(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: கடலூர்
திருக்கோயில்: அருள்மிகு நர்த்தன வல்லபேஸ்வரர் திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: சுந்தரர் (தேவாரம்), அருணகிரிநாதர்,
தலக் குறிப்புகள்:
விருத்தாசலத்திலிருந்து 30 கி.மீ தொலைவிலும், எருக்கத்தம்புலியூரிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 10 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது கூடலையாற்றூர். சுந்தர மூர்த்தி நாயனாரால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. சுந்தரனார் முதுகுன்றம் செல்லும் வழியில் இத்தலத்தினைக் கடந்து செல்ல முனைகையில், இத்தல இறைவர் வேதியர் உருவில் தோன்றி எதிர்கொள்ள, சுந்தரர் முதுகுன்றத்தின் வழியினைக் கேட்க இறைவரோ 'கூடலையாற்றூருக்குச் செல்லும் வழியிது' என்று பிறிதொரு மார்க்கத்தினைக் காண்பித்து மறைகின்றார், திருவருளை வியந்து போற்றும் சுந்தரர் இத்தலத்திற்குச் சென்று வணங்கி மகிழ்ந்தார் என்பது வரலாறு.
-
வடியுடை மழுவேந்தி மதகரிஉரி போர்த்துப்
பொடியணி திருமேனிப் புரிகுழல் உமையோடும்
கொடியணி நெடுமாடக் கூடலையாற்றூரில்
அடிகள் இவ்வழிபோந்த அதிசயம் அறியேனே
ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள தலம், ஓரளவு பெரிதான ஆலய வளாகம். சிவமூர்த்தி நெறிகாட்டுறை நாதர்; நர்த்தன வல்லபேஸ்வரர் எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார், ஆச்சரியத் திருக்கோலம். அம்பிகை இருவேறு திருச்சன்னிதிகளில் பராசக்தி; ஞானசக்தி (புரிகுழல் நாயகி) எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றாள். வெளிப்பிரகாரத்தினை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறம் திருப்புகழ் நாயகனான நம் குமரக் கடவுள், ஆறு திருமுகங்கள்; பன்னிரு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்திக்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார். ஆலய வளாகத்திற்கு வெளியே, வலது புறத்தில் ஒரு சிறு சன்னிதியில் அகத்தியர் லோபா முத்திரை அம்மையோடு எழுந்தருளி இருக்கின்றார். அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்.
(Google Maps: Sri Narthana vallabeswarar aalayam. Koodalaiyathoor Shiva Temple, ThiruKoodalaiyathoor, Tamil Nadu 608702, India)
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன
தாத்ததனத் தாந்ததன தானதன தானதன ...... தந்ததான
வாட்டியெனைச் சூழ்ந்தவினை ஆசைய முவாசைஅனல்
மூட்டியுலைக் காய்ந்த மழுவாம்என விகாசமொடு
மாட்டியெனைப் பாய்ந்து கடவோடு அடமொடாடிவிடு ...... விஞ்சையாலே
வாய்த்த மலர்ச் சாந்து புழுகான பனிநீர்களொடு
காற்றுவரத் தாங்குவன மார்பிலணி ஆரமொடு
வாய்க்குமெனப் பூண்டழகதாக பவிசோடுமகிழ் ...... அன்புகூரத்
தீட்டுவிழிக் காந்தி மடவார்களுடன் ஆடிவலை
பூட்டிவிடப் போந்து பிணியோடு வலிவாதமென
சேர்த்துவிடப் பேர்ந்துவினை மூடிஅடியேனுன் உனதன்பிலாமல்
தேட்டமுறத் தேர்ந்தும் அமிர்தாமெனவெ ஏகிநமன்
ஓட்டிவிடக் காய்ந்துவரி வேதன்அடையாளம்அருள்
சீட்டுவரக் காண்டுநலி காலன் அணுகாநினருள் அன்புதாராய்
வேட்டுவரைக் காய்ந்து குறமாதை உறவாடிஇருள்
நாட்டவரைச் சேந்த கதிர்வேல் கொடமராடி சிறை
மீட்டமரர்க்காண்டவனை வாழ்க நிலையாக வைகும் ...... விஞ்சையோனே
வேற்றுருவில் போந்து மதுராபுரியில்ஆடி வைகை
ஆற்றின்மணல் தாங்கும் மழுவாளிஎன தாதைபுரம்
மேட்டை எரித்தாண்ட சிவலோகன் விடையேறிஇடமும் கொள்ஆயி
கோட்டுமுலைத் தாங்கும் இழையானஇடை கோடிமதி
தோற்றமெனப் போந்தஅழகான சிவகாமிவிறல்
கூற்றுவனைக் காய்ந்த அபிராமி மனதாரஅருள் ...... கந்தவேளே
கூட்டுநதித் தேங்கிய வெளாறு தரளாறுதிகழ்
நாட்டிலுறைச் சேந்த மயிலா வளி தெய்வானையொடெ
கூற்றுவிழத் தாண்டி எனதாகமதில் வாழ்குமர ...... தம்பிரானே
(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment