(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: கடலூர்
திருக்கோயில்: அருள்மிகு சிஷ்டகுருநாதர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், சுந்தரர் (தேவாரம்)
தலக் குறிப்புகள்:
கடலூர் மாவட்டத்தில், விழுப்புரத்திலிருந்து 22 கி.மீ தூரத்திலும், திருவாமூரிலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது திருத்துறையூர். சுந்தரர் தவநெறியினை வேண்டிப் பெற்ற தேவாரத் தலம், நாரதர்; வசிஷ்டர்; ஸ்ரீராமர்; பீமன்; சூரியன்; அகத்தியர் ஆகியோர் பூசித்து அருள் பெற்ற தலம். மூல மூர்த்தி சிஷ்டகுருநாதர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை சிவலோகநாயகி.
வெளிப் பிரகாரச் சுற்றின் துவக்கத்திலேயே திருப்புகழ் தெய்வமான வேலாயுதக் கடவுள் ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கென 'ஆரத்தன பாரத் துகில்', 'வெகுமாய விதத்துருவாகிய' எனும் இரு திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.
(Google Maps: NNT015-Thiruthuraiyur Lord Shiva Temple, Thiruthuraiyur, Tamil Nadu 607205, India)
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 2.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தானத்தன தானத்தன தானத்தன தானத்தன
தானத்தன தானத்தன ...... தனதான
ஆரத்தன பாரத்துகில் மூடிப்பலர் காணக் கையில்
யாழ்வைத்திசை கூரக்குழல் ...... உடைசோர
ஆகப்பனி நீரப்புழு கோடக்குழை ஆடப்!பிரை
யாசப்படுவார் பொட்டணி ...... சசிநேர்வாள்
கூரக்கணை வேல்கண்கயல் போலச்சுழல்வார் சர்க்கரை
கோவைக்கனி வாய்பற்கதிர் ஒளிசேரும்
கோலக்குயிலார் பட்டுடை நூல்ஒத்திடையார்சித்திர
கோபச்செயலார் பித்தர்கள் உறவாமோ
பூரித்தன பாரச்சடை வேதக்குழலாள் பத்தர்கள்
பூசைக்கியல்வாள் பத்தினி ...... சிவகாமி
பூமிக்கடல் மூவர்க்கும் முனாள் பத்திரகாளிப் புணர்
போகர்க்குபதேசித்தருள் ...... குருநாதா
சூரக் குவடாழித் தவிடாய்முட்ட சுரார்உக்கிட
சோர்விற்கதிர் வேல்விட்டருள் ...... விறல்வீரா
தோகைச் செயலாள்பொற் பிரகாசக் குறமான் முத்தொடு
சோதித் துறையூர் நத்திய ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன
தனதான தனத்தன தானன ...... தனதான
வெகுமாய விதத்துருவாகிய
திறமே பழகப்படு சாதக
விதமேழ் கடலில் பெரிதாம்அதில் ...... சுழலாகி
வினையான கருக்குழியாம் எனும்
அடையாளம் உளத்தினின் மேவினும்
விதியாரும் விலக்கஒணாதெனும்...... முதியோர்சொல்
தகவாம்அதெனைப் பிடியா மிடை
கயிறாலும் இறுக்கி மகாகடம்
சலதாரை வெளிக்கிடையே செலஉருவாகிச்
சதிகாரர் விடக்கதிலே திரள்
புழுவாக நெளித்தெரியே பெறு
மெழுகாக உருக்கும் உபாதிகள் ...... தவிர்வேனோ
உககால நெருப்பதிலே புகை
எழவேகு முறைப்படு பாவனை
உறவே குகையில் புடமாய்விட ...... வெளியாகி
உலவா நரகுக்கிரையாம் அவர்
பலவோர்கள் தலைக்கடை போயெதிர்
உளம் மாழ்கி மிகக்குழைவாகவும் உறவாடித்
தொகலாவதெனக்கினி தானற
வளமாக அருட்பத மாமலர்
துணையே பணியத் தருவாய் பரி மயில்வேலா
துதிமாதவர் சித்தர் மகேசுரர்
அரிமால் பிரமர்க்கருள் கூர்தரு
துறையூர் நகரில் குடியாய்வரு ...... பெருமாளே.
(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment