(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: ஈரோடு
திருக்கோயில்: அருள்மிகு மகுடேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
மிக விசாலமான ஆலய வளாகம், தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள புண்ணியத் தலம், சுந்தர மூர்த்தி சுவாமிகளால் நமசிவாயத் திருப்பதிகம் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சிவ ஷேத்திரமான இத்திருத்தலத்தில் சயனத் திருக்கோலத்தில் வீரநாராயணப் பெருமாளும், அன்னை ஸ்ரீமகாலக்ஷ்மியும் தனிக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்றனர். இத்தலத்தில் சிவமூர்த்தியைப் பூசித்துப் பேறு பெற்றுள்ள நான்முகக் கடவுள் மூன்று திருமுகங்களுடன் திருக்காட்சி தருகின்றார். ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியும், நெடிதுயர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் ஆஞ்சநேயரும் தனிக்கோயில்களில் எழுந்தருளி இருக்கின்றனர்.
மூலக் கருவறையில் மகுடேஸ்வரப் பரம்பொருள் பஞ்சமூகக் கவசத்துடன் திருக்காட்சி தருகின்றார், அதிகாலை மற்றும் அபிஷேக சமயங்களில் மட்டும் இறைவரின் சுயம்புத் திருமேனியைக் கவசமின்றித் தரிசிக்கலாம், சிறிய திருமேனியராய்க் காண்பதற்கரிய திருக்கோலத்தில் சிவமூர்த்தி இங்கு எழுந்தருளி இருக்கின்றார். அம்பிகை தனிக்கோயிலில் வடிவுடை நாயகியாய்த் திருக்காட்சி தருகின்றாள்.
மூலக் கருவறையை வலம் வருகையில் தட்சிணாமூர்த்தியின் திருவடிகளில் சனகாதியார்க்கு பதிலாக இங்கு குமாரக் கடவுள் பால ரூபத்தில் எழுந்தருளி இருப்பது காண்பதற்கரிய திருக்காட்சி. நமசிவாய மந்திரத்தின் பொருளாகவே விளங்கும் ஷண்முகக் கடவுளுக்கு இறைவர் இங்கு அத்திருமந்திரத்தினை உபதேசித்து அருள்வதாக ஐதீகம், அவசியம் இச்சன்னிதியைத் தரிசித்து மகிழ்தல் வேண்டும்.
உட்பிரகாரச் சுற்றில், கருவறையின் பின்புறம் வலது பக்கத்தில் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த பேரானந்தத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்திக்கென இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார்,
(Google Maps: Magudeswarar Temple, Kodumudi, Tamil Nadu 638151, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதனத் தனனத் ...... தனதான
இருவினைப் பிறவிக் ...... கடல்மூழ்கி
இடர்கள் பட்டலையப் ...... புகுதாதே
திருவருள் கருணைப் ...... ப்ரபையாலே
திரமெனக் கதியைப் ...... பெறுவேனோ
அரிஅயற்கறிதற்கரியானே
அடியவர்க்கெளி அற்புதநேயா
குருவெனச் சிவனுக்கருள் போதா
கொடுமுடிக் குமரப் ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தாந்தத் தனதன தாந்தத் தனதன
தாந்தத் தனதன ...... தனதான
காந்தள் கரவளை சேந்துற்றிட மத
காண்டத்தரிவையருடன் ஊசி
காந்தத்துறவென வீழ்ந்தப்படி குறி
காண்டற்கநுபவ ...... விதமேவிச்
சாந்தைத் தடவிய கூந்தற் கருமுகில்
சாய்ந்திட்டயில் விழி ...... குழைமீதே
தாண்டிப் பொரஉடை தீண்டித் தனகிரி
தாங்கித் தழுவுதல் ஒழியேனோ
மாந்தர்க்கமரர்கள் வேந்தற்கவரவர்
வாஞ்சைப் படியருள் ...... வயலூரா
வான்கிட்டியபெரு மூங்கில் புனமிசை
மான் சிற்றடிதொழும் அதிகாமி
பாந்தள் சடைமுடி ஏந்திக் குலவிய
பாண்டிக் கொடுமுடி ...... உடையாரும்
பாங்கில் பரகுருவாம் கற்பனையொடு
பாண்சொல் பரவிய ...... பெருமாளே
(2023 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment