(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: சேலம்
திருக்கோயில்: அருள்மிகு சுகவனேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
சேலத்தின் பிரதானப் பகுதியில் அமைந்துள்ளது சுகவனேஸ்வரர் திருக்கோயில். வேத வியாச மகரிஷியின் திருக்குமாரரான (கிளிமுகம் கொண்ட) சுகமுனிவர் பூசித்துப் பேறு பெற்றுள்ள திருத்தலம். ஓரளவு விசாலமான ஆலய வளாகம். பிரதான வாயிலின் வழியே நுழைந்ததும், வலதுபுறம் இரட்டை விநாயகர் சன்னிதியையும், இடது புறம் திருப்புகழ் தெய்வமான 'சுகவன சுப்பிரமணியரின் சன்னிதியையும் தரிசிக்கலாம்.
வேலாயுதக் கடவுள் எழுந்தருளியுள்ள மண்டபத்தின் வெளிப்புறத்தில், நான்கு திசைகளிலும் அறுபடை வீடு மூர்த்திகளின் திருவுருவங்கள் சுதைச் சிற்பங்களாக பொறிக்கப் பெற்றுள்ளன. இதன் கருவறையில் 'சுகவன சுப்பிரமணிய தெய்வம் ஒரு திருமுகம் நான்கு திருக்கரங்களோடு கூடிய நெடிதுயர்ந்த நின்ற திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்கக் காண்பதற்கரிய திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான்.
முருகக் கடவுளின் திருச்சன்னிதியினை வலம் வருகையில், பேரழகுத் திருக்கோலத்தில் அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியையும், அன்னை ஸ்ரீஞான சரஸ்வதி தேவியையும் தரிசிக்கலாம். விநாயகப் பெருமானின் திருச்சன்னிதியை வலம் வருகையில் சிவபெருமானின் கங்காள வடிவத் திருக்கோலத்தினை தரிசித்து மகிழலாம்.
சுகவனேஸ்வரப் பரம்பொருள் எழுந்தருளியுள்ள மூலக் கருவறைக்குச் செல்லுகையில், வெளிப்பிரகாரத்தில் வேத வியாசர்; சுகமுனிவர்; சிவபக்த ஆஞ்சநேயர் ஆகியோரின் அரிதான திருவுருவத் திருமேனிகளைத் தரிசித்து மகிழலாம். நான்மறை நாயகரான சுகவனேஸ்வரப் பெருமானின் திருக்கோலம் தனித்துவமானது; காண்பதற்கரியது, நெடிதுயர்ந்த சிவலிங்கத் திருமேனியில் இறைவர் இங்கு எழுந்தருளி இருக்கின்றார்.
உமையன்னையும் தனிச்சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில், 'சுவர்ணாம்பிகை' எனும் திருநாமத்துடன், அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லியாய் எழுந்தருளி இருக்கின்றாள். அருணகிரியார் இத்தலத்துறை கந்தப் பெருமானைத் 'திருவளர் சேலத்தமர்வோனே' என்று போற்றிப் பரவுகின்றார்.
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தானத் தனதன தானத்
தனதன தானத் ...... தனதான
பரிவுறு நாரற்றழல்மதி வீசச்
சிலைபொரு காலுற்றதனாலே
பனிபடு சோலைக் குயிலது கூவக்
குழல் தனியோசைத் ...... தரலாலே
மருவியல் மாதுக்கிருகயல் சோரத்
தனிமிக வாடித் ...... தளராதே
மனமுற வாழத் திருமணி !மார்பத்
தருள் முருகா உற்றணைவாயே
கிரிதனில் வேல்விட்டிரு தொளையாகத்
தொடு குமரா முத்தமிழோனே
கிளரொளி நாதர்க்கொரு மகனாகித்
திருவளர் சேலத்தமர்வோனே
பொருகிரி சூரக்கிளையது மாளத்
தனிமயிலேறித் ...... திரிவோனே
புகர்முக வேழக் !கணபதியாருக்
கிளைய விநோதப் ...... பெருமாளே.
(2023 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment