Thursday, August 30, 2018

திருஆவினன்குடி:

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: திண்டுக்கல் 

திருக்கோயில்: அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

பழனி எனும் பரம புண்ணிய ஷேத்திரத்தில் இரு முக்கியத் திருக்கோயில்கள் அமைந்துள்ளன, 3ஆம் படைவீட்டுத் தலமான 'திருஆவினன்குடி' மற்றும் பழனி மலைக்கோயில். இவ்விரு ஆலயங்களுக்கும் அருணகிரிப் பெருமான் தனித்தனியே திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.  

திரு (ஸ்ரீமகாலக்ஷ்மி) + ஆ (காமதேனு) + இனன் (சூரிய தேவன்) + கு (பூமி தேவி) + டி (அக்கினி தேவன்) ஆகியோர் பூசித்துப் பேறு பெற்றுள்ளமையால் 'திருஆவினன்குடி'. அருணகிரியாருக்கு இத்தலத்தில் வேலாயுதக் கடவுள் 'ஜெப மாலை' தந்தருள் புரிந்துள்ளார் ('ஜெபமாலை தந்த சற்குருநாதா திருஆவினன்குடிப் பெருமாளே'). 

பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது திருஆவினன்குடி. பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், அருணகிரியாரும் நக்கீரரும் தனித்தனிச் சன்னிதிகளில் எழுந்தருளி இருக்கின்றனர். எண்ணிறந்த திருச்சன்னிதிகளோடு அமையப் பெற்றுள்ள இவ்வாலயக் கருவறையில் சிவகுமரனான நம் கந்தக் கடவுள் 'குழந்தை வேலாயுத சுவாமி' எனும் திருநாமத்தில் பால சுவரூபியாய், ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடும், இடது திருவடியை மடித்தும் வலது திருவடியைத் தொங்கலிட்டும், சிவஞானமே ஒரு திருவடிவாய், மலர்ந்த திருமுகத்துடன், மயில் மீதமர்ந்த பேரானந்தத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். காண்பதற்கரிய திருக்காட்சி.   

அருணகிரியார் ஆவினன்குடிக்கென்று 12 திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார். பிரசித்தி பெற்ற 'நாதவிந்து கலாதி நமோ நம' எனும் திருப்பாடல் இத்தலத்திற்குரியது. மூல மூர்த்தியைத் தரிசித்துப் பணிந்த பின்னர் அவசியம் இத்தலத்திற்கான அனைத்து திருப்புகழ் திருப்பாடல்களாலும் வேலாயுத சுவாமியைப் போற்றி மகிழ்தல் வேண்டும்.  

(Google Maps: Thiru Aavinnankudi Temple, Sannathi Rd, Palani, Tamil Nadu 624601, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 12.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதான தந்தனத் ...... தனதான
     தனதான தந்தனத் ...... தனதான

அபகார நிந்தை பட்டுழலாதே
     அறியாத வஞ்சரைக் குறியாதே

உபதேச மந்திரப் பொருளாலே
     உனைநான் நினைந்தருள் பெறுவேனோ

இபமா முகன் தனக்கிளையோனே
     இமவான் மடந்தை உத்தமி பாலா

ஜெபமாலை தந்த சற்குருநாதா
     திருஆவினன் குடிப் பெருமாளே

திருப்பாடல் 2:
தனனா தனந்தனத் தனனா தனந்தனத்
     தனனா தனந்தனத் ...... தனதான

கனமாய் எழுந்து வெற்பெனவே உயர்ந்து!கற்
     புர மாரணம் துளுத்திடுமானார்

கனிவாய் உகந்து சிக்கெனவே அணைந்துகைப்
     பொருளே இழந்து விட்டயர்வாயே

மனமே தளர்ந்து விக்கலுமே எழுந்து!மட்
     டறவே உலந்து சுக்கதுபோலே

வசமே அழிந்து உக்கிடுநோய் துறந்து!வைப்
     பெனவே நினைந்துனைப் ...... புகழ்வேனோ

புனவேடர் தந்தபொற் குறமாது இன்புறப்
     புணர்காதல் கொண்ட அக்கிழவோனே

புனலேழும் மங்க வெற்பொடுசூர் சிரங்கள்!பொட்
     டெழ வேலெறிந்த உக்கிரவீரா

தினமேவு குங்குமப் புயவாச கிண்கிணிச்
     சிறுகீத செம்பதத்தருளாளா

சிவலோக சங்கரிக்கிறை பால பைங்கயத்
     திருஆவினன்குடிப் ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தான தந்ததனத் தான தந்ததனத்
     தான தந்ததனத் ...... தனதான

