Saturday, September 29, 2018

தமனியப் பதி (பொன்னூர்)

(நடு நாட்டுத் திருப்புகழ் தலங்கள்)


பிரிவு: நடு நாடு

மாவட்டம்: திருவண்ணாமலை

திருக்கோயில்: அருள்மிகு பராசரேஸ்வரர் (பிரம்மேஸ்வரர்) திருக்கோயில்

தல வகை: சிவத்தலம்

பாடிய அருளாளர்கள்: அருணகிரிநாதர்


தலக் குறிப்புகள்:

திருவண்ணாமலை மாவட்டத்தில், வந்தவாசியிலிருந்து 10 கி.மீ பயணத் தொலைவில் அமைந்துள்ளது பொன்னூர். அருணகிரிப் பெருமானால் 'தமனியப் பதி' என்று போற்றப் பெறும் இத்தலம் சுந்தரர் தேவாரத்தில் குறிக்கப் பெற்று தேவார வைப்புத் தலமாகவும் திகழ்கின்றது, 

தென்னூர் கைம்மைத் திருச்சுழியல்திருக்கானப்பேர்
பன்னூர் புக்குறையும் பரமற்கிடம் பாய்நலம்
என்னூர் எங்கள்பிரான் உறையும் திருத்தேவனூர்
பொன்னூர் நாட்டுப் பொன்னூர் புரிசைநாட்டுப் புரிசையே 

ஓரளவு விசாலமான ஆலய வளாகம், பராசர முனிவரும் நான்முகக் கடவுளும் பூசித்துப் பேறு பெற்றுள்ளதால் இத்தலத்துறை சிவமூர்த்தி பராசரேச்வரர், திருப்பிரமீசர் எனும் திருநாமங்களில் அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றார் (தலக் கல்வெட்டுகளும் 'பராசரேச்வரம் உடைய நாயனார்', 'திருப்பிரமீசம் உடைய நாயனார்' என்றே குறிக்கின்றன). ஆலயத்தில் வைக்கப் பெற்றுள்ள தலபுராணப் பலகையில் மேற்குறித்துள்ள ஆதார பூர்வ திருநாமங்கள் காணப்பெறினும் ஆலய நுழைவாயில் வளைவில் 'திருக்காமேசுவரர் ஆலயம்' என்றே பொறிக்கப் பெற்றுள்ளது (பின்னால் வழக்கில் இத்திருநாமம் சேர்க்கப் பெற்றிருக்கலாம்).      

ஆலய வளாகத்திலேயே தனிக்கோயில் போன்றதொரு அமைப்பில் வரதராஜப் பெருமாள் இரு தேவியரும் உடனிருக்க அற்புதத் திருக்கோலத்தில் எழுந்தருளி இருக்கின்றார். 

திருப்புகழ் தெய்வமான நம் கந்தக் கடவுள் ஆறு திருமுகங்களுடன் மயில் மீதமர்ந்த திருக்கோலத்தில் அதி அற்புதமாய் எழுந்தருளி இருக்கின்றான் (இங்கு இருபுறமும் தேவியர் இல்லை), ஒவ்வொரு திருமுகத்திலும் அற்புதப் புன்முறுவலோடு கூடிய பேரழகுத் திருக்கோலம். அருணகிரிப் பெருமான் இம்மூர்த்திக்கு 1 திருப்பாடலை அருளிச் செய்துள்ளார், 

திருப்புகழ் பாடல்கள்:

இத்தலத்துக்கு கிடைத்துள்ள திருப்புகழ் பாடல்கள் 1.

(குறிப்பு: கீழ்க்குறித்துள்ள திருப்பாடல்கள் பாராயணம் புரிவதற்கு எளிதான முறையில், சந்தஓசை மாறாத வண்ணம், முறையாகப் பிரித்துத் தொகுக்கப் பெற்றுள்ளது): 


தனன தத்தன தனன தத்தன
     தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
     தனந்தந் தந்த தந்தா
தனன தத்தன தனன தத்தன
     தனந்தந் தந்த தந்தா ...... தனதனா தனனா
-
விலையறுக்கவும் முலைமறைக்கவும்
     மணம்துன்றும் செழுந்தார்
புனைமுகிற்குழல் தனைஅவிழ்க்கவும்
     விடம்கஞ்சம் சரம்சேர்
விழி வெருட்டவும் மொழி புரட்டவும்
     நிணம் துன்றும் சலம்பாய் ...... உதிரநீருடனே
-
வெளியில் நிற்கவும் வலிய முட்டரை
     எதிர்த்தும் பின்தொடர்ந்தே
இலைசுணப் பொடி பிளவெடுத்திடை
     திரும்பும் பண்பரன்றே
எனஉரைத்தவர் தமை வரப்பணி
     உடன் கொண்டன்புடன் போய் ...... சயன பாயலின்மேல்
-
கலை நெகிழ்க்கவும் மயல் விளைக்கவும்
     நயம் கொண்டங்கிருந்தே
குணுகியிட்டுள பொருள் பறித்தற
     முனிந்தங்கொன்று கண்டே
கலகமிட்டவர் அகலடித்தபின்
     வரும் பங்கங்குணங்கோர் ...... புதிய பேருடனே
-
கதைகள் செப்பவும் வல சமர்த்திகள்
     குணம் கண்டும் துளங்கா
மனிதனில்சிறு பொழுதும் உற்றுற
     நினைந்தும் கண்டுகந்தே
கடிமலர்ப்பதம் !அணுகுதற்கறி
     விலன் பொங்கும் பெரும் பாதகனை ஆளுவையோ
-
சிலைதனைக் கொடு மிகஅடித்திட
     மனம் தந்தந்தணன் !தா
மரை மலர்ப் பிரமனை நடுத்தலை
     அரிந்தும் கொண்டிரந்தே
திரிபுரத்தெரி புக நகைத்தருள்
     சிவன் பங்கங்கிருந்தாள் அருளு மாமுருகா
-
செருவிடத்தல கைகள் தெனத்தென
     தெனந்தெம் தெந்தெனந்தா
எனஇடக்கைகள் மணிகணப் பறை
     டிகுண்டிங்குண் டிகுண்டா
டிகுகுடிக்குகு டிகுகுடிக்குகு
     டிகுண்டிங்குண் டிகுண்டீ ...... என இராவணனீள்
-
மலையெனத் திகழ் முடிகள் பத்தையும் 
     இரண்டஞ்சொன்பதொன்றேய்
பணை புயத்தையும் ஒருவகைப்பட
     வெகுண்டம்பொன்றெறிந்தோன்
மதலை மைத்துன அசுரரைக்குடல்
     திறந்தங்கம் பிளந்தே ...... மயிலின்மேல் வருவாய்
-
வயல்களில் கயலின மிகுத்தெழு
     வரம்பின் கண்புரண்டே
பெருகயல்கொடு சொரியும் நித்தில
     நிறைந்தெங்கும் சிறந்தே
வரிசை பெற்றுயர் தமனியப்பதி
     இடம் கொண்டின்புறும்சீர் ...... இளைய நாயகனே.

No comments:

Post a Comment