(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: விழுப்புரம்
திருக்கோயில்: அருள்மிகு அன்னை கமலேஸ்வரி சமேத திருநாதீஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
விழுப்புர மாவட்டத்தில், விழுப்புரத்திலிருந்து சுமார் 60 கி.மீ தொலைவிலும், செஞ்சியிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், வளத்தி எனும் சிற்றூரிலிருந்து 3 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது தேவனூர் திருநாதீஸ்வரர் திருக்கோயில். சுந்தரர் தேவாரத்தில் 'எங்கள் பிரானன் உறையும் திருத்தேவனூர்' என்று குறிக்கப் பெற்று 'தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கின்றது.
சோழர்கள்; பாண்டியர்கள்; நாயக்க மன்னர்கள் என்று வழிவழியாய்ப் பரமாரிக்கப் பெற்றுத் திருப்பணி கண்டு வந்துள்ள திருத்தலம், பிற்காலச் சோழர்களின் கட்டிடக் கலையைப் பறைசாற்றும் விதமாய் விளங்கி வந்த பிரமாண்டமான இக்கற்கோயில் பின்னாளில் ஆற்காட் நவாபிற்கும் இராஜ தேசிங்கிற்கும் நடந்தேறிய போரில் முழுவதுமாய் கொள்ளையடிக்கப்பட்டுத் திருக்கோயிலும் பெருமளவு சிதைக்கப் பெற்றது. எண்ணிறந்த ஆண்டுகள் பூஜையின்றி சிதைந்திருந்த இவ்வாலயம் மத்திய அரசின் உதவியோடு புதுப்பிக்கப் பெற்று 2016ஆம் ஆண்டு குடமுழுக்கு கண்டு மிளிர்கின்றது.
சுற்றிலும் பசுமையான வயல் வெளிகளாலும், மலைப்பகுதிகளாலும் சூழப்பெற்றுள்ள ஏகாந்தமான திருச்சூழலில் அமைந்துள்ளது இத்திருக்கோயில், மூலமூர்த்தி திருநாதீஸ்வரர், அம்பிகை கமலேஸ்வரி. உட்ப்ரகாரச் சுற்றில், மூலக் கருவறையின் பின்புறம், வலதுபுறத்தில் அழகே ஒரு திருவடிவாய் திருப்புகழ் தெய்வமான நம் முருகக் கடவுள் நின்ற திருக்கோலத்தில், திருமுகத்தில் புன்முறுவலுடன், இரு தேவியரும் உடனிருக்க ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான், அருகிலேயே வணங்கிய திருக்கோலத்தில் அருணகிரிநாதர் எழுந்தருளி இருக்கின்றார்.
அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு 3 திருப்புகழ் திருப்பாடல்களை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.
(குறிப்பு: இத்திருக்கோயிலின் படங்கள் கீழ்க்குறித்துள்ள திருப்புகழ் திருப்பாடல்களுக்குப் பின்னர் இறுதியில் தொகுக்கப் பெற்றுள்ளது).
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 3.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
திருப்பாடல் 1:
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
ஆறுமாறும் அஞ்சுமஞ்சும் ஆறுமாறும் அஞ்சுமஞ்சும்
ஆறுமாறும் அஞ்சுமஞ்சும் ...... அறுநாலும்
ஆறுமாய சஞ்சலங்கள் வேறதா விளங்குகின்ற
ஆரணாகமம் கடந்த ...... கலையான
ஈறு கூறரும்பெரும் சுவாமியாய் இருந்த நன்றி
ஏது வேறியம்பலின்றி ...... ஒருதானாய்
யாவுமாய் மனம்கடந்த மோன வீடடைந்தொருங்கி
யான்அவா அடங்க என்று ...... பெறுவேனோ
மாறு கூறி வந்தெதிர்ந்த சூரர் சேனை மங்க வங்க
வாரி மேல் வெகுண்ட சண்ட ...... விததாரை
வாகை வேல கொன்றை தும்பை மாலை கூவிளம் கொழுந்து
வால சோமன்நஞ்சு பொங்கு ...... பகுவாய
சீறு மாசுணம் கரந்தை ஆறு வேணி கொண்ட நம்பர்
தேசிகா கடம்பலங்கல் ...... புனைவோனே
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு
தேவனூர் விளங்க வந்த ...... பெருமாளே.
திருப்பாடல் 2:
தான தான தந்த தந்த, தான தான தந்த தந்த
தான தான தந்த தந்த ...... தனதான
தாரகாசுரன் சரிந்து வீழவேருடன் பறிந்து
சாதி பூதரம் குலுங்க ...... முதுமீனச்
சாகரோதைஅம் குழம்பி நீடு தீ கொளுந்த அன்று
தாரை வேல்தொடும் கடம்ப ...... மததாரை
ஆரவார உம்பர் கும்ப வாரணாசலம் பொருந்து
மானையாளும் நின்ற குன்ற ...... மறமானும்
ஆசை கூரு நண்ப என்றும் மாமயூர கந்த என்றும்
ஆவல் தீர என்று நின்று ...... புகழ்வேனோ
பாரமார் தழும்பர் செம்பொன் மேனியாளர் கங்கை வெண்!க
பால மாலை கொன்றை தும்பை ...... சிறுதாளி
பார மாசுணங்கள் சிந்து வார ஆரமென்படம்பு
பானல் கூவிளம் கரந்தை ...... அறுகோடே
சேரவே மணந்த நம்பர் ஈசனாரிடம் சிறந்த
சீதளாரவிந்த வஞ்சி ...... பெருவாழ்வே
தேவர் யாவரும் திரண்டு பாரின் மீது வந்திறைஞ்சு
தேவனூர் விளங்க வந்த ...... பெருமாளே
திருப்பாடல் 3:
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன
தான தானன தனனா தனதன ...... தந்ததான
காணொணாதது உருவோடருவது
பேசொணாதது உரையே தருவது
காணும் நான்மறை முடிவாய் நிறைவது ...... பஞ்சபூதக்
காய பாசம்அதனிலே உறைவது
மாய மாயுடல்அறியா வகையது
காயமானவர் எதிரே அவரென ...... வந்துபேசிப்
பேணொணாதது வெளியே ஒளியது
மாயனார்அயன் அறியா வகையது
பேத பேதமொடுலகாய் வளர்வது ...... விந்துநாதப்
பேருமாய் கலையறிவாய் துரிய!அ
தீதமானது வினையேன் முடிதவ
பேறுமாய்அருள் நிறைவாய் விளைவது ...... ஒன்றுநீயே
வீணொணாதென அமையாதசுரரை
நூறியேஉயிர் நமனீ கொளுவென
வேல்கடாவிய கரனே உமைமுலை ...... உண்டகோவே
வேத நான்முக மறையோனொடும் !விளை
யாடியே குடுமியிலே கரமொடு
வீற மோதின மறவா குறவர் குறிஞ்சியூடே
சேணொணாயிடு மிதண்மேல் அரிவையை
மேவியே மயல் கொள லீலைகள் செய்து
சேர நாடிய திருடா அருள்தரு ...... கந்தவேளே
சேரொணா வகை வெளியே திரியும் மெய்ஞ்
ஞான யோகிகள் உளமே உறைதரு
தேவனூர்வரு குமரா அமரர்கள் ...... தம்பிரானே
(2020 அக்டோபர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
Great News. One may not get in his life time such facts about the Temples that have been adored by Great Saints like Arunagirinaathar. We are gifted to have come to know of this. Muruga Saranam.
ReplyDelete