காரணிந்த வரைப் பாரடர்ந்து வினைக்
     காதல் நெஞ்சயரத் ...... தடுமாறிக்

கால் நரம்புதிரத் தோல்வழும்புறு பொய்க்
     காயமொன்று பொறுத்தடியேனும்

தாரிணங்கு குழல்  கூரணிந்த விழிச்
     சாபமொன்று நுதற் ...... கொடியார்தம்

தாள்பணிந்தவர்பொற் தோள் விரும்பிமிகத்
     தாழ்வடைந்துலையத் ...... தகுமோதான்

சூரனங்கம் விழத் தேவர் நின்றுதொழத்
     தோயமும் சுவறப் ...... பொரும்வேலா

தூய்மை கொண்டகுறத் தோகை நின்றபுனச்
     சூழ்பெரும் கிரியில் ...... திரிவோனே

ஆரணன் கருடக் கேதனன் தொழ!முற்
     றாலம் உண்டவருக்குரியோனே

ஆலையும் பழனச் சோலையும் புடை!சுற்
     றாவினன் குடியில் ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தான தந்தன தத்தன தத்தம்
     தான தந்தன தத்தன தத்தம்
          தான தந்தன தத்தன தத்தம் ...... தனதான

கோல குங்கும கற்புரம் !எட்டொன்
     றான சந்தன வித்துருமத்தின்
          கோவை செண்பக தட்பமகிழ்ச் செங் ...... கழுநீரின்

கோதை சங்கிலி உற்றகழுத்தும்
     பூஷணம்பல ஒப்பனை மெச்சும் 
          கூறு கொண்ட பணைத்தனம் விற்கும் ...... பொதுமாதர்

பாலுடன்கனி சர்க்கரை சுத்தந் 
     தேனெனும்படி மெத்த ருசிக்கும்
          பாதகம்பகர் சொற்களில் இட்டம் ...... பயிலாமே

பாத பங்கயம் உற்றிட உள்!கொண்
     டோதுகின்ற திருப்புகழ் நித்தம்
          பாடும் அன்பது செய்ப்பதியில் தந்தவனீயே

தால முன்பு படைத்த ப்ரபுச்!சந்
     தேகமின்றி மதிக்க அதிர்க்கும் 
          சாகரம் சுவறக் கிரியெட்டும் ...... தலைசாயச்

சாடு குன்றது பொட்டெழ மற்றும் 
     சூரனும் பொடி பட்டிட யுத்தம் 
          சாதகம் செய் திருக்கை விதிர்க்கும் ...... தனிவேலா

ஆலமுண்ட கழுத்தினில் அக்கும் 
     தேவரென்பு நிரைத்தெரியில் !சென்
          றாடுகின்ற தகப்பன்உகக்கும் ...... குருநாதா

ஆடகம்புனை பொற்குடம் வைக்கும் 
     கோபுரங்களின் உச்சிஉடுத் !தங்
          காவினன்குடி வெற்பினில் நிற்கும் ...... பெருமாளே.

திருப்பாடல் 5:
தனனா தனந்ததன தனனா தனந்ததன
     தனனா தனந்ததன ...... தனதான

சிவனார் மனம்குளிர உபதேச மந்த்ரமிரு
     செவிமீதிலும் பகர்செய் ...... குருநாதா

சிவகாம சுந்தரிதன் வரபால கந்தநின
     செயலே விரும்பிஉளம் ...... நினையாமல்

அவமாயை கொண்டுலகில் விருதாஅலைந்துழலும் 
     அடியேனை அஞ்சலென ...... வரவேணும்

அறிவாகமும் பெருக இடரானதும் தொலைய
     அருள்ஞான இன்பமது ...... புரிவாயே

நவநீதமும் திருடி உரலோடெ ஒன்றும்அரி
     ரகுராமர் சிந்தைமகிழ் ...... மருகோனே

நவலோகமும் கைதொழு நிசதேவலங்கிருத
     நலமான விஞ்சைகரு ...... விளைகோவே

தெவயானை அங்குறமின் மணவாள சம்ப்ரமுறு
     திறல்வீர மிஞ்சுகதிர் ...... வடிவேலா

திருஆவினன்குடியில் வருவேள் சவுந்தரிக
     செகமேல் மெய்கண்ட விறல் ...... பெருமாளே.

