Friday, September 28, 2018

திருவாமாத்தூர்

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: விழுப்புரம் 

திருக்கோயில்: அருள்மிகு முத்தாம்பிகை சமேத அபிராமேஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் சுவாமிகள் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

விழுப்புரத்திற்கு மிக அருகில் அமைந்துள்ள அற்புதத் தலம், தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சுந்தரர் காஞ்சியில் இடக்கண் பார்வை பெற்ற பின்னர் தொண்டை நாட்டிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வழியில் இத்தலத்தினைத் தரிசித்துப் போற்றியுள்ளார், பசுக்கள் பூசித்துப் பேறு பெற்றுள்ள தலம், ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி பூசித்து வணங்கியதால் மூல மூர்த்தி அபிராமேஸ்வரர் எனும் அற்புதத் திருநாமத்தில், பிரமாண்டமான திருமேனியோடு நெடிதுயர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார், 'இராமனும் வழிபாடு செய் ஈசனை' என்றிதனைப் பதிவு செய்கின்றார் அப்பர் அடிகள்.

மிகப் பிரமாண்டமான திருக்கோயில் வளாகம், வெளிபிரகாரத்தினை வலம் வருகையில் முதலில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தியின் திருச்சன்னிதியினைத் தரிசித்து மகிழலாம், பிரத்யட்சத் திருக்கோலம். பின்னர் மேலும் முன்னேறிச் செல்கையில், மூலக் கருவறையின் பின்புறம், வலதுபுறத்தில் தனிச்சன்னிதியில் திருப்புகழ் தெய்வம் ஆறு திருமுகங்களோடு, இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான், இத்தலத்திற்கு 'மாதை' என்ற திருப்பெயருமுண்டு, அருணகிரிநாதர் இம்மூர்த்திக்கென அருளியுள்ள 4 திருப்பாடல்களில் 'மாதையில் விறல்மயில் மீது மேவிய பெருமாளே' என்று போற்றுகின்றார்.

சிவாலய வளாகத்திற்கு வெளியே மற்றுமொரு பெரிய திருக்கோயிலில் உமையன்னை முத்தாம்பிகையாய் எழுந்தருளி இருக்கின்றாள், அவசியம் தரிசித்துப் போற்றி உய்வு பெற வேண்டிய திருத்தலம்.

(Google Maps: Sri Abirameshvarar Temple, Thiruvamathur, Tamil Nadu 605402, India)

(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 4.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


திருப்பாடல் 1:
தனதன தான தானன, தனதன தான தானன
     தனதன தான தானன ...... தனதான

அடல்வடி வேல்கள் வாளிகள் அவைவிடஓடல் நேர்படும் 
     அயில் விழியாலும் மாலெனும் ..... !மதவேழத்

தளவிய கோடு போல்வினை அளவளவான கூர்முலை
     அதின்முகம் மூடும்ஆடையின் ...... அழகாலும் 

துடியிடையாலும் வாலர்கள் துயர்வுற மாயமாய்ஒரு
     துணிவுடன்ஊடு மாதர்கள் ...... துணையாகத்

தொழுதவர் பாதம்ஓதி உன் வழிவழி யான்எனாஉயர்
     துலையலை மாறு போல்உயிர் ...... சுழல்வேனோ

அடவியினூடு வேடர்கள் அரிவையொடாசை பேசியும் 
     அடிதொழுதாடும் ஆண்மையும் ...... உடையோனே

அழகிய தோள்ஈராறுடை அறுமுக வேளெனாஉனை
     அறிவுடன்ஒதும் மாதவர் ...... பெருவாழ்வே

விடையெறும் ஈசர் நேசமும் மிகநினைவார்கள் தீவினை
     உகநெடிதோட மேல்அணைபவர் மூதூர்

விரைசெறி தோகை மாதர்கள் விரகுடனாடும் மாதையில்
     விறல்மயில் மீது மேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 2:
தந்த தத்தன தானாதன தந்த தத்தன தானாதன
     தந்த தத்தன தானாதன ...... தனதான

கண்கயல்பிணை மானோடு உறவுண்டெனக் கழை தோளானது
     நன்கமைக்கினம் ஆமாமென ...... முகையான

கஞ்சம் ஒத்தெழு கூர்மாமுலை குஞ்சரத்திரு கோடோடுற
     விஞ்சு மைப்பொரு கார்கோதை கொடு உயர்காலன்

