Friday, September 28, 2018

திருக்கோவலூர்

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: விழுப்புரம் 

திருக்கோயில்: அருள்மிகு வீரட்டேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

விழுப்புரத்திலிருந்து 36 கி.மீ தூரத்திலும், திருவெண்ணைநல்லூரிலிருந்து 22 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருக்கோவலூர் (தற்கால வழக்கில் திருக்கோவிலூர்). அஷ்ட வீரட்டான தலங்களுள் ஒன்றாகப் போற்றப் பெறுவது, அந்தகாசுர சம்ஹாரம் நடந்தேறிய தலம். தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சீரமை பொருந்தியது, சுந்தரர் திருநாவலூர் தலத்துடன் இத்தலத்தையும் இணைத்துப் போற்றியுள்ளார். விநாயகர் அகவல் எனும் அற்புதப் பனுவல் தோன்றிய தலமும் இதுவே. 

அவ்வையார் இத்தல விநாயகரைப் பூசிக்கையில், சுந்தரரும் சேரமான் பெருமாள் நாயனாரும் தத்தமது அவதாரம் நிறைவுற்று விண்ணில் திருக்கயிலைக்குச் சென்று கொண்டிருப்பதைக் காண்கின்றார், அவர்களுக்கு முன் அங்கு சென்று அவர்களை எதிர்கொண்டு வரவேற்க விழைகின்றார். ஆதலின் வேகவேகமாய்ப் பூசிக்கத் துவங்குகின்றார். கருணைக் கடலான வேழ முகத்து இறைவனோ 'அவ்வையே! நிதானமாய்ப் பூசிப்பாய், நாம் அவர்களுக்கு முன் உன்னைக் கயிலையில் சேர்ப்போம்' என்று பேரருள் புரிகின்றார். அச்சமயத்தில் அவ்வை துதி செய்து வணங்கியதே 'விநாயகர் அகவல்', அகவலால் திருவுள்ளம் பெரிதும் மகிழும் கணேச மூர்த்தி தம்முடைய துதிக்கையால் கணநேரத்தில் அவ்வையைத் திருக்கயிலை வாயிலில் சேர்ப்பித்து விடுகின்றார்.  

விநாயகர் சன்னிதிக்கு அருகில் மேற்குறித்துள்ள நிகழ்வு சிற்ப வடிவில் பொறிக்கப் பெற்றுள்ளது, யானை முக தெய்வம் 'பெரியானைக் கணபதி' எனும் திருநாமத்தில் பிரமாண்டமான திருமேனியோடு அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் 'திருக்கோவல் மாநகர் வீர வேலாயுத சண்முக வேலவர்' எனும் திருநாமத்தில், ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில், நெடிதுயர்ந்த திருமேனியில் ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிநாதர் இம்மூர்த்திக்கு 'பாவ நாரிகள்' என்று துவங்கும் திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார்.   

மூலக் கருவறையில் ஆதிப் பரம்பொருளான சிவமூர்த்தி வீரட்டேஸ்வரர் எனும் திருநாமத்தில், பிரமாண்டமான திருமேனியில் எழுந்தருளி இருக்கின்றார், காண்பதற்கரிய திருக்கோலம். அந்தகாசுர சம்ஹார மூர்த்தியை  மற்றுமொரு தனிச்சன்னிதியில் தரிசித்து மகிழலாம். அம்பிகை சிவானந்தவல்லி ஆலய வளாகத்துள் தனிக்கோயிலில் எழுந்தருளி இருக்கின்றாள். அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம். 


திருப்புகழ் பாடல்கள்: 

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தான தானன தானன, தான தானன தானன
     தான தானன தானன ...... தனதான

பாவ நாரிகள் மாமட மாதர் வீணிகள்ஆணவ
     பாவையார் இளநீர்அன ...... முலையாலும்

பார்வையாம்மிகு கூர்அயிலாலும் மாமணியார் குழை
     பாரகார்அன வார்குழல் ...... அதனாலும் 

சாவதார விதாரமுதார்தரா இதழால்இத
     சாத மூரல்இதாமதி ...... முகமாலும் 

சார்வதாஅடியேனிடர் வீற மாலறிவேமிகு
     சாரமாய் அதிலே உறல் ...... ஒழிவேனோ

ஆவ ஆர்வன நான்மறை ஆதி மூல பராஅரி
     ஆதி காணரிதாகிய ...... பரமேச

ஆதியார்அருள் மாமுருகேச மால்மருகேசுர
     அனாதி தேவர்கள்இயாவர்கள் ...... பணிபாத

கோஅதாமறையோர் மறை ஓதுமோதம் விழாஒலி
     கோடிஆகம மாஒலி ...... மிகவீறும்

கோவை மாநகர் மேவிய வீர வேலயில்ஆயுத
     கோதை யானையினோடமர் ...... பெருமாளே.

(2020 அக்டோபர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட படங்கள் இவை) 

No comments:

Post a Comment