திருப்பாடல் 6:
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

நாத விந்து கலாதீ நமோநம
     வேத மந்த்ர சொரூபா நமோநம
          ஞான பண்டித ஸாமீ நமோநம ...... வெகுகோடி

நாம சம்பு குமாரா நமோநம
     போக அந்தரி பாலா நமோநம
          நாக பந்த மயூரா நமோநம ...... பரசூரர்

சேத தண்ட விநோதா நமோநம
     கீத கிண்கிணி பாதா நமோநம
          தீர சம்ப்ரம வீரா நமோநம ...... கிரிராஜ

தீப மங்கள ஜோதீ நமோநம
     தூய அம்பல லீலா நமோநம
          தேவ குஞ்சரி பாகா நமோநம ...... அருள்தாராய்

ஈதலும்பல கோலால பூஜையும்
     ஓதலும் குண ஆசார நீதியும்
          ஈரமும் குரு சீர்பாத சேவையும் ...... மறவாத

ஏழ்தலம்புகழ் காவேரியால் விளை
     சோழ மண்டல மீதே மநோகர
          ராஜ கெம்பிர நாடாளு நாயக ...... வயலூரா

ஆதரம் பயில் ஆரூரர் தோழமை
     சேர்தல் கொண்டவரோடே முனாளினில்
          ஆடல் வெம்பரி மீதேறி மாகயிலையிலேகி

ஆதி அந்தஉலாஆசுபாடிய
     சேரர் கொங்குவை காவூர் நனாடதில்
          ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 7:
தனனத்தன தான தந்தன தனனத்தன தான தந்தன
     தனனத்தன தான தந்தன ...... தனதான

பகர்தற்கரிதான செந்தமிழ் இசையிற்சில பாடல்அன்பொடு
     பயிலப்பல காவியங்களை ......உணராதே

பவளத்தினை வீழியின்கனி அதனைப்பொரு வாய் மடந்தையர்
     பசலைத்தனமே பெறும்படி ...... விரகாலே

சகரக்கடல் சூழும்அம்புவி மிசைஇப்படியே திரிந்துழல்
     சருகொத்துளமே அயர்ந்துடல் ...... மெலியாமுன்

தகதித்திமி தாகிணங்கிண எனவுற்றெழு தோகை அம்பரி
     தனில்அற்புதமாக வந்தருள் ...... புரிவாயே

நுகர்வித்தகமாகும் என்றுமை மொழியிற்பொழி பாலையுண்டிடு
     நுவல்மெய்ப்புள பாலன் என்றிடும் இளையோனே

நுதிவைத்த கரா மலைந்திடு களிறுக்கருளே புரிந்திட
     நொடியிற் பரிவாக வந்தவன் ...... மருகோனே

அகரப்பொருளாதி ஒன்றிடு முதல்அக்கரமானதின் பொருள்
     அரனுக்கினிதா மொழிந்திடு ...... குருநாதா

அமரர்க்கிறையே வணங்கிய பழநித் திருஆவினன்குடி
     அதனில் குடியாய் இருந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 8:
தான தந்தன தானா தனாதன
     தான தந்தன தானா தனாதன
          தான தந்தன தானா தனாதன ...... தனதான

போதகம் தரு கோவே நமோநம
     நீதி தங்கிய தேவா நமோநம
          பூதலம்தனை ஆள்வாய் நமோநம ...... பணியாவும்

பூணுகின்ற பிரானே நமோநம
     வேடர் தம்கொடி மாலா நமோநம
          போதவன்புகழ் சாமீ நமோநம ...... அரிதான

வேத மந்திர ரூபா நமோநம
     ஞான பண்டித நாதா நமோநம
          வீர கண்டைகொள் தாளா நமோநம ...... அழகான