பெண்தனக்குள கோலாகலம் இன்றெடுத்திளையோர் ஆவிகள்
     மன்பிடிப்பது போல் நீள் வடிவுடை மாதர்

பின்பொழித்திடு மாமாயையில் அன்பு வைத்தழியாதே உறு
     கிஞ்சில்அத்தனை தாள்பேணிட ...... அருள்தாராய்

விண் தனக்குறவானோன் உடல் கண்படைத்தவன் வேதாவொடு
     விண்டு வித்தகன் வீழ்தாளினர் ...... விடையேறி

வெந்தனத்துமையாள் மேவிய சந்தனப்புய மாதீசுரர்
     வெங்கயத்துரியார் போர்வையர் ...... மிகுவாழ்வே

தண்புடைப்பொழில் சூழ்மாதையில் நண்பு வைத்தருள் !தாராதல
     மும் கிளைத்திட வானீள் திசையொடு தாவித்

தண்டரக்கர்கள் கோகோஎன விண்டிடத் தட மாமீமிசை
     சண்ட விக்ரம வேலேவிய ...... பெருமாளே.

திருப்பாடல் 3:
தனதன தானத் தானன, தனதன தானத் தானன
     தனதன தானத் தானன ...... தனதான

கருமுகில் போல் மட்டாகிய அளகிகள் தேனில் பாகொடு
     கனிஅமுதூறித் தேறிய ...... மொழிமாதர்

கலவிகள் நேர்ஒப்பாகிகள் மதனிகள் காமக் க்ரோதிகள்
     கனதன பாரக் காரிகள் ...... செயலோடே

பொருகயல் வாளைத் தாவிய விழியினர் சூறைக்காரிகள்
     பொருள் அளவாசைப் பாடிகள் ...... புவிமீதே

பொதுவிகள் போகப் பாவிகள் வசம்அழிவேனுக்கோர்அருள்
     புரிவது தானெப்போதது ...... புகல்வாயே

தருவடு தீரச் சூரர்கள் அவர்கிளை மாளத் தூளெழ
     சமனிலையேறப் பாறொடு ...... கொடிவீழத்

தனதன தானத் தானன எனஇசை பாடிப் பேய்பல
     தசையுண வேல்விட்டேவிய ...... தனிவீரா

அரிதிரு மால்சக்ராயுதன் அவன்இளையாள் முத்தார்நகை
     அழகுடையாள் மெய்ப்பால்உமை ...... அருள்பாலா

அரவொடு பூளைத் தார்மதி அறுகொடு வேணிச் சூடிய
     அழகர்தென் மாதைக்கே உறை ...... பெருமாளே.

திருப்பாடல் 4:
தான தனதன தனதன தனதன
     தான தனதன தனதன தனதன
          தான தனதன தனதன தனதன ...... தனதான

கால முகிலென நினைவு கொடுருவிலி
     காதி அமர்பொரு கணையென வடுவகிர்
          காணும் இதுவென இளைஞர்கள் விதவிடும் ...... கயலாலும் 

கானம்அமர்குழல் அரிவையர் சிலுகொடு
     காசின்அளவொரு தலைஅணும் மனதினர்
          காமம்இவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலும் 

சால மயல்கொடு புளகித கனதன
     பாரம்உறஅண முருகவிழ் மலரணை
          சாயல் தனில்மிகு கலவியில் அழிவுறும் ...... அடியேனைச்

சாதி குலமுறு படியினின் முழுகிய
     தாழ்வதறஇடை தருவன வெளியுயர்
          தாள் அதடைவது தவமிக நினைவது ...... தருவாயே

வேலை தனில்விழி துயில்பவன் அரவணை
     வேயின் இசையது நிரைதனில் அருள்பவன்
          வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே

வேறு வடிவுகொடுறி வெணெய் தயிரது
     வேடை கெடஅமுதருளிய பொழுதினில்
          வீசு கயிறுடன் அடிபடு சிறியவன் ......அதிகோப

வாலியுடன்எழு மரம்அற நிசிசரன்
     வாகு முடிஒருபதுகரம் இருபது
          மாள ஒருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே

வாசம் உறுமலர் விசிறிய பரிமள
     மாதை நகர்தனில் உறையும்ஓர்அறுமுக
          வானில்அடியவர் இடர்கெட அருளிய ...... பெருமாளே.

(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)



No comments:

Post a Comment