Tuesday, August 28, 2018

பேரூர்:

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: கோவை 

திருக்கோயில்: அருள்மிகு பட்டீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

கோவை இரயில் நிலையத்திலிருந்து சுமார் 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது, மேலைச் சிதம்பரம் என்று போற்றப் பெறும் பேரூர், இங்குள்ள நொய்யலாறு 'காஞ்சிமாநதி' என்று குறிக்கப் பெறுவதால் காஞ்சிவாய்ப் பேரூர். தேவார வைப்புத் தலமாகத் திகழும் சிறப்புப் பொருந்தியது. 

நம் சுந்தரருக்கு இத்தலத்தில் தில்லைத் திருக்காட்சி கிடைத்த அற்புத நிகழ்வினைப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. சுந்தரனாரும் தனது தில்லைத்  திருப்பதிகத்தின் இறுதித் திருப்பாடலில், பேரூரில் பெற்ற பேரானந்த தரிசனத்தினை நினைவு கூர்ந்து, 'காஞ்சிவாய்ப் பேரூரர் பெருமானைப் புலியூர்ச் சிற்றம்பலத்தே பெற்றாமன்றே' என்று போற்றுகின்றார்.     

விசாலமான திருக்கோயில் வளாகம். சிவபரம்பொருள் பட்டீஸ்வரர் எனும் திருநாமத்திலும், உமையன்னை பச்சை நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். வெளிப்பிரகாரத்தின் துவக்கத்தில், நால்வர் பெருமக்கள் நெடிதுயர்ந்த திருமேனிகளில் பிரத்யட்சமாக எழுந்தருளி இருக்கின்றனர், ஆச்சரியமான திருக்கோலம். குறிப்பாக சம்பந்தப் பிள்ளையாரின் திருமேனி வடிவழகு அதி அற்புதமானது. 

வெளிப்பிரகாரத்தினை மேலும் வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறம், வலது பக்கத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் நின்ற திருக்கோலத்தில்; இரு தேவியரும் உடனிருக்க; ஒரு திருமுகம் இரு திருக்கரங்களோடு; திருமுகத்தில் மெலிதான புன்முறுவலோடு, 'கல்யாண சுப்பிரமணியன்' எனும் திருநாமத்தில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை 'தீராப்பிணி தீர', 'மைச்சரோருக' எனும் இரு திருப்பாடல்களால் போற்றிப் பரவியுள்ளார். அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம், 

(Google Maps: Patteeswarar Swamy Aalyam, Siruvani Main Road, Siruvani Main Rd, Perur, Coimbatore, Tamil Nadu 641010, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தானாத் தனதான தானாத் ...... தனதான

தீராப் பிணிதீர சீவாத்தும ஞான
ஊராட்சியதான ஓர் வாக்கருள்வாயே
பாரோர்க்கிறை சேயே பாலாக் கிரி ராசே
பேரால் பெரியோனே பேரூர்ப் ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தத்த தானன தத்த தானன
     தானா தானா தானா தானா ...... தனதான

மைச் சரோருக நச்சு வாள்விழி
     மானாரோடே நானார் நீயார் எனுமாறு

வைத்த போதக சித்த யோகியர்
     வாணாள் கோணாள் வீணாள் காணார் அதுபோலே

நிச்சமாகவும் இச்சையானவை
     நேரே தீரா ஊரே பேரே ...... பிறவேயென்

நிட்கராதிகள் முற்புகாதினி
     நீயே தாயாய் நாயேன் மாயாதருள்வாயே

மிச்சரோருக வச்ர பாணியன்
     வேதா வாழ்வே நாதா தீதா ...... வயலூரா

வெற்பை ஊடுருவப் படாவரு
     வேலா சீலா பாலா காலாயுதமாளி

பச்சை மாமயில் மெச்ச ஏறிய
     பாகா சூரா ஆகா போகாதெனும் வீரா

பட்டியாள்பவர் கொட்டியாடினர்
     பாரூர் ஆசூழ் பேரூர் ஆள்வார் ...... பெருமாளே


(2022  நவம்பர் மாதம் சென்றிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


































No comments:

Post a Comment