Saturday, August 25, 2018

விஜயமங்கலம்:

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: ஈரோடு 

திருக்கோயில்: அருள்மிகு கோவர்தனாம்பிகை சமேத ஸ்ரீநாகேஸ்வரர் திருக்கோயில் 

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


அமைவிடம் (செல்லும் வழி):

ஈரோடு மாவட்டத்தில், ஈரோடு மற்றும் திருப்பூரிலிருந்து சுமார் 30 கி .மீ தூரத்தில் அமைந்துள்ளது திருப்புகழ் தலமான விஜயமங்கலம். முக்கண் முதல்வர் நாகேஸ்வரர் எனும் திருநாமத்திலும், உமையன்னை கோவர்த்தனாம்பிகை எனும் திருநாமத்திலும் இனிது எழுந்தருளி இருக்கின்றனர். விசாலமான ஆலய வளாகம், ஆலயத் திருப்பணி விரைவில் துவங்கவுள்ளதாக அறிகின்றோம். 

திருமுருகன்பூண்டி ஆலய அமைப்பைப் போலவே இங்கும் சிவமூர்த்தியின் திருச்சன்னிதிக்கு செல்லும் வழியிலேயே, இடது புறத்தில், ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த (நெடிதுயர்ந்த) திருக்கோலத்தில் வேலாயுதக் கடவுள் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். 

அருணகிரிப் பெருமான் இத்தலத்திற்கென ஒரு திருப்பாடலை அருளிச் செய்துள்ளார்,

(Google Maps: கோவர்த்தனாம்பிகை உடனமர் நாகேஸ்வரர் திருக்கோயில்)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 

தனன தந்தனத் தானான தானன
     தனன தந்தனத் தானான தானன
          தனன தந்தனத் தானான தானன ...... தனதான

கலக சம்ப்ரமத்தாலே விலோசன
     மலர் சிவந்திடப் பூணாரம் ஆனவை
          கழல வண்டெனச் சாரீரம் வாய்விட ...... அபிராமக்

கன தனங்களில் கோமாளமாகியெ
     பல நகம் படச் சீரோடு பேதக
          கரணமும் செய்துள் பாலூறு தேனிதழ் அமுதூறல்

செலுவி மென் பணைத் தோளோடு தோள்பொர
     நிலை குலைந்திளைத்தேராகும் ஆருயிர்
          செருகு முந்தியில் போய்வீழும் மாலுடன் அநுராகம்

தெரி குமண்டை இட்டாராத சேர்வையில் 
     உருகி மங்கையர்க்காளாகி ஏவல்!செய்
          திடினும் நின்கழல் சீர்பாதம் நானினி ...... மறவேனே

உலக கண்டம் இட்டாகாச மேல்விரி
     சலதி கண்டிடச் சேராயமாம்!அவ
          ருடன் மடிந்திடக் கோபாலர் சேரியில் ...... மகவாயும்

உணர் சிறந்த சக்ராதார நாரணன்
     மருக மந்திரக் காபாலியாகிய
          உரக கங்கணப் பூதேசர் பாலக ...... வயலூரா

விலைதரும் கொலைப் போர்வேடர் கோவென
     இனையும் அங்குறப் பாவாய் வியாகுலம்
          விடுவிடென்று கைக் கூர்வேலை ஏவிய ...... இளையோனே

விறல் சுரும்புநல் க்ரீதேசி பாடிய
     விரைசெய் பங்கயப் பூவோடை மேவிய
          விஜயமங்கலத் தேவாதி தேவர்கள் ...... பெருமாளே

2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment