Friday, September 28, 2018

திருநாவலூர்

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: விழுப்புரம் 

திருக்கோயில்: அருள்மிகு பக்தஜனேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

விழுப்புரம் மற்றும் திருக்கோயிலூரிலிருந்து சுமார் 25 கி.மீ தூரத்திலும், திருவெண்ணெய்நல்லூர்; பண்ருட்டி மற்றும் உளுந்தூர் பேட்டையிலிருந்து சுமார் 18 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருநாவலூர். சுந்தர மூர்த்தி நாயனாரின் அவதாரத் தலம்,  மூலக் கருவறையில் சிவமூர்த்தி பக்தஜனேஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார். சுக்கிரன் பூசித்த மற்றொரு சிவலிங்கத் திருமேனியை ஆலயத்தின் உட்பிரகாரச் சுற்றில் தரிசிக்கலாம். சுந்தரரின் தேவாரத் திருப்பதிகம் பெற்ற சீர்மை பொருந்திய தலம்.   

இரண்டாம் பிரகாரத்தை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறத்தில், திருப்புகழ் தெய்வமான நம் முருகப் பெருமான் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களுமாய், இரு தேவியர்களும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிநாதர் இம்மூர்த்திக்கு 'கோல மறையொத்த' என்று துவங்கும் திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார். 

வெளிப்பிரகாரத்தில் தனிக்கோயில்களில் மனோன்மணி அம்மை மற்றும் வரதராஜப் பெருமாள் ஆகியோர் எழுந்தருளி இருக்கின்றனர். மேலும் மற்றொரு தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் சுந்தர மூர்த்தி நாயனார் சங்கிலி மற்றும் பரவை நாச்சியாருடன், திருக்கரங்களில் தாளத்துடன் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார். ஆலயம் அமைந்துள்ள அதே திருவீதியில் சுந்தரருக்கென பிரமாண்டமான கற்கோயிலொன்று இரு வருடங்களுக்கு முன் புதுக்கப் பெற்றுள்ளது, அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம். 

(Google Maps: Sri Bhakthajanewarar Temple, Tirunavalur, Tamil Nadu 607204, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தானதன தத்த தானதன தத்த
     தானதன தத்த ...... தனதான

கோல மறையொத்த மாலை தனிலுற்ற
     கோரமதன் விட்ட ...... கணையாலே

கோதில தருக்கள் மேவுபொழிலுற்ற
     கோகில மிகுத்த ...... குரலாலே

ஆலமென விட்டு வீசுகலை பற்றி
     ஆரழல் இறைக்கும் ...... நிலவாலே

ஆவிதளர்வுற்று வாடும்எனை நித்தம் 
     ஆசைகொடணைக்க ...... வரவேணும்

நாலுமறை கற்ற நான்முகன்உதித்த
     நாரணனும் மெச்சு ...... மருகோனே

நாவலர் மதிக்க வேல்தனையெடுத்து
     நாகமற விட்ட ...... மயில்வீரா

சேலெனும் விழிச்சி வேடுவர் சிறுக்கி
     சீரணி தனத்தில்  ...... அணைவோனே

சீதவயல் சுற்று நாவல்தனிலுற்ற
     தேவர்சிறை விட்ட ...... பெருமாளே..

(2020 அக்டோபர் மாதம் மேற்கொண்டிருந்த எங்கள் தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட படங்கள் இவை) 

No comments:

Post a Comment