(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: விழுப்புரம்
திருக்கோயில்: அருள்மிகு கிருபாபுரீஸ்வர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
விழுப்புரத்திலிருந்து 20 கி.மீ தூரத்திலும், திருக்கோயிலூரிலிருந்து 25 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருவெண்ணெய்நல்லூர் எனும் பரம புண்ணியத் தலம். உமையன்னை வெண்ணையால் சிவலிங்கத் திருமேனி சமைத்து முக்கண் முதல்வரைப் பூசித்து பேறு பெற்ற தலம். சிவமூர்த்தி கிழ வேதியர் வடிவில் தோன்றி சுந்தரரை ஓலை காட்டி ஆட்கொண்ட வழக்காடு மண்டபத்தை ஆலய வளாகத்திற்கு வெளியில் தரிசித்து மகிழலாம். திருக்கோயிலின் பிரதான கோபுர வாயிலுக்கு வெளியில் சுந்தர மூர்த்தி நாயனார் தனிச்சன்னிதியொன்றில் எழுந்தருளி இருக்கின்றார்.
மிகப் பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், மூல மூர்த்தி கிருபாபுரீஸ்வரர் கருவறையில் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றார், சுவாமி கிழ வேதியவர் தோன்றி வழக்கில் சுந்தரரை அடிமை கொண்டுப் பின் கருவறையுள் சென்று மறையுமுன்னர் தம்முடைய திருப்பாத இரட்சைகளை வெளியில் விட்டுச் செல்கின்றார், அதனை கருவரைக்கருகில் ஒரு கண்ணாடிப் பேழையில் வைத்து நன்முறையில் பாதுகாத்து வருகின்றனர்.
வெளிப்ரகாரத்தினை வலம் வருகையில் பின்புறம் முதலில் விநாயகப் பெருமானின் அதி ஆச்சரியத் திருக்கோலம், பிரத்யட்சமாய் எழுந்தருளி அமர்ந்திருப்பது போன்ற திருக்காட்சி. பின்னர் திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுளின் திருச்சன்னிதியை அடைகின்றோம், இரு தேவியர்களும் உடனிருக்க, ஆறு திருமுகங்களும், பன்னிரு திருக்கரங்களுமாய் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். இம்மூர்த்திக்கு அருணகிரிநாதர் 'பல பல தத்துவ' என்று துவங்கும் திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார். மிகச் சமீபத்தில் அஷ்ட பந்தனம் விலகி இம்மமூர்த்தி பின்புறம் சாய்ந்து பின்புறமுள்ள திருமுகமொன்று சிறிது பின்னப்பட்டு விட்டதாகவும், விரைவில் பிறிதொரு திருமேனி செய்விக்கப் பெறும் என்றும் அர்ச்சகர் தெரிவித்தார்.
அம்பிகை தனிக்கோயிலொன்றில் மங்களாம்பிகை எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றாள், இவளைப் பணிந்து ஆசி பெற்றுப் பின் ஆலய வளாகத்திற்கு வெளியில் அமைந்துள்ள வழக்காடு மண்டபத்தினை அடைகின்றோம், நன்கு பராமரிக்கப் பெற்று வரும் மண்டபம், சுந்தரரும் கிழ வேதியர் வடிவில் தோன்றிய சிவமூர்த்தியும் வழக்காடும் ஆச்சரியமான திருமேனிகளை இங்கு தரிசித்து மகிழலாம். அவசியம் தரிசித்துச் சிவானந்தம் எய்த வேண்டிய அற்புதத் திருத்தலம் (குருவாய் வருவாய் அருள்வாய் குகனே)!!!
(Google Maps: Sri Kripapureeswarar Temple, Thiruvennainallur, Tamil Nadu 607203, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன
தனதன தத்தன தனதன தத்தன ...... தனதான
பலபல தத்துவ மதனை எரித்திருள்
பரைஅரணப்படர் வடஅனலுக்கிரை
பட நடநச்சுடர் பெருவெளியிற்கொள ...... இடமேவிப்
பவனமொழித்திரு வழியை அடைத்தொரு
பருதிவழிப்பட விடல் ககனத்தொடு
பவுரிகொளச்சிவ மயமென முற்றிய ...... பரமூடே
கலகலெனக்கழல் பரிபுர பொற்பத
ஒலிமலியத்திரு நடனம் இயற்றிய
கனகசபைக்குளில் உருகிநிறைக்கடல் ...... அதில்மூழ்கிக்
கவுரிமினல்சடை அரனொடு !நித்தமொ
டனக சகத்துவம் வருதலும் இப்படி
கழிய நலக்கினி நிறமென் நவிற்றுடல் ..... அருள்வாயே
புலையர் பொடித்தளும் அமணர்உடல்களை
நிரையில் கழுக்களில் உறவிடு சித்திர
புலவன் எனச்சில விருது படைத்திடும் ...... இளையோனே
புனமலையில் குற மகள்அயல்உற்றொரு
கிழவன் எனச்சுனை தனில்அவள்ஐப்புயம்
புளகிதம்உற்றிபம் வரஅணையப் புணர் ...... மணிமார்பா
மலைசிலை பற்றிய கடவுள்இடத்துறை
கிழவிஅறச்சுக குமரி தகப்பனை
மழுகொடு வெட்டிய நிமலிகை பெற்றருள் ...... முருகோனே
மகிழ்பெணையில்கரை பொழில்முகில் சுற்றிய
திருவெணெய் நற்பதி புகழ்பெற அற்புத
மயிலின் மிசைக்கொடு திருநடமிட்டுறை ...... பெருமாளே.
(2020 அக்டோபர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட படங்கள் இவை)
அருமையான பதிவி நேரில் ஆண்டவனை வந்து பார்த்ததைபோல உள்ளது ஜயா இந்த பதிவு
ReplyDeleteபதிவிட்டவருக்கு நன்றி ஜயா