மேனி தங்கிய வேளே நமோநம
     வான பைந்தொடி வாழ்வே நமோநம
          வீறு கொண்ட விசாகா நமோநம ...... அருள்தாராய்

பாதகம் செறி சூராதிமாளவே 
     கூர்மை கொண்டயிலாலே பொராடியே 
          பார அண்டர்கள் வானாடு சேர்தர ...... அருள்வோனே

பாதி சந்திரனே சூடும்வேணியர்
     சூல சங்கரனார் கீதநாயகர்
          பார திண்புயமே சேரும் சோதியர் ...... கயிலாயர்

ஆதி சங்கரனார் பாக மாதுமை
     கோல அம்பிகை மாதா மநோமணி
          ஆயி சுந்தரி தாயான நாரணி ...... அபிராமி

ஆவல் கொண்டு விறாலே சிராடவே 
     கோமளம்பல சூழ்கோயில் மீறிய
          ஆவினன்குடி வாழ்வான தேவர்கள் ...... பெருமாளே.

திருப்பாடல் 9:
தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான

மூல மந்திரம் ஓதல்இங்கிலை
     ஈவதிங்கிலை நேயம் இங்கிலை
          மோனம் இங்கிலை ஞானம் இங்கிலை ...... மடவார்கள்

மோகம் உண்டதிதாகம் !உண்டப
     சாரம் உண்டபராதம் !உண்டிடு
          மூகன் என்றொரு பேரும் உண்டருள் ...... பயிலாத

கோலமும் குண வீன துன்பர்கள்
     வார்மையும் பலவாகி வெந்தெழு
          கோர கும்பியிலே விழுந்திட ...... நினைவாகிக்

கூடு கொண்டுழல்வேனை அன்பொடு
     ஞான நெஞ்சினர் பால்இணங்கிடு
          கூர்மை தந்தினியாள வந்தருள் ...... புரிவாயே

பீலி வெந்துயராலி !வெந்தவ
     சோகு வெந்தமண் மூகர் நெஞ்சிடை
          பீதி கொண்டிட வாது கொண்டருள் எழுதேடு

பேணி அங்கெதிர் ஆறு சென்றிட
     மாறனும்பிணி தீர வஞ்சகர்
          பீறு வெங்கழுவேற வென்றிடும் ...... முருகோனே

ஆலம் உண்டவர் சோதி அங்கணர்
     பாகமொன்றிய வாலை அந்தரி
          ஆதி அந்தமுமான சங்கரி ...... குமரேசா

ஆரணம்பயில் ஞான புங்கவ
     சேவலங் கொடியான பைங்கர
          ஆவினன்குடி வாழ்வு கொண்டருள் ...... பெருமாளே

திருப்பாடல் 10:
தந்தன தந்தன தான தந்தன
     தந்தன தந்தன தான தந்தன
          தந்தன தந்தன தான தந்தன ...... தனதான

வஞ்சனை மிஞ்சிய மாய வம்பிகள்
     வந்தவர் தங்களை வாதை கண்டவர்
          வங்கணமும் தெரியாமல் அன்புகள் ...... பலபேசி

மஞ்சம் இருந்தநுராக விந்தைகள்
     தந்த கடம்பிகள் ஊறலுண்டிடு
          மண்டைகள் கண்டிதமாய் மொழிந்திடும் உரையாலே

சஞ்சலமும்தரு மோக லண்டிகள்
     இன்சொல் புரிந்துருகாத தொண்டிகள்
          சங்கமம் என்பதையே புரிந்தவன் அயராதே

தங்களில் நெஞ்சகமே மகிழ்ந்தவர்
     கொஞ்சி நடம்பயில் வேசை முண்டைகள்
          தந்த சுகம் தனையே உகந்துடல் ...... மெலிவேனோ

கஞ்சன் விடும் சகடாசுரன்பட
     வென்று குருந்தினிலேறி மங்கையர்
          கண்கள் சிவந்திடவே கலந்தரு ...... முறையாலே

கண்டு மகிழ்ந்தழகாய் இருந்திசை
     கொண்டு விளங்கிய நாளில் அன்பொடு
          கண்குளிரும் திருமால் மகிழ்ந்தருள் ...... மருகோனே

குஞ்சர வஞ்சியும் மான் மடந்தையும் 
     இன்ப மிகுந்திடவே அணைந்தருள்
          குன்றென வந்தருள் நீப முந்திய ...... மணிமார்பா

கொந்தவிழும் தடமே நிரம்பிய
     பண்பு தரும் திருஆவினன்குடி
          குன்றுகள் எங்கினுமே வளர்ந்தருள் ...... பெருமாளே.

