(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)
பிரிவு: நடு நாடு
மாவட்டம்: கடலூர்
திருக்கோயில்: அருள்மிகு நீலகண்டேஸ்வரர் (குமாரசுவாமி) திருக்கோயில்
தல வகை: சிவத்தலம்
பாடிய அருளாளர்கள்: திருஞானசம்பந்தர் (தேவாரம்), அருணகிரிநாதர்
தலக் குறிப்புகள்:
கடலூரிலிருந்து 73 கி.மீ தூரத்திலும், சிதம்பரத்திலிருந்து 45 கி.மீ தூரத்திலும், விருத்தாசலத்திலிருந்து 13 கி.மீ தொலைவிலும், ஸ்ரீமுஷ்ணத்திலிருந்து 7 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது திருஎருக்கத்தம்புலியூர் (தற்கால வழக்கில் இராஜேந்திர பட்டினம்). திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரின் அவதாரத் தலமாதலால் அருணகிரியார் இத்தலத்தினை அவரின் திருப்பெயரினைக் கொண்டே 'யாழ்ப்பாணாயன் பட்டினம்' என்று போற்றுகின்றார், புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் பூசித்த தலங்களுள் ஒன்று, ஞானசம்பந்த மூர்த்தியால் பாடல் பெற்றுள்ள சிறப்புப் பொருந்தியது.
நகரங்களின் ஆரவாரம் மற்றும் வாகன நெரிசல்கள் ஏதுமில்லாத மிகவும் ஏகாந்தமான திருச்சூழலில் அமைந்துள்ள திருத்தலம், அருகிலேயே அமைந்துள்ள பெரியதொரு ஆலயத் திருக்குளம் தலத்திற்கு மேலும் அழகு சேர்க்கின்றது. ஆலய நுழைவிலேயே தனிச்சன்னிதியில் எழுந்தருளியுள்ள திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனாரைத் தரிசித்துப் பணிகின்றோம், மூலக் கருவறையில் சிவமூர்த்தி 'நீலகண்டேஸ்வரர்; குமராசுவாமி; சுவாதர்க்கவனேஸ்வரர்' எனும் திருநாமங்களில் எழுந்தருளி இருக்கின்றார், அம்பிகை நீலமலர்க்கண்ணி; வீராமுலையம்மை.
வெளிப்பிரகாரத்தினை வலம் வருகையில், மூலக் கருவறையின் பின்புறம் திருமுறைக்குப் பண்ணிசைத்த, பாணர் மரபில் தோன்றிய வள்ளியம்மையைத் தரிசித்து மகிழலாம், அருகில் மற்றுமொரு திருச்சன்னிதியில் நால்வர் பெருமக்களோடு, திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்; அவர்தம் திருத்துணைவியார் மதங்க சூளாமணியார் ஆகியோரோடு சேக்கிழார் அடிகளையும் தரிசித்துப் போற்றலாம். அடுத்து திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் ஒரு திருமுகம்; நான்கு திருக்கரங்களுமாய், நின்ற திருக்கோலத்தில், இரு தேவியரும் உடனிருக்க ஆச்சரியமாய் எழுந்தருளி இருக்கின்றான். அருணகிரியார் இம்மூர்த்திக்கு ஒரு திருப்புகழ் திருப்பாடலை அருளியுள்ளார், அவசியம் தரிசித்துப் பயன்பெற வேண்டிய திருத்தலம்,
திருப்புகழ் பாடல்கள்:
இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.
(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது):
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன
தாத்தா தானம் தத்தன தனதன ...... தனதான
பூத்தார் சூடும் கொத்தலர் குழலியர்
பார்த்தால் வேலும் கட்கமும் மதன்விடும்
போர்க்கார் நீடும் கண்சரமொடு நமன் ...... விடுதூதும்
போற்றாய் நாளும் கைப்பொருள் உடையவர்
மேல்தாளார்தம் பற்றிடு ப்ரமையது
பூட்டா மாயம் கற்ற மைவிழியினர் அமுதூறல்
வாய்த்தார் பேதம் செப்புபொய் விரகியர்
நூற்றேய் நூலின் சிற்றிடை இடர்பட
வாள்தாய் வீசும் கர்ப்புர ம்ருகமதம் ...... அகிலாரம்
மாப்பூணாரம் கச்சணி முலையினர்
வேட்பூணாகம் கெட்டெனை உனதுமெய்
வாக்கால் ஞானம் பெற்றினி வழிபட ...... அருளாயோ
ஆத்தாள் மால் தங்கைச்சி கனிகை உமை
கூத்தாடாநந்தச் சிவை திரிபுரை
ஆள்பேய் பூதம் சுற்றிய பயிரவி ...... புவநேசை
ஆக்கா யாவும் பற்றியெ திரிபுற
நோக்கா ஏதும் செற்றவள் !திருவிளை
யாட்டால்ஈசன் பக்கமதுறைபவள் ...... பெறுசேயே
ஏத்தா நாளும் தர்ப்பண செபமொடு
நீத்தார் ஞானம் பற்றிய குருபர
யாப்பாராயும் சொற்றமிழ் அருள்தரு ...... முருகோனே
ஏற்போர் தாம்வந்திச்சையின் மகிழ்வொடு
வாய்ப்பாய் வீசும் பொற்ப்ரபை நெடுமதிள்
யாழ்ப்பாணாயன் பட்டினம் மருவிய ...... பெருமாளே.
(2020 நவம்பர் மாதம் சென்றிருந்த தலயாத்திரையின் பொழுது எடுக்கப்பட்ட காட்சிகள் இவை)
No comments:
Post a Comment