Sunday, August 26, 2018

ராஜபுரம் (ராசிபுரம்):

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: நாமக்கல் 

திருக்கோயில்: அருள்மிகு அறம் வளர்த்த நாயகி சமேத ஸ்ரீகைலாச நாதர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக்குறிப்புகள்:

நாமக்கலிலிருந்தும் திருச்செங்கோட்டிலிருந்தும் சுமார் 30 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது ராசிபுரம் (அருணகிரியார் இத்தலத்தினை இராஜபுரம் என்று குறிக்கின்றார், பின்னாளில் ராசபுரம்; ராசிபுரம் என்று மருவி வழங்கப் பெற்று வருகின்றது).  

சிவபரம்பொருள் கைலாசநாதர் எனும் திருநாமத்திலும், அம்பிகை தர்மசம்வர்த்தனியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர். கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியால் திருப்பணி செய்யப் பெற்றுள்ள தலம். ஒரு சமயம் வல்வில் ஓரி மன்னர் பன்றியொன்றினை விரட்டிய படி இப்பகுதிக்கு வர, வேந்தரின் வாளால் காயப்படும் அப்பன்றியோ மறுகணமே சிவலிங்கமாக மாறிக் காட்சியளிக்கின்றது. அது கண்டு வியக்கும் ஓரி மன்னர் இறைவரை இங்கு பிரதிஷ்டை செய்வித்து வழிபட்டதாகத் தலவரலாறு தெரிவிக்கின்றது. இந்நிகழ்வினைக் குறிக்கும் ஓரி மன்னரின் திருவுருவத்தினைக் கொடிமரத்திற்கருகில் கண்டு மகிழலாம். 

வழக்கமான அமைப்பில் அல்லாது, மூலக் கருவறைக்குச் செல்லும் வழியில், இடது புறம் திருப்புகழ் தெய்வமான நம் கந்தப் பெருமான் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க மயில் மீதமர்ந்த அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். 

'கஜேந்திரன் எனும் யானையை (ஈரேழு உலகங்களும் போற்றுமாறு) முதலையினின்றும் காத்தருளிய திருமாலின் மருகனே' என்று இத்தலத்துறை அறுமுகக் கடவுளை அருணகிரியார் போற்றி மகிழ்கின்றார்.   

(Google Maps: Kailasanathar Koil (Temple), Rasipuram, Tamil Nadu 637408, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தந்த தானன தத்தன, தந்த தானன தத்தன
     தந்த தானன தத்தன ...... தனதான

சங்கு வார்முடி பொற்கழல் பொங்கு சாமரை கத்திகை
     தண்டு மாகரி பெற்றவன் ...... வெகுகோடிச்

சந்த பாஷைகள் கற்றவன் மந்த்ரவாதி சதுர்க்கவி
     சண்ட மாருதம் மற்றுள ...... கவிராஜப்

பங்கி பால சரச்வதி சங்க நூல்கள் விதித்த!ப்ர
     பந்த போதம் உரைத்திடு ...... புலவோன் யான்

பண்டை மூஎழுவர்க்கெதிர் கண்ட நீயும் எனச்சில
     பஞ்ச பாதகரைப் புகழ் ...... செயலாமோ

வெங்கை யானை வனத்திடை துங்க மாமுதலைக்கு!வெ
     ருண்டு மூலமெனக் கருடனிலேறி

விண்பராவ அடுக்கிய மண்பராவ அதற்கு!இ  
     தம் பராவ அடுப்பவன் ...... மருகோனே

கொங்கணாதி தரப்பெறு கொங்கினூடு சுகித்திடு
     கொங்கின் வீர கணப்ரிய ...... குமராபொற்

கொங்குலாவு குறக்கொடி கொங்கையே தழுவிச்செறி
     கொங்கு ராஜபுரத்துறை ...... பெருமாளே


2022 டிசமபர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)


































No comments:

Post a Comment