திருப்பாடல் 11:
தான தந்தன தானான தாதன
     தான தந்தன தானான தாதன
          தான தந்தன தானான தாதன ...... தனதான

வாரணம்தனை நேரான மாமுலை
     மீதணிந்திடு பூணாரம் ஆரொளி
          வாலசந்திரன் நேராக மாமுகம் எழில்கூர

வாரணங்கிடு சேலான நீள்விழி
     ஓலை தங்கிய வார் காது வாவிட
          வான இன்சுதை மேலான வாயிதழ் அமுதூறத்

தோரணம்செறி தார்வாழை ஏய்தொடை
     மீதில் நின்றிடை நூல்போல் உலாவியெ 
          தோகை என்றிட வாகாக ஊரன ...... நடைமானார்

தோதகம் தனை மாமாயையே!வடி
     வாக நின்றதெனா ஆய ஓர்வது
          தோணிடும்படி நாயேனுள் நீயருள் ...... தருவாயே

காரணம்தனை ஓரா நிசாசரர்
     தாமடங்கலும் ஈறாக வானவர்
          காவல் இந்திர நாடாளவே அயில் ...... விடும்வீரா

கார்விடம்தனை ஊணாக வானவர்
     வாழ்தரும்படி மேல் நாளிலே மிசை
          காள கண்ட மகாதேவனார் தரு ...... முருகோனே

ஆரணன்தனை வாதாடி ஓருரை
     ஓதுகின்றென வாராதெனா அவன் 
          ஆணவம் கெடவே காவலாம் அதில் இடும்வேலா

ஆதவன் கதிர் ஓவாதுலாவிய
     கோபுரம் கிளர் மாமாது மேவிய
          ஆவினன்குடியோனே சுராதிபர் ...... பெருமாளே.

திருப்பாடல் 12:
தான தந்தன தான தந்தன
     தான தந்தன தான தந்தன
          தான தந்தன தான தந்தன ...... தனதான

வேயிசைந்தெழு தோள்கள் தங்கிய
     மாதர் கொங்கையிலே முயங்கிட
          வீணிலும் சில பாதகம் செய ...... அவமேதான்

வீறு கொண்டுடனே !வருந்தியு 
     மே உலைந்தவமே !திரிந்துள
          மே கவன்றறிவே கலங்கிட ...... வெகுதூரம்

போயலைந்துழலாகி நொந்துபின்
     வாடி நைந்தெனதாவி வெம்பியே 
          பூதலம் தனிலே மயங்கிய ...... மதிபோகப்

போது கங்கையின் நீர்சொரிந்திரு
     பாத பங்கயமே வணங்கியே 
          பூசையும் சிலவே புரிந்திட ...... அருள்வாயே

தீயிசைந்தெழவே இலங்கையில்
     ராவணன் சிரமே அரிந்தவர்
          சேனையும் செல மாள வென்றவன் ...... மருகோனே

தேசமெங்கணுமே புரந்திடு
     சூர் மடிந்திட வேலின் வென்றவ
          தேவர் தம்பதியாள அன்பு செய்திடுவோனே

ஆயி சுந்தரி நீலி பிங்கலை
     போக அந்தரி சூலி குண்டலி
          ஆதி அம்பிகை வேத தந்திரி ...... இடமாகும்

ஆலமுண்டரனார் இறைஞ்சவொர்
     போதகம் தனையே உகந்தருள்
          ஆவினன்குடி மீதிலங்கிய ...... பெருமாளே.


(2021 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

1 comment:

  1. உயர்ந்த இறைபணி
    எல்லாேராலும் இதை செய்துவிட முடியாது
    ஓம் முருகா 🌹🌷🕉️🌱

    ReplyDelete