Saturday, September 29, 2018

சோமநாதன் மடம் (புத்தூர்):

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: திருவண்ணாமலை

திருக்கோயில்: அருள்மிகு அட்சரவல்லி அன்னை சமேத ஸ்ரீவித்யாபதீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

ஆற்காட்டிலிருந்து ஆரணி செல்லும் மார்க்கத்தில், ஆரணியிலிருந்து 11 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது தாமரைப்பாக்கம் எனும் சிற்றூர். அவ்வூரினுள் 5 கி.மீ பயணித்தால், பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும் நெருக்கமான வயல்வெளிகளுக்கு நடுவில், ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ளது 'புத்தூர் ஸ்ரீவித்யாபதீஸ்வரர் திருக்கோயில்'. வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களின் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது இத்தலம்.

சோமநாதர் என்பார் 'அருணகிரிநாதரின் சமகாலத்தில் வாழ்ந்து வந்த தவசீலர்', திருவண்ணாமலையில் எழுந்தருளியுள்ள சிவமூர்த்தியை இஷ்ட தெய்வமாகக் கொண்டு புத்தூரில் வசித்து வந்த சோமநாதர் அவ்வூரிலேயே சிறு மடமொன்றினை அமைத்துச் சிவபெருமானோடு சேர்த்து ஆறுமுகக் கடவுளையும் நியமத்துடன் பூசித்து வந்துள்ளார். இவரின் காலத்திலேயே இவரது பெயரைக் கொண்டே 'சோமநாத மடம்' என்று இத்தலம் பிரசித்தமாக அறியப்பட்டு வந்துள்ளது. 


திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனதனன தான தான தனதனன தான தான
     தனதனன தான தான ...... தனதான

ஒருவழிபடாது மாயை இருவினைவிடாது நாளும் 
     உழலும் அநுராக மோக... அநுபோகம்

உடலும் உயிர்தானுமாய் உனுணர்விலொரு கால்இராத
     உளமும் நெகிழ்வாகுமாறு... !அடியேனுக்

கிரவுபகல் போனஞான பரமசிவ யோகதீரம் 
     என மொழியும் வீசுபாச... கனகோப

எமபடரை மோதுமோன உரையில்உபதேச வாளை
     எனதுபகை தீரநீயும்... அருள்வாயே

அரிவையொரு பாகமான அருணகிரிநாதர் பூசை
     அடைவு தவறாதுபேணும்... அறிவாளன்

அமணர்குல காலனாகும் அரியதவ ராஜராஜன்
     அவனிபுகழ் சோமநாதன்... மடமேவும்

முருகபொரு சூரர்சேனை முறியவட மேருவீழ
     முகரசல ராசிவேக... முனிவோனே

மொழியும் அடியார்கள் கோடி குறை கருதினாலும் வேறு
     முனியஅறியாத தேவர்... பெருமாளே.

(2019 ஜனவரி மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment