Tuesday, August 28, 2018

தென்சேரிகிரி (செஞ்சேரி மலை):

(கொங்கு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: கொங்கு நாடு

மாவட்டம்: கோவை 

திருக்கோயில்: அருள்மிகு வேலாயுத சுவாமி திருக்கோயில்

தல வகை: முருகன் திருக்கோயில்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


அமைவிடம் (செல்லும் வழி):

கோவை ரயில் நிலையத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும், உடுமலைப்பேட்டையிலிருந்து 30 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது செஞ்சேரிமலை. மந்திரகிரி என்றும் அறியப் பெறும் இத்தலத்தை அருணகிரியார் தென்சேரிகிரி என்று குறிக்கின்றார். ஏகாந்தமானதொரு திருச்சூழலில் 300 படிகளோடு அழகுற விளங்குகின்றது இம்மலைக்கோயில்.

திருப்புகழ் தெய்வமான செஞ்சேரிமலை வேலவன் இத்தலத்தில் ஆறு திருமுகங்களும் பன்னிரு திருக்கரங்களுமாய்; இருபுறமும் தேவியர் உடனிருக்க அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். சேவற்கொடிக்கு மாறாக, இடது மேல் திருக்கரத்தில் சேவலையே ஏந்தியிருப்பது தனித்துவமான திருக்காட்சி. அருணகிரிப் பெருமான் இதனை 'செஞ்சேவல் செங்கை உடைய சண்முக தேவே' என்று வியந்து போற்றுகின்றார். 

(கருவறையிலுள்ள மிதமான வெளிச்சம் காரணமாக) நாம் நின்று தரிசிக்கும் இடத்திலிருந்து மூலமூர்த்தியின் திருக்கரத்திலுள்ள சேவல் துல்லியமாகத் தெரிவதில்லை. எனினும் அதே அமைப்பில் எழுந்தருளியுள்ள உற்சவ மூர்த்தியின் திருக்கரத்தினில் சேவலை மிகத் தெளிவாக, அருகாமையிலேயே தரிசித்து அற்புதம் அடைலாம்.   

அருணை மாமுனிவர் இத்தலத்திற்கென, 'எங்கேனும் ஒருவர்வர', 'கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு' என்று துவங்கும் இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளிச் செய்துள்ளார். அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.

(Google Maps: Mandhiragiri Velayudha Swamy Temple)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தந்தான தனதனன தந்தான தனதனன
     தந்தான தனதனன ...... தனதான

எங்கேனும் ஒருவர்வர அங்கே கண்இனிதுகொடு
     இங்கேவர் உனதுமயல் ...... தரியார்!என்

றிந்தா என்இனியஇதழ் தந்தேனை உறமருவ
     என்றாசை குழையவிழி ...... இணையாடித்

தங்காமல் அவருடைய உண்டான பொருளுயிர்கள்
     சந்தேகம் அறவெபறி ...... கொளு மானார்

சங்கீத கலவிநலம் என்றோதும் உததிவிட
     தண்பாரும் உனதருளை ...... அருள்வாயே

சங்கோடு திகிரிஅது கொண்டேயும் நிரைபிறகு
     சந்தாரும் வெதிரு குழல் அதுஊதித்

தன்காதல் தனைஉகள என்றேழு மடவியர்கள்
     தம்கூறை கொடு மரமில் அதுஏறும் 

சிங்கார அரிமருக பங்கேருகனும் மருள
     சென்றேயும் அமரருடை ...... சிறைமீளச்

செண்டாடி அசுரர்களை ஒன்றாக அடியர்தொழு
     தென்சேரிகிரியில் வரு ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தந்தானத் தந்த தனதன
     தந்தானத் தந்த தனதன
          தந்தானத் தந்த தனதன ...... தனதான

கொண்டாடிக் கொஞ்சு மொழிகொடு
     கண்டாரைச் சிந்து விழிகொடு
          கொந்தாரச் சென்ற குழல்கொடு ...... வடமேருக்

குன்றோடொப்பென்ற முலைகொடு
     நின்றோலக்கம் செய் நிலைகொடு
          கொம்பாய் எய்ப்புண்ட இடைகொடு ...... பலரோடும்

பண்டாடச் சிங்கி இடுமவர்
     விண்டாலிக்கின்ற மயிலன
          பண்பால் இட்டம்செல் மருளது ...... விடுமாறு

பண்டேசொல் தந்த பழமறை
     கொண்டே தர்க்கங்கள் அறஉமை
          பங்காளர்க்கன்று பகர்பொருள் ...... அருள்வாயே

வண்டாடத் தென்றல் தடமிசை
     தண்டாதப் புண்டரிக மலர்
          மங்காமல் சென்று மதுவைசெய் ...... வயலூரா

வன்காளக் கொண்டல் வடிவொரு
     சங்க்ராமக் கஞ்சன் விழஉதை
          மன்றாடிக்கன்பு தருதிரு ...... மருகோனே

திண்டாடச் சிந்து நிசிசரர்
     தொண்டாடக் கண்ட அமர்பொரு
          செஞ்சேவல் செங்கை உடைய சண்முக தேவே

சிங்காரச் செம்பொன் !மதிளத
     லங்காரச் சந்த்ர கலைதவழ்
          தென்சேரிக் குன்றில் இனிதுறை ...... பெருமாளே


2022 நவம்பர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)




















No comments:

Post a Comment