(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: நாமக்கல்
திருக்கோயில்: அருள்மிகு அறம் வளர்த்த நாயகி (தாயம்மை) சமேத ஸ்ரீஅறப்பள்ளீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
நாமக்கலிலிருந்து சுமார் 55 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது கொல்லிமலை. 70 கொண்டை ஊசி வளைவுகளைக் கடந்து, மலைப்பாதையில் மேலும் 30 நிமிடங்கள் பயணித்துச் சென்றால், தேவார வைப்புத் தலமாகவும் திகழும் அறப்பள்ளீஸ்வரர் திருக்கோயிலை அடையலாம்.
ஞானசம்பந்த மூர்த்தி 'ஆரூர் தில்லையம்பலம்' என்று துவங்கும் ஷேத்திரக் கோவை திருப்பதிகத்தின் 4ஆம் திருப்பாடலில் 'அறப்பள்ளி' என்று இத்தலத்தினைக் குறிக்கின்றார்,
-
அறப்பள்ளி அகத்தியான்பள்ளி வெள்ளைப் பொடிப்பூசி ஆறணிவான்அமர் காட்டுப்பள்ளி
சிறப்பள்ளி சிராப்பள்ளி செம்பொன்பள்ளி திருநனிபள்ளி சீர் மகேந்திரத்துப்
பிறப்பில்லவன் பள்ளி வெள்ளச் சடையான் விரும்பும் இடைப்பள்ளி வண் சக்கரமால்
உறைப்பால்அடி போற்றக் கொடுத்தபள்ளி உணராய் மடநெஞ்சமே உன்னி நின்றே!!!
அப்பர் சுவாமிகள் திருநெய்த்தானம் திருப்பதிகத்தின் துவக்கப் பாடலில் 'கொல்லியான்' என்று இத்தலத்தினைக் குறிக்கின்றார்,
-
கொல்லியான் குளிர் தூங்கு குற்றாலத்தான்
புல்லியார் புரம் மூன்றெரி செய்தவன்
நெல்லியான் நிலையான நெய்த்தானனைச்
சொல்லி மெய் தொழுவார் சுடர் வாணரே!!!
ஓரளவு விசாலமான ஆலய வளாகம். சிவபரம்பொருள் அறப்பள்ளீஸ்வரர் எனும் திருநாமத்திலும், உமையன்னை அறம் வளர்த்த நாயகியாகவும் எழுந்தருளி இருக்கின்றனர்.
வழக்கமான சிவாலய அமைப்பினைப் போல் இல்லாமல், வெளிப்பிரகாரச் சுற்றின் துவக்கத்திலேயே நம் கந்தப் பெருமான் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்தியை 'கட்ட மன்னும் அள்ளல்', 'தொல்லைமுதல் தானொன்று' என்று துவங்கும் இரு திருப்பாடல்களால் போற்றிப் பரவியுள்ளார்,
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தத்த தன்ன தய்ய தத்த தன்ன தய்ய
தத்த தன்ன தய்ய ...... தனதான
கட்ட மன்னும் அள்ளல் கொட்டி பண்ணும் !ஐவர்
கட்கு மன்னும் இல்லம் இதுபேணி
கற்ற விஞ்ஞை சொல்லி உற்ற எண்மை உள்!உ
கக்க எண்ணி முல்லை ...... நகைமாதர்
இட்டம் எங்ஙன் நல்ல கொட்டி அங்ஙன் நல்கி
இட்டு பொன்னை இல்லை ...... எனஏகி
எத்து பொய்ம்மை உள்ளல் உற்றும் இன்மை உள்ளி
எற்றும் இங்ஙன் நைவதியல்போ தான்
முட்ட உண்மை சொல்லு செட்டி திண்மை கொள்ள
முட்ட நன்மை விள்ள ...... வருவோனே
முத்து வண்ண வல்லி சித்ர வண்ண வல்லி
முத்தி விண்ண வல்லி ...... மணவாளா
பட்ட மன்னவல்லி மட்ட மன்ன வல்லி
பட்ட துன்னு கொல்லி ...... மலைநாடா
பச்சை வன்னி அல்லி செச்சை சென்னியுள்ள
பச்சை மஞ்ஞை வல்ல ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தய்யதன தானந்த தய்யதன தானந்த
தய்யதன தானந்த ...... தனதான
தொல்லைமுதல் தானொன்று மெல்லியிரு பேதங்கள்
சொல்லுகுணம் மூஅந்தம் எனவாகி
துய்ய சதுர் வேதங்கள் வெய்ய புலன் ஓரைந்து
தொய்யு பொருள் ஆறங்கம் எனமேவும்
பல்லபல நாதங்கள் அல்க பசு பாசங்கள்
பல்கு தமிழ் தானொன்றி ...... இசையாகிப்
பல்லுயிருமாய் அந்தம்இல்ல சொருபாநந்த
பெளவமுறவே நின்றதருள்வாயே
கல்லுருக வேயின்கண் அல்லல்படு கோ!அம்பு
கல் வருகவே நின்று ...... குழலூதும்
கையன் மிசையேறும்பன் நொய்ய சடையோன் எந்தை
கைதொழ மெய்ஞ்ஞானம் சொல் ...... கதிர்வேலா
கொல்லைமிசை வாழ்கின்ற வள்ளி புனமே சென்று
கொள்ளை கொளும் மாரன்கை ...... அலராலே
கொய்து தழையே கொண்டு செல்லு மழவா கந்த
கொல்லிமலை மேல்நின்ற ...... பெருமாளே
2022 டிசம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment