(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: கொங்கு நாடு
மாவட்டம்: கோவை
திருக்கோயில்: அருள்மிகு முருகன் திருக்கோயில்
தல வகை: முருகன் திருக்கோயில்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
அமைவிடம் (செல்லும் வழி):
கோவை ரயில் நிலையத்திலிருந்து சுமார் 14 கி.மீ தூரம் பயணித்தால் மருதமலையின் அடிவாரப் பகுதியினை அடையலாம். 900 படிகளோடு எழிலுற அமைந்துள்ளது இம்மலைக்கோயில். புராதன ஷேத்திரம், 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட திருமுருகன்பூண்டி கல்வெட்டில் மருதமலை பற்றிய குறிப்புகள் கிடைக்கப் பெறுகின்றது.
'திரிபுரம் அதனை ஒருநொடி அதனில்' என்று துவங்கும் திருப்புகழுக்கு இருவேறு சுவடிப் பிரதிகள் கிடைத்துள்ளதாகவும், அவைகளுள் 14ஆம் வரியில் மட்டும் வேறுபாடொன்று இருப்பதாகவும் 'திரு.உ.வே.சா' அவர்களும், சிவத்திரு. தணிகைமணி அவர்களும் தத்தமது நூல்களில் குறித்துள்ளனர். ஒரு பிரதியில் 'அவனியு(ம்) முழுதும் உடையோனே' என்றும் மற்றொரு சுவடியில் 'அணிசெயு(ம்) மருத மலையோனே' என்றும் குறிக்கப் பெற்றுள்ள இதனைப் பொதுவில் 'பாடபேதம்' என்று குறிப்பர். 'அருணகிரிநாதர் அடிச்சுவட்டில்' நூலாசிரியரான சிவத்திரு. வலையப்பேட்டை கிருஷ்ணன் அவர்களும் இக்கருத்தினை வழிமொழிந்து, தனது நூலில் மருதமலையை கோவைத் திருப்புகழ் தல வரிசையில் இணைத்துள்ளார்.
12ஆம் நூற்றாண்டுக்கும் முற்பட்ட புராதனத் தலமாதலின், 15ஆம் நூற்றாண்டில் அவதரித்த நம் அருணகிரிப் பெருமானின் பாதச் சுவடுகள் இத்தலத்திலும் நிச்சயம் பதிந்திருக்கக் கூடும். வருடம் முழுவதும் பெருந்திரளென கூடி வழிபடும் பக்தர்களால் இத்தலத்தின் தெய்வ சானித்தியம் தெள்ளென விளங்குமன்றோ!!
மருதமலை ஆண்டவன் நின்ற திருக்கோலத்தில் மலைக்கோயிலில் வரப்பிரசாதியாய் எழுந்தருளி இருக்கின்றான். அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய அற்புத ஷேத்திரம்.
(Google Maps: Marudhamalai Arulmigu Subramanya Swami Temple)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தனதன தனன தனதன தனன
தனதன தனன ...... தனதான
-
திரிபுரம் அதனை ஒருநொடி அதனில்
எரிசெய்தருளிய ...... சிவன்வாழ்வே
-
சினமுடை அசுரர் மனமது வெருவ
மயிலது முடுகி ...... விடுவோனே
-
பருவரை அதனை உருவிட எறியும்
அறுமுகம் உ டைய ...... வடிவேலா
-
பசலையொடணையும் இளமுலை மகளை
மதன்விடு பகழி ...... தொடலாமோ
-
கரிதிரு முகமும் இடமுடை வயிறும்
உடையவர் பிறகு ...... வருவோனே
-
கனதனம் உடைய குறவர்த(ம்) மகளை
கருணையொடணையு(ம்) ...... மணிமார்பா
-
அரவணை துயிலும் அரிதிரு மருக
அணிசெயு(ம்) மருத மலையோனே
-
அடியவர் வினையும் அமரர்கள் துயரும்
அறஅருளுதவும் ...... பெருமாளே.
2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
திருப்புகழ் பதிவிடவும்
ReplyDelete