Thursday, September 27, 2018

திருவரத்துறை

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: கடலூர்

திருக்கோயில்: அருள்மிகு தீர்த்தபுரீஸ்வரர் திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் (தேவாரம்), அப்பர் (தேவாரம்), சுந்தரர் (தேவாரம்)


தலக் குறிப்புகள்

விருத்தாசலத்திலிருந்து 24 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது திருநெல்வாயில் அரத்துறை (தற்கால வழக்கில் திருவரத்துறை). தேவார மூவராலும் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது. தம்முடைய பிஞ்சுப் பொற்பாதங்கள் நோக இத்தலம் நோக்கிப் பயணித்து வரும் ஞான சமபந்த மூர்த்திக்கு இத்தல இறைவர் முத்துச் சிவிகை; மணிக்குடை; முத்துச் சின்னங்கள் ஆகியவற்றை அளித்து அருள் புரிந்த வரலாற்றினைப் பெரிய புராணம் பதிவு செய்கின்றது. 
-
(ஞான சம்பந்தர் தேவாரம்):
எந்தை ஈசன் எம்பெருமான் ஏறமர் கடவுள் என்றேத்திச்
சிந்தை செய்பவர்க்கு அல்லாற் சென்று கைகூடுவதன்றால்
கந்த மாமலர் உந்திக் கடும் புனல் நிவா மல்கு கரைமேல்
அந்தண் சோலை நெல்வாயில் அரத்துறை அடிகள்தம் அருளே!!

ஏகாந்தமான சூழலில் அமையப் பெற்றுள்ள திருத்தலம், சிவமூர்த்தி தீர்த்தபுரீஸ்வரர் எனும் திருநாமத்தில் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை திரிபுர சுந்தரி. வெளிப்பிரகாரச் சுற்றின் பின்புறம் திருப்புகழ் தெய்வமான கந்தக் கடவுள், ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களுமாய், இரு தேவியரும் உடனிருக்க, நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்திக்கென ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார்,

(Google Maps: Shri Theerthapureeshwarar Temple, Thiruvattathurai, Tamil Nadu 606111, India)

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தத்தனத் தனன தத்தனத்
     தனன தத்தனத் ...தனதான

கறுவி மைக்கணிட்டு இனிதழைத்தியல் 
     கவிசொலிச் சிரித்துறவாடிக்

களவு வித்தை இட்டுளம் உருக்கிமுன் 
     கருதி வைத்த வைப்பவை சேரத்

தறுகணில் பறித்திரு கழுத்துறத்
     தழுவி நெக்கு நெக்குயிர் சோரச்

சயன மெத்தையில் செயல்அழிக்கும்இத்
     தருணிகட்கு அகப்படலாமோ

பிறவியைத் தணித்தருளும் நிட்களப்
     பிரம சிற்சுகக் ...... கடல்மூழ்கும்

பெருமுனித் திரள் பரவு செய்ப்பதிப்
     ப்ரபல கொச்சையில் ...... சதுர்வேதச்

சிறுவ நிற்கருள் கவிகை நித்திலச்
     சிவிகையைக் கொடுத்தருள் ஈசன்

செகதலத்தினில் புகழ்படைத்த மெய்த்
     திருவரத்துறைப் ...... பெருமாளே

(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)

No comments:

Post a Comment