          நிருப குருபர சுரபதி பரவிய ...... பெருமாளே


2022 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)














































































No comments:

Post a Comment