(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: ஈரோடு
திருக்கோயில்: அருள்மிகு சங்கமேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சம்பந்தர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
ஈரோடு மாவட்டத்தில், ஈரோட்டிலிருந்து 15 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது திருநணா (தற்கால வழக்கில் பவானி). பவானியாறு காவிரியுடன் கூடும் புண்ணிய ஷேத்திரம், மிக விசாலமான ஆலய வளாகம், துவக்கத்திலேயே தனிக்கோயிலில் ஆதிகேசவப் பெருமாள் எழுந்தருளி இருக்கின்றார்.
ஞானசம்பந்தப் பெருமானால் பாடல் பெற்ற சிறப்புப் பொருந்தியது. மூலக் கருவறையில் சங்கமேஸ்வரப் பரம்பொருள் அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், வேதநாயகி அம்மை தனிக்கோயிலில் நின்ற திருக்கோலத்தில் திருக்காட்சி தருகின்றாள்.
உட்பிரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம் கந்தப் பெருமான் கல்யாண சுப்பிரமணியராய், நின்ற திருக்கோலத்தில் இருதேவியரும் உடனிருக்க எழுந்தருளி இருக்கின்றான். இங்கு முருகப் பெருமானின் திருமுகப் புன்முறுவல் தரிசித்து இன்புறத் தக்கது, வள்ளியம்மை; தெய்வயானை அம்மையின் திருமுகங்களிலும் அற்புதப் புன்முறுவல், தரிசிக்கக் கண்கள் கோடி வேண்டும்.
மூலக் கருவறையினின்றும் வெளிப்பட்டு வருகையில், தனிக்கோயில் போன்ற அமைப்பில் திருப்புகழ் பாடல் பெற்றுள்ள வேலாயுதக் கடவுள் 'ஷண்முக சுப்பிரமணியர்' எனும் திருநாமத்தில், ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க எழுந்தருளி இருக்கின்றான், காண்பதற்கரிய திருக்காட்சி. இம்மூர்த்தியை அருணகிரிப் பெருமான் 'திருவாணி கூடல் பெருமாளே ' என்று போற்றிப் பரவுகின்றார்,
(Google Maps: KNT003-Bhavani Sangameshwarar Temple)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதான தானத் தனதான
தனதான தானத் ...... தனதான
கலைமேவு ஞானப் பிரகாசக்
கடலாடி ஆசைக் ...... கடலேறிப்
பலமாய வாதில் பிறழாதே
பதிஞான வாழ்வைத் ...... தருவாயே
மலைமேவு மாயக் குறமாதின்
மனமேவு வாலக் ...... குமரேசா
சிலைவேட சேவல் கொடியோனே
திருவாணி கூடல் ...... பெருமாளே
(2023 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment